• Sun. Sep 13th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்காவுக்கு எதிராக பிரிக்ஸ் ஒரு கூட்டறிக்கை வெளியிடுவது ஏன் கடினம்?

Byadmin

Sep 12, 2026


2024-ஆம் ஆண்டில் ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கடந்த 2024ஆம் ஆண்டில் ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.

அமெரிக்கா பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் உறுப்பினராக இல்லை. இருப்பினும், செப்டம்பர் 12 மற்றும் 13இல் டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தாக்கம் அதிகளவில் இருக்கும்.

பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற்றுள்ள 11 நாடுகளின் தலைவர்கள், அதாவது மாநாட்டை நடத்தும் இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இரான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். மேலும், மாநாட்டில் அழைக்கப்பட்ட உறுப்பினராக சௌதி அரேபியா பங்கேற்கிறது. ஆனால், அதிபர் டிரம்பின் கொள்கைகளின் தாக்கத்தைப் போல வேறு சில விவகாரங்கள் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்காது.

இரானில் நடைபெறும் போரும், அமெரிக்காவுக்கு எதிரான நாடுகள் மட்டுமின்றி அதன் நட்பு நாடுகளையும் குறிவைத்து வெள்ளை மாளிகை விதிக்கக்கூடிய வரிகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தலும் உலகளாவிய எரிசக்தி சந்தைகளைச் சீர்குலைத்துள்ளன. இதனால் உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலையும் உருவாகியுள்ளது.

இத்தகைய சூழலில்தான் பிரிக்ஸ் தலைவர்கள் சந்திக்கின்றனர். எனினும், அமெரிக்காவை வெளிப்படையாக விமர்சிக்கும் வகையிலோ அல்லது அதிபர் டிரம்பின் கொள்கைகள் மற்றும் புவிசார் அரசியலை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த உத்தியை வகுக்கும் வகையிலோ பிரிக்ஸ் அமைப்பு ஒருமித்த அறிக்கையை வெளியிட வாய்ப்பில்லை.

இதற்கு ஒரு காரணம், அமெரிக்காவுக்கு எதிராக எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பதில் பிரிக்ஸ் அமைப்புக்கு உள்ளேயே ஆழமான கருத்து வேறுபாடுகள் இருப்பதுதான்.

By admin