தல வரலாறு
சீரடி சாய்பாபாவின் பிறப்போ அல்லது பூர்வீகமோ அறியப்படாத ஒரு தெய்வீக ரகசியமாகும். பிற்காலத்தில் சூபி தத்துவங்களைப் பரப்பிய அவர், எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தி மக்களின் துயரங்களைத் துடைத்தார். மதம், சாதி, இனம், சமூகம் என எவ்விதப் பாகுபாடும் இன்றி, மனிதர்களிடையே அமைதியையும், நல்லிணக்கத்தையும் மட்டுமே போதித்தார்.
சாய்பாபாவின் இந்த உன்னதப் போதனைகளை தென்னகத்தில் வேரூன்றச் செய்தவர், சேலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வழக்கறிஞரும், பாபாவின் தீவிர பக்தருமான ஸ்ரீ நரசிம்ம சுவாமி. சாய்பாபா மீது கொண்ட அளப்பரிய பற்றின் காரணமாக, நாடு முழுவதும் ஆன்மிகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பாபாவின் வாழ்க்கை மற்றும் போதனைகளை எடுத்து ரைத்தார்.
சாய்பாபாவின் மகிமைகளைப் பரப்புவதற்காக, 1941-ம் ஆண்டில் ‘அகில இந்திய சாய்பாபா சமாஜத்தை’ நிறுவினார். இந்த அமைப்பின் மூலம் ‘சாய் சுதா’ என்ற ஆன்மிகப் பத்திரிகை தொடங்கப்பட்டு, பாபாவின் வாழ்க்கை மற்றும் அற்புதங்கள் குறித்த பல கட்டுரைகள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட்டன.
தொடக்கத்தில், மயிலாப்பூரில் இருந்த ஒரு புளிய மரத்தின் அடியில் சாய்பாபாவின் திருவுருவப் படத்தை வைத்தே நரசிம்ம சுவாமிகள் வழிபட்டு வந்தார். சாய் பாபாவின் அருளால், அந்தப் புளிய மரத்தடியே பிற்காலத்தில் பிரமாண்ட ஆலயமாக உருவெடுத்தது. சுவாமிகளின் ஆன்மிக முயற்சிக்கு அவரது நண்பர் ஜே.டி. பன்னலால் நிதியுதவி செய்ய முன்வந்தார்.