பட மூலாதாரம், EPA/Shutterstock
“போர்க்களத்தில் தோல்வியடைந்ததைப் போலவே அமெரிக்கா மீண்டும் தோல்வியடையும்” என்று கூறி, ஹோர்மூஸ் நீரிணையை முற்றுகையிடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையை இரானிய செய்தித்தாள்களும் சமூக ஊடக ஆய்வாளர்களும் கேலி செய்துள்ளனர்.
பிப்ரவரி 28 அன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல்களைத் தொடுத்தன; இதற்கு இரான் பதிலடி கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 8-ஆம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே ஒரு தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவும் இரானும் ஒப்புக்கொண்டன. அந்தப் பேச்சுவார்த்தையில் இரு தரப்பினருக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.
இரான் தன்னை இந்த மோதலில் ஒரு வெற்றியாளராக முன்னிறுத்துகிறது.
ஏப்ரல் 12-ஆம் தேதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்ரூத் சோசியல் பக்கத்தில், ஹோர்மூஸ் நீரிணை வழியே பயணிக்கும் எந்தவொரு கப்பலையும் அமெரிக்க கடற்படை முற்றுகையிட தொடங்கும் என அறிவித்தார். வேறு நாடுகளும் இதில் ஈடுபடும் என்று அவர் மேலும் கூறினார்.
பின்னர், அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் கூறுகையில், தங்களின் படைகள் ஏப்ரல் 13 அன்று (இந்திய நேரப்படி இரவு 7.30 மணியளவில்) முற்றுகையை செயல்படுத்தத் தொடங்கும் என தெரிவித்தது.
இரானிய துறைமுகங்களுக்குள் நுழையும் அல்லது அதிலிருந்து வெளியேறும் அனைத்துக் கப்பல்களும் குறிவைக்கப்படும் என்றும், ஆனால் நீரிணை வாயிலாக இரான் அல்லாத பிற நாடுகளின் துறைமுகங்களுக்கு பயணிக்கும் கப்பல்கள் தடுக்கப்படாது என்றும் கூறப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 13) அன்று சில இரானிய செய்தித்தாள்கள் டிரம்பின் எச்சரிக்கையை நிராகரித்தன. போர் தொடங்கியதிலிருந்து இரான் ஏற்கெனவே பெரிதும் மூடிவிட்ட நீரிணையை அவர் (டிரம்ப்) “மேலும் மூடிக் கொண்டிருக்கிறார்,” என்று அவை கேலியாக செய்தி வெளியிட்டன.
‘ஒட்டுமொத்த உலகத்திற்கும் எதிராக டிரம்ப் போர் தொடுக்கிறார்’

கடும்போக்கு கொண்ட செய்தித்தாளான ஃபார்ஹிகேகான் (Farhikhegaan), ‘ஹோர்மூஸ் நீரிணையை மூடும் கூட்டணியில் டிரம்ப் இணைகிறார்’ என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது.
மற்றொரு கடும்போக்கு கொண்ட செய்தித்தாளான ஜவான், ஹோர்மூஸ் நீரிணையைத் திறப்பது குறித்து டிரம்ப் முன்னதாகப் பேசியிருந்த போதிலும், அவரது இறுதி எச்சரிக்கையானது அந்த நீரிணையை ”மீண்டும் மூடுவதற்கு” ஒப்பானதாக அமையும் என்பதை அவரைப் போன்றவர்கள் புரிந்துகொள்வதில்லை என்று எழுதியுள்ளது.
அமெரிக்காவின் ஐரோப்பிய மற்றும் ஆசிய நட்பு நாடுகள் அந்த நீரிணையைக் கடக்க இரானுக்கு கட்டணம் செலுத்துவது குறித்து ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அந்த செய்தித்தாள் கூறியுள்ளது. டிரம்பின் நடவடிக்கை “ஒட்டுமொத்த உலகத்தின் மீது தொடுக்கப்பட்ட போர்” என்றும் அச்செய்தியில் விவாதிக்கப்பட்டது.
இத்தகைய நடவடிக்கையை எதிர்கொள்ள இரானிடம் முழு வீச்சிலான வாய்ப்புகள் இருப்பதாகவும் ஜவான் தெரிவித்துள்ளது.
“கடல் வாயிலாக இரானிய எண்ணெய் ஏற்றுமதியை டிரம்ப் தடுத்தால், இரான் அப்பிராந்தியத்தின் எண்ணெய் விநியோகத்தை தடுத்து, உலகளாவிய எண்ணெய் விலையை விண்ணை முட்டும் அளவுக்கு உயரச் செய்யும்.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏமனில் இரானால் ஆதரிக்கப்படும் ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் பாப் எல்-மண்டெப் (Bab-el-Mandeb) நீரிணை மூடப்பட்டிருப்பதாகவும் இது சூயஸ் கால்வாயை அணுகுவதை மிகவும் கடினமாக்கும் என்றும் அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், Reuters
அரசு செய்தித் தாளான ஜம்-இ-ஸாம் (Jam-e-Zam) கூறுகையில், இரானுக்கு எதிரான டிரம்பின் கடற்படை முற்றுகை கொள்கை, உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்காவில் எரிசக்தி விலைகளை உயர்த்தும் என்றும் தெரிவித்துள்ளது. டிரம்பின் இந்த எச்சரிக்கை “வெற்றுப் பேச்சே” என்று அது வர்ணித்துள்ளது.
வெளியுறவு விவகாரங்கள் ஆய்வாளர் முஸ்தஃபா நஜாஃபி, சீர்திருத்த கொள்கை கொண்ட இன்சாஃப் நியூஸ் இணையதளத்தில், போர் வாயிலாகவும் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை மூலமாகவும் ஹோர்மூஸ் நீரிணையை திறப்பதில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, இரானுக்கு எதிரான டிரம்பின் “மூன்றாவது ராணுவ நடவடிக்கை இது” என எழுதியுள்ளார்.
இந்த உத்தி, ஹோர்மூஸ் நீரிணையை “நிரந்தரமான ஆபத்து பகுதியாக” மாற்றக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார். எரிசக்தி விநியோகங்கள் மீது எந்தவிதமான தீவிரமான இடையூறுகளும் உலகளாவிய எண்ணெய் விலைகளை உயர்த்தக்கூடும் என்றும் பெரியளவிலான போராக தீவிரத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை பொறுத்தவரை, டிரம்பின் முற்றுகை உத்தி நான்கு முக்கிய இலக்குகளைக் கொண்டது:
- இரானின் எரிசக்தி ஏற்றுமதிகளை நிறுத்துவது அல்லது குறைப்பது
- ஹோர்மூஸ் நீரிணையில் இரானின் புதிய கட்டண அமைப்பை தடுத்தல்
- சீனா போன்ற இரானின் பெரிய வாடிக்கையாளர்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துதல்
- நீரிணையில் அமெரிக்க பாதுகாப்பின் பங்கு குறித்த சட்டப்பூர்வ அடிப்படையை உருவாக்குதல்
எனினும், இந்த உத்தியில் உள்ளார்ந்த முரண்பாடு இருப்பதாகவும் அவர் கூறுகிறார். அதாவது, அழுத்தத்தை அதிகரிப்பதன் மூலம் ஹோர்மூஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டை அமெரிக்கா விரும்புவதாகவும், ஆனால் அதே அழுத்தம் அனைத்துத் தரப்பினரின் கைகளிலிருந்தும் கட்டுப்பாடு நழுவிச் செல்லும் ஒரு சூழலையும் உருவாக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளியுறவு விவகாரங்கள் ஆய்வாளர் அலி பிக்டேலி ஐஎல்என்ஏ (ILNA) செய்தி முகமையிடம் கூறுகையில், இந்த முற்றுகை குறித்த டிரம்பின் கூற்று, “அமெரிக்கா தற்போது இரானுடன் நேரடி போரில் ஈடுபட விரும்பவில்லை” என்பதை காட்டுவதாக கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் விவாதம்
இரானில் உள்ள ஆய்வாளர்கள் மற்றும் வெவ்வெறு அரசியல் கொள்கைகளை உடைய தலைவர்களும் இந்த முற்றுகை குறித்து எதிர்வினையாற்றியுள்ளனர்.
தீவிரப்போக்கு கொள்கையுடைய பத்திரிகையாளர் அலி கோல்ஹாகி கூறுகையில், உலகளாவிய எண்ணெய் விலைகளில் கடும் உயர்வை ஏற்படுத்தும் என்பதால், இரண்டு மாதங்களுக்கு மேலாக அமெரிக்காவால் முற்றுகையை தொடர முடியாது என்று தெரிவித்துள்ளார். இரான் தற்போது அழுத்தத்தை ஏற்படுத்தும் விதமாக பாப் எல்-மண்டெப் நீரிணையையும் பயன்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்தார்.
சீர்திருத்த போக்கு கொண்ட பெஹ்ரௌஸ் அஸிஸி, ஹோர்மூஸ் நீரிணையை கடப்பதில் அமெரிக்க கடற்படையின் “தோல்வியை” சுட்டிக்காட்டி, இரானிய கடற்படைகள் முற்றிலும் தயாராக இருப்பதாகவும் “டிரம்பின் உத்தி அவர்களை அழிவுக்கு இட்டுச்செல்லும்” எனவும் தெரிவித்துள்ளார்.
சீர்திருத்த போக்கு கொண்ட முன்னாள் எம்.பி மஹ்மௌத் சடேகி கூறுகையில், டிரம்ப் தனது கடந்தகாலத் தவறுகளை சரிசெய்ய விரும்புவதாகவும், ஆனால் அவர் அதைவிடப் பெரியதொரு தவறை இழைத்து வருவதாகவும் கூறினார்.
ஹோர்மூஸ் தற்போது டிரம்புக்கு ஒரு “கடைசி பிடியாக” மாறியுள்ளதாகவும், “மிக ஆபத்தான முடிவுகளை எடுக்கும் டிரம்புக்கு, எப்போது விலக வேண்டும் என்பதே தெரியவில்லை” என்றும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஜாரிஃப் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சீர்திருத்தவாத ஆய்வாளர் அஹமது ஸைதாபாதி, சிக்கலான இக்கட்டிலிருந்து மீள முறையான வழியைக் கண்டறிவதற்குப் பதிலாக, ‘ட்வீட்-சிகிச்சையை’ (tweet-therapy – எண்ணங்களை வெளிப்படுத்த எக்ஸ் சமூக ஊடகத்தை பயன்படுத்துவது) நாடிவரும் டிரம்ப்பை ஓர் “ஆணவம் பிடித்த முட்டாள்” என்று வர்ணித்தார்.
டிரம்ப் வளைகுடா பகுதியில் தொடர்ந்து சிக்கிக் கொண்டிருக்கவே ரஷ்யாவும் சீனாவும் விரும்புவதாகவும்; அதனாலேயே அவை மத்தியஸ்தம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சீனாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான ஒரே நேரடித் தரைவழி இணைப்பான வக்கான் (Wakhan) வழித்தடத்தில் அமைந்துள்ள வக்ஜிர் (Wakhjir) கணவாய், இந்த முற்றுகையின் நீண்டகால விளைவாகத் திறக்கப்படக்கூடும் என்று பழமைவாத கொள்கையுடைய ஹுசைன் காதிப் எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார்.
பொருளாதார பேரழிவு குறித்து எச்சரிக்கும் குரல்கள்
பட மூலாதாரம், Dinendra Haria/SOPA Images/LightRocket via Getty Images
இந்த முற்றுகையானது இரானில் பொருளாதார வீழ்ச்சிக்கும் உணவு நெருக்கடிக்கும் வழிவகுக்கக் கூடும் என்று அரசாங்க எதிர்ப்புத் தரப்பினர் சிலர் எச்சரித்தனர்.
இரானியப் பல்கலைக்கழகம் ஒன்றின் பேராசிரியர் ஒருவர், இது இரானியப் பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கக் கூடும் என்று கூறினார்.
வெளிநாட்டில் வசிக்கும் பத்திரிகையாளர் எஹ்சான் சுல்தானி, இது 90 சதவிகித உணவு மற்றும் பிற பொருட்களின் இறக்குமதியைப் பாதிக்கும் என்றும், மூன்று மாதங்களுக்குள் நாடு ‘சோமாலியா போன்றதொரு நிலையை’ எட்டக்கூடும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு