6
அமெரிக்காவின் மிச்சிகன் மாநில செனட் சபைக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் அப்துல் எல்-சயீத், குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக் ரோஜர்ஸைத் தோற்கடித்து, வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளார். மருத்துவரும் முற்போக்குக் கொள்கைகளைக் கொண்ட அரசியல் செயற்பாட்டாளருமான இவர், இந்த வெற்றசியின் மூலம் அமெரிக்க வரலாற்றில் செனட்டராகத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது முஸ்லிம் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
வேய்ன் கவுண்டியின் முன்னாள் பொது சுகாதாரப் பணிப்பாளரான எல்-சயீத், முன்னதாக நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் உத்தியோகபூர்வ வேட்பாளர் தெரிவுக்கான கடுமையான போட்டியில் ஹேலி ஸ்டீவன்ஸை மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிகொண்டிருந்தார்.
தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய எல்-சயீத், ஒரு நாட்டின் ஜனாதிபதி மற்றொருவரின் பெயரையோ அல்லது அவர் இறைவனை வழிபடும் முறையையோ பகிரங்கமாகக் கேலி செய்வது ஏன் என்பதைத் தங்கள் பிள்ளைகளுக்கு விளக்க முடியாமல் திணறிய பெற்றோர் அனைவருக்கும், அத்தகைய தீய சக்திகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டன என்ற செய்தியைக் கூறுமாறு தெரிவித்தார்.
அத்துடன், தேர்தல் பிரசாரக் காலம் முழுவதிலும் தமக்கு எதிராக முஸ்லிம் விரோத மற்றும் இனவாதக் கருத்துகளை வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஆகியோரையும் அவர் கடுமையாகச் சாடினார்.
குறிப்பாக, டொனால்ட் ட்ரம்பை நோக்கி கருத்துத் தெரிவித்த எல்-சயீத், எனது பெயரை உச்சரிப்பதில் உங்களுக்குச் சிரமம் இருந்தது எனக்குத் தெரியும் எனவும், எதிர்வரும் ஜனவரி மாதம் ஜே.டி. வான்ஸ் தமக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த பின்னர் தாராளமாகத் தன்னை செனட்டர் என்று அழைக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.
மிச்சிகன் மாநிலத்தில் கடந்த 1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் குடியரசுக் கட்சி செனட் தேர்தலில் வெற்றி பெறவில்லை. எனினும், இரு முறை செனட்டராகப் பதவி வகித்த ஜனநாயகக் கட்சியின் கேரி பீட்டர்ஸ் ஓய்வுபெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இம்முறை அங்கு வெற்றி பெறுவதற்கான அரிய வாய்ப்பு குடியரசுக் கட்சிக்கு உருவானது.
இதன் காரணமாக, அமெரிக்க செனட்டின் பெரும்பான்மைக் கட்டுப்பாட்டைத் தீர்மானிக்கும் தேசிய அளவிலான முக்கிய களமாக மிச்சிகன் மாநிலத் தேர்தல் மாறியது. கடந்த ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி நடைபெற்ற கட்சியின் உத்தியோகபூர்வ வேட்பாளர் தெரிவைத் தொடர்ந்து, இவ்விரு வேட்பாளர்களின் தேர்தல் விளம்பரங்களுக்காக மாத்திரம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.