படக்குறிப்பு, ஓமான் வளைகுடாவில் இதுவரை மூன்று வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன, அவற்றில் பெரும்பாலான ஊழியர்கள் இந்தியர்களாக இருந்தனர்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று இந்திய மாலுமிகள் குறித்து இந்தியாவில் கடுமையான விவாதம் நடந்து வருகிறது. மேலும், “இதுதான் அமெரிக்கா இந்தியாவின் மூலோபாய பங்காளியா?” என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளையும் விமர்சகர்களையும் திருப்திப்படுத்துவது மோதி அரசுக்கு எளிதானதல்ல. மறுபுறம், சர்வதேச ஊடகங்களிலும் அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அமெரிக்க ஊடகமான சிஎன்என் தனது செய்தி ஒன்றில், “ஒரு வணிக எண்ணெய் விநியோகக் கப்பல் (டேங்கர்) மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தது இந்தியாவில் பரவலான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று எழுதியுள்ளது.
அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஏற்கனவே நிலவி வரும் பதற்றமான உறவுகளில் இது ஒரு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சிஎன்என்- மூலோபாய பங்களிப்பில் தாக்கம் ஏற்படலாம்
பட மூலாதாரம், CENTCOM
படக்குறிப்பு, சென்காம் ஜூன் 9 அன்று எம்டி செடபெல்லா கப்பல் மீதான தாக்குதலின் வீடியோவை வெளியிட்டுள்ளது, இந்தத் தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர்.
சிஎன்என் செய்தியின்படி, “புதன்கிழமை அதிகாலை எம்டி செடபெல்லோ ஓமான் கடல் வழியாகச் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் இரானிய எண்ணெயைக் கொண்டு சென்றுகொண்டிருந்தபோது, ஒரு அமெரிக்க விமானம் அதன் எஞ்சின் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் கப்பலில் தீப் பற்றியது, வானில் பெரும் புகைக் கூட்டங்கள் எழும்பின, மேலும் ஒரு பெரிய மீட்புப் பணி தொடங்கப்பட வேண்டியிருந்தது.”
“பலாவு நாட்டின் கொடியுடன் சென்ற இந்தக் கப்பல் மீதான தாக்குதலுக்குப் பிறகு, உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட மூன்று பேர், இரானிய துறைமுகங்களின் முற்றுகையை அமல்படுத்தும் அமெரிக்கப் படைகளின் நடவடிக்கையின் போது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த முதல் மாலுமிகள் ஆவர்.”
“இது இந்தியாவின் போர் அல்ல, ஆனால் இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். முற்றுகையை அமல்படுத்தி வரும் அமெரிக்கப் படைகளின் உத்தரவுகளைக் கப்பல் ஊழியர்கள் பின்பற்றாததால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் கூறுகிறது.” என சிஎன்என் எழுதியுள்ளது.
“பிரதமர் மோதி இதுவரை இந்த மரணங்கள் குறித்து பகிரங்கமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை, ஆனால் சில தொழிற்சங்கங்கள் இந்தத் தாக்குதலை வெளிப்படையாக கண்டிக்க வேண்டும் என்று அவர் மீது அழுத்தத்தை அதிகரித்து வருகின்றன.”
” சிஐடியு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்- ஒரு வெளிநாட்டு ராணுவம் சர்வதேச கடல் பகுதியில் இந்தியத் தொழிலாளர்களைக் கொல்லும்போது, இந்திய அரசு வலுவான மற்றும் தெளிவான குரலில் பேச வேண்டும் என்று கூறியுள்ளது.”
சர்வதேச உறவுகளுக்கான பேராசிரியர் காந்தி வாஜ்பாயி சிஎன்என்-இடம் கூறுகையில், இந்த விவகாரம் “அமெரிக்காவுடன் ஏற்கனவே தள்ளாடிக்கொண்டிருக்கும் உறவுகளில் ஒரு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டன் மற்றும் இஸ்லாமாபாத் இடையே வேகமாக வளர்ந்து வரும் உறவுகளும் இந்த பதற்றத்திற்கு ஒரு காரணமாகும்” என்றார்.
“பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய எதிரியாகக் கருதப்படுகிறது. டொனால்ட் டிரம்ப் பலமுறை பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீரை பகிரங்கமாகப் பாராட்டியுள்ளார். முனீர் சமீபத்திய மாதங்களில் அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஒரு முக்கியமான மத்தியஸ்தராக உருவெடுத்துள்ளார்.”
இந்தியாவின் ‘சென்டர் ஃபார் சோஷியல் அண்ட் எகனாமிக் பிராகரஸ் அமைப்பின் விசிட்டிங் சீனியர் ஃபெலோவான வாஜ்பாயி, இந்திய குடிமக்கள் பலியாவது போன்ற சம்பவங்கள் மேலும் நிகழ்ந்தால் மற்றும் நாட்டிற்குள் அதிருப்தி அதிகரித்தால், மோதி அரசுக்கு இந்த விவகாரத்தைக் கட்டுப்படுத்துவது இன்னும் கடினமாகலாம் என்று கூறினார்.
” இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு காலத்தில் மிகவும் வலுவானதாகக் கருதப்பட்ட உறவுகளில் கடந்த ஓராண்டில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குவாட் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தபோதிலும், அரசியல் மற்றும் பொருளாதார பதற்றங்கள் இரு நாடுகளின் மூலோபாய பங்களிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன,” என சிஎன்என் எழுதியுள்ளது,
“கடந்த மே மாதம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த குறுகிய ஆனால் கடுமையான மோதலின் போது, தான் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகக் கூறியபோது பதற்றம் மேலும் அதிகரித்தது. புது டெல்லி இந்த வாதத்தை நிராகரித்தது. இதனால் காஷ்மீர் குறித்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சர்ச்சையில் மூன்றாவது தரப்பின் பங்கு குறித்து இந்தியாவின் உணர்வு மீண்டும் வெளிப்பட்டது.”
நியூயார்க் டைம்ஸ் – அமெரிக்காவை அதிருப்தி அடையச் செய்வதை இந்தியா தவிர்க்கிறது
பட மூலாதாரம், @FSUIINDIA
படக்குறிப்பு, செடபெல்லோ கப்பல் மீதான தாக்குதல் குறித்து இந்தியா அமெரிக்காவிடம் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ் தனது செய்தியில், “இந்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, உலகளாவிய வணிகக் கப்பல் துறையின் உழைக்கும் சக்தியில் 12 சதவீதம், அதாவது சுமார் மூன்று லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இதன் பொருள் என்னவென்றால், பல வணிகக் கப்பல்களின் ஊழியர்களில் இந்தியர்கள் இடம் பெற்றிருப்பது இயல்பானது,” என எழுதியுள்ளது.
“மீட்கப்பட்ட சில கப்பல் ஊழியர்களுடன் வழக்கமான தொடர்பில் இருக்கும் ‘ஃபார்வர்ட் சீமென்ஸ் யூனியன் ஆஃப் இந்தியா’ அமைப்பின் பொதுச் செயலாளர் மனோஜ் யாதவ், “அவர்கள் சாதாரண மக்கள், போருக்காகப் பயிற்சி பெற்றவர்கள் அல்ல. அவர்கள் தாங்களாக உருவாக்காத ஒரு சூழ்நிலையில் சிக்கிக்கொண்டது துரதிர்ஷ்டவசமானது” என்று கூறினார். இந்தியா இப்போது கடுமையான கேள்விகளைக் கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவிற்கு இந்த விவகாரம் வெறும் ராஜதந்திர சர்ச்சையோடு மட்டும் நின்றுவிடாது. இதனால் சமீபத்திய காலங்களில் இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவை மேலும் மோசமடையும் அபாயம் உள்ளது,.”
“இந்தியா, அதிபர் டொனால்ட் டிரம்ப்பை அதிருப்தி அடையச் செய்வதைத் தவிர்க்க முயற்சிக்கிறது, ஏனெனில் அது ஒரு இறுதி வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது மற்றும் தனது மிகப்பெரிய உள்நாட்டு ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆற்றல் மூலங்களை பன்முகப்படுத்துவதற்கான அவசரத்தில் உள்ளது. இப்போது அது இரானிய எண்ணெய் இறக்குமதி மற்றும் ஹோர்மூஸ் மூலமாக நடக்கும் விநியோகத்தை முன்பு போலச் சார்ந்திருக்க முடியாது.”
“இரான் போர் இந்தியாவிற்குப் கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்துகிறது என்றும், இந்தியர்கள் எரிபொருள் நுகர்வைக் குறைக்க வேண்டும் என்றும் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி அரேபியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து எண்ணெய் கொள்முதலை அதிகரித்துள்ளது. வெனிசுவேலாவும் இப்போது ஒரு வளர்ந்து வரும் விநியோகஸ்தராக உருவெடுத்து வருகிறது.” என நியூயார்க் டைம்ஸ் எழுதியுள்ளது.
இந்தத் தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறுகிறதா?
பட மூலாதாரம், @CENTCOM
படக்குறிப்பு, கடந்த புதன்கிழமை இரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே பரஸ்பர தாக்குதல்கள் நடந்தன (அமெரிக்க ராணுவத்தின் கோப்புப் படம்).
கட்டாரின் செய்தி ஊடகமான அல்-ஜசீரா தனது செய்தியில், “ஹோர்மூஸ் நீரிணை ஓமான் மற்றும் இரானின் கடல் பகுதி வழியாகச் செல்கிறது, அதே நேரத்தில் அதன் வெளிப்பகுதிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடல் பகுதி வரை பரவியுள்ளன. எனவே இது சர்வதேச கடல் பகுதிக்குள் வராது. இருப்பினும், சர்வதேச வர்த்தகத்திற்குப் பயன்படுத்தப்படும் எந்தவொரு இயற்கை நீரிணைக்கும் சர்வதேச கடல்சார் சட்டம் பொருந்தும்.” என எழுதியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் சட்ட மாநாட்டின் (UNCLOS) பிரிவு 38-ன் படி, அனைத்து கப்பல்களுக்கும் விமானங்களுக்கும் ‘டிரான்சிட் பாஸேஜ்’ (கடந்து செல்லும் உரிமை) உரிமை உள்ளது, அதை எந்த நாடும் ரத்து செய்ய முடியாது.
பிரிவு 17-ன் படி, அனைத்து வெளிநாட்டுக் கப்பல்களுக்கும் எந்தவொரு நாட்டின் கடல் பகுதியிலும் நடமாட்டத்திற்கான உரிமை உள்ளது. பிரிவு 19-ன் படி, ஒரு கப்பலின் பயணம் கடற்கரை நாட்டின் அமைதி, ஒழுங்கு அல்லது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இல்லாதவரை அது சுதந்திரமான பயணமாகக் கருதப்படும்.
தவிர, சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ், போரில் ஈடுபடாத வணிகக் கப்பல்களை வேண்டுமென்றே இலக்கு வைப்பது சட்டவிரோதமானது.
வணிகக் கடற்படையில் பல தசாப்தங்களாகப் பணியாற்றிய ஒரு இந்தியக் கேப்டன், தற்போது பணியில் இருப்பதாலும், ஊடகங்களுடன் பேச அனுமதி இல்லாததாலும் தனது அடையாளத்தை ரகசியமாக வைத்திருக்கக் கோரி அல் ஜசீரானவிடம் கூறுகையில், “ஊழியர்கள் ஆயுதம் ஏந்தாத, கடற்கரை நாட்டின் பாதுகாப்பிற்கு எந்த ஒரு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாத, போரில் ஈடுபடாத இத்தகைய கப்பல்கள் மீது குண்டுவீசுவது சரியல்ல” என்றார்.
“அமெரிக்க முற்றுகை போர்க்கால சட்டங்களின் கீழ் செல்லுபடியாகக் கூடியதாக இருக்கலாம், ஆனால் ஒரு டேங்கர் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும், கப்பல் ஊழியர்களைக் கொல்வதும், தேவைக்கு அதிகமான பலப்பிரயோகம் எனக் கருதப்படக்கூடிய எல்லையைத் தாண்டிச் சென்றுவிட்டது என்று நிச்சயமாக வாதிடலாம்” என்று அவர் கூறினார்.
அமெரிக்க-இந்திய உறவுகளின் மிகக் கடினமான காலம்
பட மூலாதாரம், Julia Demaree Nikhinson/POOL/AFP via Getty Images
படக்குறிப்பு, அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ சமீபத்தில் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
ஹாங்காங்கின் செய்தி இணையதளமான ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ தனது செய்தியில் “அமெரிக்கக் குடியரசுக் கட்சி எம்பி ராப் விட்மேன் வியாழக்கிழமை இந்த மரணங்களை மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்று விவரித்தார், மேலும் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய அமெரிக்க ராணுவம் முயற்சித்து வருகிறது என்று கூறினார்.” விட்மேன் எஸ்சிஎம்பியிடம், “இந்தச் சம்பவத்தில் தங்களது அன்பிற்குரியவர்களை இழந்த இந்தியக் குடும்பங்களுக்கு எங்களது இரங்கல்களும் பிரார்த்தனைகளும் உரிதாவதாக கூறினார்.”
அவர் மேலும் கூறுகையில், “அங்கு உண்மையில் என்ன நடந்தது என்பதைத் தீர்மானிக்க எங்களது அமெரிக்க ராணுவம் இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறது என்பதை நான் அறிவேன். ஆனால் இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம், இதுபோன்ற சம்பவங்களைத் தவிக்க நாம் எவ்வகையிலும் விரும்புகிறோம்” என்றார்.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை எஸ்சிஎம்பிக்கு அளித்த பதிலில், வாஷிங்டன் இந்த விவகாரத்தில் இந்திய அரசுடன் நேரடியாகத் தொடர்பில் இருப்பதாகக் கூறினார்.
தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முன்னாள் மூத்த இயக்குனர் லிசா கர்டிஸ் கூறுகையில், இந்தச் சம்பவம் இரு நாடுகளின் உறவுகளில் ஒரு கடினமான காலத்தைக் காட்டுகிறது என்றும், டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இதை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும் என்றும் கூறினார்.
“அமெரிக்கா இந்தத் தவறுக்காக உண்மையில் வருந்துகிறது என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் பதிலளிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறினார்.
“அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ இந்தியா வந்து சென்ற சில நாட்களிலேயே இந்த பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் அமெரிக்க வரிகள், விசா கட்டுப்பாடுகள் மற்றும் டொனால்ட் டிரம்பின் மாகா ஆதரவாளர்களிடமிருந்து வந்த இந்திய-எதிர்ப்பு கருத்துகளுடன் கூடிய இனவெறிப் பேச்சுகளால் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிப்பதே அவரது பயணத்தின் நோக்கமாக இருந்தது,” என எஸ்சிஎம்பி எழுதியுள்ளது,
வர்ஜீனியாவின் குடியரசுக் கட்சி எம்பியான விட்மேன் கூறுகையில், இந்தியாவுடன் நிலவி வரும் பதற்றம் அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் உத்தியில் நிச்சயமாகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றார்.
இருப்பினும் அவர், “அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பகிரப்பட்ட நலன்கள் மிக அதிகம், இவை சீனாவுடன் இந்தியாவின் பகிரப்பட்ட நலன்களை விட மிக அதிகம்” என்றும் கூறினார்.
“நான் நம்புகிறேன், மேலும் பலரும் இதை நம்புகிறார்கள், நாம் இந்த உறவைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.
இருப்பினும், ‘சென்டர் ஃபார் அ நியூ அமெரிக்கன் செக்யூரிட்டி’ அமைப்பின் இந்தோ-பசிபிக் பாதுகாப்புத் திட்டத்தின் இயக்குநராகவும் இருந்த லிசா கர்டிஸ், இதனை ‘கடந்த 25 ஆண்டுகளில் அமெரிக்க-இந்திய உறவுகளின் மிகக் கடினமான ஆண்டுகளில் ஒன்று’ என்று குறிப்பிட்டார்.
அவர், “கடந்த ஓராண்டு கால பதற்றங்கள் அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் உத்தியில் இந்தியாவின் பங்களிப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கையில் பெரிய குறைபாடு ஏற்பட்டுள்ளது, மேலும் இது போன்ற நம்பிக்கை உடையும் போது அது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பங்களிப்பின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் பாதிக்கிறது” என்றார்.