பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், க்வாசி கியாம்ஃபி அசியேடு
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள விநியோக மையத்தில் இருந்து திருடப்பட்ட ஆயிரக்கணக்கான கேன்கள் ‘ப்ளூ ரிப்பன்’ பீர் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க சமூக வலைதளங்களின் உதவியை நாடியுள்ளது பாப்ஸ்ட் ப்ரூயிங் நிறுவனம்.
“திருடப்பட்டது” என்று நிறுவனம் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளது. “திருடியவருக்கு: உங்களிடம் எவ்வளவு பிபிஆர் பீர் இருக்கிறது என்று நண்பர்களிடம் பெருமையாகச் சொல்ல விரும்பியதற்காக உங்களை நாங்கள் குறை சொல்லவில்லை. ஆனால், அதை நேர்மையான வழியில் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்,” என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, கலிஃபோர்னியாவின் மான்ட்க்ளேரில் உள்ள அன்ஹீசர்-புஷ் விநியோக மையத்தில் போலி ஆவணங்களைக் காட்டி, சுமார் 25,000 டாலர் மதிப்புள்ள பீர்களை குற்றஞ்சட்டப்பட்ட நபர் எடுத்துச் சென்றுள்ளார். இவை சான் டியாகோவுக்குக் கொண்டு செல்லப்பட இருந்தது.
இந்தச் சம்பவத்தை தாங்கள் “மிகவும் தீவிரமாக” எடுத்துக்கொள்வதாக பாப்ஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், சுமார் 40,000 பவுண்ட் (18,144 கிலோ) எடையுள்ள பீர்களை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு வெகுமதியும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
அதே விநியோக மையத்தில், ஒரே நாளில் நடந்த இரண்டாவது திருட்டுச் சம்பவம் இது என்று மான்ட்க்ளேர் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த இரண்டு சம்பவங்களும் ஒரே மோசடி திருட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நடந்தனவா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.