பட மூலாதாரம், Getty Images
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கில், அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
அதே நேரம் திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர் ஆகிய மூன்று தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்த பிறகே இடைத்தேர்தல் நடத்த முடியும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவு, தமிழகத்தின் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான சட்டச் சிக்கலில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் வழக்குகள் காரணமாக நீடித்த முட்டுக்கட்டை
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மொத்தம் ஏழு தொகுதிகள் காலியாகின. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று பின்னர் அந்தப் பதவியை ராஜிநாமா செய்தார். அதேபோல், அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஆறு பேர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
இதையடுத்து, திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய ஏழு தொகுதிகளும் காலியாகின. இவற்றில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது. மற்ற ஐந்து தொகுதிகளிலும் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்குகள் நிலுவையில் இருந்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகளிலும் தேர்தல் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. சில மனுக்களில், வெற்றி பெற்றவர்களின் தேர்தல் செல்லாது என்று அறிவிப்பதுடன், அடுத்த நிலையில் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளரை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் நிலுவையில் இருக்கும்போதே இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், பின்னர் தேர்தல் வழக்குகளில் மனுதாரர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தால் சட்டச் சிக்கல்கள் ஏற்படலாம் என்பது இடைத்தேர்தலுக்குத் தடை கோரிய மனுதாரர் தரப்பின் வாதமாக இருந்தது. இந்த வாதத்தை முன்வைத்து, பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே. வெங்கடாஜலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 2026 ஜூலை 10ஆம் தேதி இந்த ஐந்து தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடத் தேர்தல் ஆணையத்திற்குத் தடை விதித்தது. பின்னர், அந்தத் தடையை நீட்டித்த நீதிமன்றம், வழக்கின் இறுதி விசாரணையை நடத்துவதாக அறிவித்திருந்தது.
தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை இந்த ஐந்து தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையமும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. தற்போது, தேர்தல் வழக்குகளின் நிலை மற்றும் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் ஏற்பட்டுள்ள சட்ட முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த அனுமதி அளித்துள்ளது. திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர் ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டும் தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை இடைத்தேர்தல் நடத்த முடியாது என்று உத்தரவிட்டுள்ளது.
அம்பாசமுத்திரம், பெருந்துறையில் என்ன நடந்தது?
அண்மையில் தனி நீதிபதிகள் பிறப்பித்த இரண்டு முக்கிய உத்தரவுகள் அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கான தடையை நீக்க வழிவகுத்தன.
பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ். ஜெயக்குமார், பின்னர் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தார்.
அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் தோப்பு வெங்கடாசலம் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி. பரதசக்கரவர்த்தி, 2026 செப்டம்பர் 8ஆம் தேதி, சட்டப்படி ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணங்கள் மனுவில் இல்லை என்று கூறி அதைத் தள்ளுபடி செய்தார். இதனால், ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கின் அடிப்படையில் இடைத்தேர்தலைத் தடுக்க வேண்டிய காரணம் இல்லாத நிலை ஏற்பட்டதால் தற்போது இடைத்தேர்தலை நடத்த அனுமதி கிடைத்துள்ளது.
அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தார். அவரது வெற்றியை எதிர்த்து வாக்காளர் காந்திமதிநாதன் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வி.பி. துரைதான் அடுத்த நிலையில் அதிக வாக்குகளைப் பெற்றவர் என்பதால், அவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பி.பி. பாலாஜி, இசக்கி சுப்பையாவின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கைத் தள்ளுபடி செய்ய மறுத்தார். அதேநேரத்தில், வி.பி. துரையை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீக்கினார்.
பல வேட்பாளர்கள் போட்டியிட்ட தேர்தலில், வெற்றி பெற்றவரின் தேர்தல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டால் மட்டுமே அடுத்த நிலையில் உள்ளவர் தானாகவே வெற்றி பெற்றவராகிவிட முடியாது என்பதே இந்த உத்தரவின் முக்கிய அம்சம். இதனால் அம்பாசமுத்திரம் தொகுதியில் தேர்தல் வழக்கு தொடர்ந்து விசாரணையில் இருந்தாலும், மற்றொரு வேட்பாளரை வெற்றி பெற்றவராக அறிவிக்கக் கோரும் மனுவின் அடிப்படையில் இடைத்தேர்தலைத் தடுக்க வேண்டிய சட்டச் சிக்கல் நீங்கியது. அதே நேரம் தேர்தல் வழக்கு முடியும் வரை அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலைத் தள்ளி வைக்கத் தேவையில்லை எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதன் காரணமாக, இந்த 2 தொகுதிகளிலும் ‘இரட்டைப் பிரதிநிதித்துவம்’ ஏற்படுவதற்கான சட்டச் சிக்கல் நீங்கியதால், அங்கு இடைத்தேர்தல் நடத்தத் தலைமை நீதிபதி அமர்வு இன்று அனுமதி வழங்கியுள்ளது.
திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர் தொகுதிகளில் தடை தொடர்வது ஏன்?
மீதமுள்ள மூன்று தொகுதிகளிலும் தேர்தல் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், வெற்றி பெற்றவர்களின் தேர்தலைச் செல்லாது என்று அறிவிப்பதுடன், வேறு வேட்பாளரை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான தடை தொடர்கிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு