7
சீனாவில் நடைபெற்ற 6-வது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளின் ஒரு அங்கமான கடற்கரை கபடிப் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்ற இலங்கை ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் நேற்று புதன்கிழமை (29) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.
இப்போட்டியில் இலங்கை பெண்கள் அணி வெள்ளிப் பதக்கத்தையும், இலங்கை ஆண்கள் அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளன.
ஆசிய பிராந்திய நாடுகளின் பங்கேற்புடன் இப்போட்டிகள் கடந்த ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 29 வரை சீனாவின் சான்யா நகரில் நடைபெற்றன.
குறித்த வீரர், வீராங்கனைகள் 04/29 அன்று இரவு 7.00 மணியளவில் சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து ‘சைனா ஈஸ்டர்ன்’ விமான சேவைக்கு சொந்தமான MU-6017 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
வெற்றி வீரர்களை வரவேற்பதற்காக விளையாட்டு அமைச்சின் உயர் அதிகாரிகள், முப்படை விளையாட்டுப் பிரிவுகளின் அதிகாரிகள் மற்றும் வீரர்களின் பெற்றோர்கள் என பலரும் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.


