கடந்த மாதம் கேரள மாநிலம் கொச்சி அருகே, இரண்டு பெண்கள், ஒரு இளைஞர் உட்பட 3 பேர் உயிரிழந்த மினி கூப்பர் கார் விபத்து வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது கேரள உயர் நீதிமன்றம்.
விபத்து
கொச்சி அருகே உள்ள நெடும்பாசேரியில் அக்.11ம் தேதி அதிகாலை வேளையில், மதுபோதையில் அதிவேகமாக இயக்கப்பட்ட மினி கூப்பர் சொகுசு கார், முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தேவிகா (21), கோபிகா (22) மற்றும் இயாஸ் (21) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த காரை ஓட்டிச் சென்ற 19 வந்து சுஹைலை உள்ளூர் மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். காரில் இருந்த நினவ், அமீர் மற்றும் ஜோயல் ஆகியோர் தப்பிச் சென்ற நிலையில் அவர்களையும் கேரள காவல்துறை கைது செய்தது.
விபத்தை ஏற்படுத்திய இளைஞர், “என் அப்பா எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்” என்று திமிராகப் பேசியதாகவும் கூறப்பட்டது.
அதிர்ச்சியை ஏற்படுத்திய முதல் தகவல் அறிக்கை
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த வழக்கில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையும் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காரணம் விபத்துக்கு காரணமான குற்றவாளியை மக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளியான சுஹைலின் பெயர் அடையாளம் தெரியாதவர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் குற்றம் புரிந்தவர்களை காப்பாற்றும் எண்ணம் தங்களுக்கு இல்லை என கேரள அரசு தெரிவித்திருந்தது.
ஜாமின்
இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கும் பிணை வழங்கியுள்ளது கேரள உயர் நீதிமன்றம்.
சஜீவின் நண்பர்கள் உடனே விடுவிக்கப்படுவார்கள் என்றும், காரை ஓட்டிய முதல் குற்றவாளியான 19 வயது சஜீவ், 10 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் முடியும் விசாரணை
விசாரணையின் போது, இந்த விபத்து துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டுவிட்டனவா என்று கேட்டது.
அதற்கு, ஆதாரங்கள் இன்னும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், இரண்டு வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க முடியும் என்றும் அரசுத் தரப்பு கூறியது.
படிப்பு பாதிப்பு
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு, நால்வரும் 19 வயது மாணவர்கள் என்றும், நீண்டகால நீதிமன்றக் காவலில் இருந்ததால் அவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டது.
அரசுத் தரப்பு
கொல்லப்பட்ட மூவரும் இளம் வயதினர் என்றும், ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், தங்கள் குடும்பங்களின் நம்பிக்கையாக இருந்தவர்கள் என்றும் சுட்டிக்காட்டி, அரசுத் தரப்பு ஜாமின் மனுக்களை எதிர்த்தது.