• Thu. Sep 3rd, 2026

24×7 Live News

Apdin News

அரசியல் துறவறம்: போஸ்டர் வைத்து மீண்டும் உறுதிப்படுத்திய மருத்துவர் ராமதாஸ்

Byadmin

Sep 3, 2026


அரசியல் துறவறம் மேற்கொண்டுள்ளதால் தன்னை சந்திப்பவர்கள் அரசியல் பேசவேண்டாம் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மீண்டும் அறிவித்துள்ளார்.

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நிலவி வந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து பா.ம.க. நிறுவர் ராமதாஸ் தான் அரசியல் துறவறம் மேற்கொள்வதாக அறிவித்து இருந்தார்.

அரசியல் பேசவேண்டாம்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கோனேரிக்குப்பத்தில் உள்ள சரஸ்வதி கல்லூரியில் கடந்த ஜீலை 25-ஆம் தேதி நடைபெற்ற தனது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராமதாஸ், நான் இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். கட்சிப் பணிகளை அன்புமணி பார்த்துக்கொள்வார். என்னிடம் இனி யாரும் அரசியல் பேசவேண்டாம் என அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் ஓய்வில் இருந்து வருகிறார். கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அவரை சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

அறிவிப்பு பதாகை:

அரசியல் குறித்த கோரிக்கையை தொடர்ந்து தைலாபுரம் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பதாகையில், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் அரசியல் துறவறம் மேற்கொண்டுள்ளதால், பார்வையாளர்கள் தயவு செய்து அரசியல் பேசவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

இத்துடன் அந்த பதாகையில், தினந்தோறும் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பார்வையாளர்கள் சந்திக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ராமதாஸின் அரசியல் துறவறம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முடிவுக்கு வந்த மோதல்:

முன்னதாக பா.ம.க.வில் யாருக்கு அதிகாரம் என்பதில் மருத்துவர் ச.ராமதாஸ்- அன்புமணி ஆகியோரிடையே மோதல் போக்கு உருவானது. இதையடுத்து இருவரும் தனித் தனியாக கட்சிப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். கட்சியின் நிர்வாகிகளையும் தனித் தனியாக அறிவித்தனர். இதனால் கட்சியினரிடையே பிளவு ஏற்பட்டது. பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்திக்குள்ளாகினர்.

இந்நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்கு பின்னர் அன்புமணி ராமதாஸ் தனது குடும்பத்தினருடன் தைலாபுரம் தோட்டத்துக்கு வந்து மருத்துவர் ராமதாஸ்- சரஸ்வதி தம்பதியினரிடம் ஆசி பெற்ற நிலையில், தந்தை – மகன் இடையே இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.

By admin