பட மூலாதாரம், @FSUIINDIA
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
ஓமன் கடற்கரைக்கு அப்பால் புதன்கிழமை அன்று, ‘செடெபெல்லோ’ என்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியதில் இரண்டு இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர். மற்றொருவரை இன்னும் காணவில்லை.
ஃபார்வர்டு சீமென் யூனியன் ஆஃப் இந்தியாவின் பொதுச் செயலாளர் மனோஜ் யாதவ் கூறுகையில், “உயிரிழந்தவர்கள் டெக் கேடட் ஆதித்யா சர்மா மற்றும் என்ஜின் ஃபிட்டர் சிவானந்த் சௌராசியா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” என்றார்.
தலைமைப் பொறியாளர் பட்நாலா சுரேஷை இன்னும் காணவில்லை.
இந்திய அரசு இதற்கு முன்பு இவர்கள் மூன்று பேரையுமே காணவில்லை என்று தெரிவித்திருந்தது.
இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளது, ஆனால் அதன் அறிக்கையில் அமெரிக்காவின் பெயரை அது குறிப்பிடவில்லை.
இருப்பினும், திங்கள்கிழமை அன்று பலாவு நாட்டுக்கொடியுடன் சென்ற ‘எம்டி மேரிவெக்ஸ்’ என்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலைப் போலல்லாமல், புதன்கிழமை நடந்த தாக்குதலை இந்தியா வெளிப்படையாகக் கண்டித்தது.
இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் கஜகஸ்தான் நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டிருந்ததால், அமெரிக்க தூதரகத்தின் செயல் தலைவர் நேரில் வரவழைக்கப்பட்டார்.
‘மேரிவெக்ஸ்’ கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் ஓமன் நாட்டு ராணுவத்தினரால் மீட்கப்பட்டனர், ஓமன் நாட்டின் மீது ஏற்கனவே அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா
பட மூலாதாரம், @FSUIINDIA
அமெரிக்க ராணுவத்தால் ஏவப்பட்ட துல்லியமான வெடிபொருளால் தாக்கப்பட்ட ‘செடெபெல்லோ’ கப்பலில் இருந்த 21 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
பலாவு நாட்டுக்கொடியுடன் சென்ற ‘செடெபெல்லோ’ என்ற அந்த எண்ணெய் கப்பல், இரானில் இருந்து எண்ணெயைக் கொண்டு சென்றபோது கடல்வழி முற்றுகையை மீறியதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் குற்றம் சாட்டியுள்ளது.
“அமெரிக்கப் படைகளின் தொடர்ச்சியான எச்சரிக்கைகளையும் மீறி, கப்பல் ஊழியர்கள் அவற்றை புறக்கணித்தனர்” என்று அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“இதனையடுத்து, அமெரிக்க விமானம் ஒன்று கப்பலின் என்ஜினை இலக்காகக் கொண்டு துல்லியமான ஆயுதத் தாக்குதலை நடத்தியது.”
அமெரிக்க ராணுவம் இந்த நடவடிக்கையின் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக இந்தத் தாக்குதலில் இந்திய மாலுமிகள் உயிரிழந்திருப்பதால், இந்தச் சம்பவம் வளைகுடா பிராந்தியத்தில் நடந்து வரும் மோதல்கள் மற்றும் கடல்சார் வர்த்தகப் பாதைகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
செடெபெல்லோ எண்ணெய் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா அமெரிக்காவிடம் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
புது டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் துணைத் தூதரகத் தலைவர் ஜேசன் மீக்ஸை இந்திய அரசு நேரில் வரவழைத்து, இந்தச் சம்பவத்திற்கு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
ஓமன் கடற்கரைக்கு அப்பால் மற்றொரு எண்ணெய் டாங்கர் கப்பலான ‘மேரிவெக்ஸ்’ கப்பலை அமெரிக்கப் படைகள் இலக்கு வைத்துத் தாக்கிய இரண்டு நாட்களிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது, அந்த மேரிவெக்ஸ் கப்பலில் இருந்து 24 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டனர்.
புதன்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், “ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது, மேலும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக ஓமன் அதிகாரிகளுடன் தீவிரமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளது.
கடல்சார் உளவுத்துறை இணையதளமான ‘லாய்ட்ஸ் லிஸ்ட்’ தகவலின்படி, செடெபெல்லோ கப்பல் சமீபத்திய நாட்களில் ஓமனின் துக்ம் துறைமுகத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த பல கப்பல்களில் ஒன்றாகும், மேலும் இது அமெரிக்க கடற்படையின் கண்காணிப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, யுனைடெட் கிங்டம் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு விடுத்த எச்சரிக்கையில், ஓமனின் சோஹர் நகருக்கு வடகிழக்கே சுமார் 20 கடல் மைல் தொலைவில் ஒரு டாங்கர் கப்பலின் என்ஜின் அறையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், கப்பல் ஊழியர்களை வெளியேற்றுவதற்கு உள்ளூர் அதிகாரிகள் உதவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த எச்சரிக்கையின்படி, கப்பலில் இருந்த ஒரு நபர் உயிரிழந்தார் மற்றும் இருவர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டது.
இப்பிராந்தியத்தில் வர்த்தகக் கப்பல்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் மிகுந்த கவலைக்குரிய விஷயம் என்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இப்பிராந்தியத்தில் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் சிவிலியன் உள்கட்டமைப்புகளை இலக்கு வைப்பது நிறுத்தப்பட வேண்டும் என்றும், சர்வதேச சட்டத்தின் படி கடல்சார் பாதைகள் வழியாக தடையற்ற மற்றும் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து விரைவில் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ராணுவ மோதல் குறித்து அதிகரித்துள்ள அச்சம்
பட மூலாதாரம், @CENTCOM
கப்பல் கண்காணிப்பு இணையதளங்களின்படி, செடெபெல்லோ கப்பல் இதற்கு முன்பு சீனாவிற்குச் சென்றுள்ளது.
இக்கப்பல் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டு முறை சீனாவிற்குச் சென்றிருந்தது.
ஏப்ரல் மாத இறுதியிலிருந்து மே மாத தொடக்கம் வரை லியான்யுங்காங் துறைமுகத்தில் சரக்குகளை இறக்கிய இக்கப்பல், மே 12 அன்று சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டது.
ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகளையும் கண்காணிப்பையும் இரான் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து, ஏப்ரல் 13 அன்று அமெரிக்கா இரான் துறைமுகங்களுக்கு எதிரான கடல்வழி முற்றுகையைத் தொடங்கியது.
இந்தச் சம்பவம் வளைகுடா பிராந்தியத்தில் அதிகரித்து வரும் ராணுவப் பதற்றங்கள், கடல்சார் வர்த்தகத்தின் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு மோதல்களில் சிக்கிக்கொள்ளும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.
இதற்கிடையில், இரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதற்றம் தணிவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. அமெரிக்கா இரான் மீது மற்றொரு தாக்குதலை நடத்தியுள்ளது.
அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இரான் ‘மிக நீண்ட காலம்’ எடுத்துக்கொள்வதாகவும், ‘அமெரிக்காவை ஏமாற்ற முற்படுவதாகவும்’ டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது ராணுவத் தாக்குதல்களைத் தொடங்கி, இரானின் அதி உயர் தலைவரைக் கொன்றபோது இந்தப் போர் தொடங்கியது.
இதற்குப் பதிலடியாக, இரான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளான வளைகுடா நாடுகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.
இந்த மோதல் விரைவில் பிராந்தியம் முழுவதும் வேகமாகப் பரவியது, மேலும் மார்ச் மாதத்தில் லெபனானும் இதனால் பாதிக்கப்பட்டது.
ஏப்ரல் மாதத்தில், அமெரிக்காவும் இரானும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன, இது ஆரம்பத்தில் இரண்டு வாரங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இருப்பினும், தொடர்ச்சியான பரஸ்பர குற்றச்சாட்டுகள், புதிய தாக்குதல்கள் மற்றும் அதிகரித்து வரும் அவநம்பிக்கை ஆகியவை இந்த போர்நிறுத்தத்தை மிகவும் பலவீனமானதாக மாற்றியுள்ளன, இது இப்பிராந்தியத்தில் ஒரு பெரிய ராணுவ மோதல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்துள்ளது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு