• Sat. May 30th, 2026

24×7 Live News

Apdin News

அப்துல் ரஹீம்: ரூ.34 கோடி திரட்டி 20 ஆண்டுகள் செளதி சிறையில் இருந்த கேரள ஓட்டுநரை மீட்ட மக்கள்

Byadmin

May 30, 2026


காணொளிக் குறிப்பு, அப்துல் ரஹீம்

காணொளி: ரூ.34 கோடி திரட்டி 20 ஆண்டுகள் செளதி சிறையில் இருந்த கேரள ஓட்டுநரை மீட்ட மக்கள்

பிரசுரிக்கப்பட்டது

செளதி அரேபியா சிறையில் 20 ஆண்டுகள் இருந்த கேரளாவை சேர்ந்த அப்துல் ரஹீம் நாடு திரும்பியுள்ளார்.

குருதிப்பணத்தை வழங்கினால்தான் விடுவிக்கப்படுவார் என்ற சூழலில் பொதுமக்களே ரூ.34 கோடி ரூபாய் பணத்தை திரட்டி வழங்கியுள்ளனர்.

கோழிக்கோடு மாவட்டம் கோடம்புழாவை சேர்ந்த அப்துல் ரஹீம், 26 வயதில் வேலை தேடி செளதி அரேபியா சென்றார். அங்கு ஒரு செளதி குடும்பத்தில் ஓட்டுநராகவும் பராமரிப்பாளராகவும் பணியாற்றி வந்த நிலையில் அவர் கவனித்து வந்த உரிமையாளரின் 15 வயது மாற்றுத்திறனாளி மகனின் உயிரிழப்பு கொலை வழக்காக ரஹீம் மீது பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ரஹீமுக்கு 2018ஆம் ஆண்டு மீண்டும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.

ஆனால் பின்னர் சிறுவனின் குடும்பத்தார் 1.5 கோடி செளதி ரியால் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.34 கோடி ‘குருதிப்பணம்’ பெற ஒப்புக்கொண்டனர்.

குற்றவாளியை மன்னிப்பதற்கும் மரண தண்டனையைத் தவிர்ப்பதற்கும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி இழப்பீடுதான் குருதிப் பணம் எனப்படுகிறது.

இதனையடுத்து இந்த விவகாரம் உலகம் முழுவதும் உள்ள மலையாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் “சேவ் அப்துல் ரஹீம்” என்ற இயக்கத்தின் மூலம் பெருமளவில் நிதி திரட்டப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த மே 26ஆம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ரஹீமுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் ஏற்கனவே 2006 முதல் சுமார் 20 ஆண்டுகள் சிறையில் இருந்ததால், தண்டனை காலம் நிறைவடைந்ததாகக் கருதி விடுதலை செய்யப்பட்டார்.

கேரளா, சௌதி அரேபியா, குருதிப் பணம்

பட மூலாதாரம், Photo Credit: Naseer

என்ன நடந்தது?

கோழிக்கோட்டில் ஆட்டோ ஓட்டுநராக இருந்த ரஹிம் ஓட்டுநராக வேலை செய்ய சௌதி அரேபியாவிற்குச் சென்றார்.

சௌதியில் வேலைக்குச் சேர்ந்த 20 நாட்களில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனையும் கவனித்துக் கொள்ள வேண்டிய கூடுதல் பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டது. இதற்கிடையே ரஹிம் அவருடைய முதலாளியின் மகனைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.

ரியாத்தில் உள்ள ஹைப்பர்மார்க்கெட் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்த போது காரின் பின் பக்க இருக்கையில் இருந்த அந்தச் சிறுவனின் சுவாசக் கருவி தற்செயலாக துண்டிக்கப்பட்டதாக ரஹிம் தெரிவித்தார்.

அதற்காக, சௌதி நீதிமன்றம் தண்டனை விதித்தது.

அப்துல் ரஹீம் சட்ட உதவிக் குழுவின் உறுப்பினரான அஷ்ரஃப் வெங்கட் பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், “2011-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது நாங்கள் அந்தக் குழந்தையின் தந்தையிடம் பேசத் தொடங்கினோம். 2024 ஜூனில் தான் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் அப்போதைய வெல்ஃபேர் அதிகாரி யூசுஃப் குன்னம்மால் உடன் இணைந்து குழு உறுப்பினர்களும் சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்தனர்.

இதனுடன் சிறுவனின் குடும்ப உறுப்பினர்களிடம் மன்னிப்பு பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடங்கப்பட்டன.

2019-ஆம் ஆண்டு அக்டோபரில் தான் வழக்கறிஞர் மூலம் தீவிரமான பேச்சுவார்த்தைகள் தொடங்கியதாக யூசுஃப் குன்னம்மால் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

மேலும் அவர், “அக்டோபர் 2023-இல் ஒரு பரஸ்பர ஒப்பந்தத்தை அடைந்தோம். அப்போது தான் குடும்பம் 15 மில்லியன் சௌதி ரியால் அல்லது இந்திய நாணய மதிப்பில் ரூ.34 கோடியை (அப்போதைய நிலவரப்படி) குருதிப் பணமாக பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டனர்.” என்றார்.

அவ்வளவு பெரிய தொகையை ரஹிமின் குடும்பத்தால் திரட்ட முடியாது என்பதை மனதில் வைத்து ‘அப்துல் ரஹீம் சட்ட உதவிக் குழு’ ஒரு தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது.

“முதல் சில வாரங்கள், நிதி திரட்டும் செயலி மூலமாக ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை மட்டுமே கிடைத்தது. பின்னர் திடீரென உள்ளூர் சேனல்கள், யூடியூபர்கள் மற்றும் சமூக ஊடக இன்ஃப்ளுயென்சர்கள் மூலமாக தகவல் பரவியது. கோவில் மற்றும் தேவாலயங்களில் இருந்தும் கூட எனது சகோதரனுக்கு நிதி திரட்ட அழைத்து விடுத்தனர்,” என்று ரஹிமின் சகோதரர் நசீர் தெரிவிக்கிறார்.

தொழிலதிபர் பாபி செம்மனூர் (செம்மனூர் ஜுவல்லர்ஸ்) ரூ.1 கோடி நிதி வழங்கியதுடன், மேலும் நிதி திரட்டுவதற்காக திருவனந்தபுரத்தில் பேருந்து ஓட்டினார்.

அரசியல் கட்சிகள் மற்றும் மலையாள திரையுலக பிரபலங்களும் இதற்கு பங்களிப்பு செய்தனர்.

கேரளா, சௌதி அரேபியா, குருதிப் பணம்

பட மூலாதாரம், Photo Credit: Naseer

படக்குறிப்பு, அப்துல் ரஹீமின் தாயார் ஃபாத்திமா

2024-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி நிதி திரட்டும் செயலி தொடங்கப்பட்டதாக அஷ்ரஃப் தெரிவிக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த தொகை ரூ.34 கோடியாக அதிகரித்தது. அது ரமலானின் 27வது நாள். அதனால் தான் மக்கள் நன்கொடை வழங்கியிருப்பார்கள். இந்த இலக்கை அடைந்த பிறகு விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்தது.” என்றார்.

அந்தச் சம்பவத்தை விவரித்த அஷ்ரஃப், “மக்கள் தொடர்ந்து அந்தக் கணக்கிற்கு நன்கொடை வழங்கினர். மொத்த தொகை ரூ.47 கோடி ஆக அதிகரித்தது. அந்த வங்கி கணக்கில் தற்போது ரூ.13 கோடி உள்ளது. ரஹிம் திரும்பி வந்த பிறகு அந்த கூடுதல் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை குழு முடிவு செய்யும்.” என்று தெரிவித்தார்.

அந்தக் குழு ‘குருதிப் பணத்தை’ வெளியுறவு அமைச்சகத்திடம் வழங்கியது. அவர்கள் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் வழங்கினர்.

“அதற்கான காசோலை ரியாத் ஆளுநர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. 2025-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது என்று நீதிமன்றம் அறிவித்தது,” என்கிறார் அஷ்ரஃப்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin