• Wed. Nov 25th, 2026

24×7 Live News

Apdin News

ஆசிய கிண்ண உதய தாரகைகள் கிரிக்கெட் | அரை இறுதிக்கு முன்னேறியது இலங்கை ஏ அணி

Byadmin

Nov 25, 2026


பங்களாதேஷ் ஏ அணிக்கு எதிராக கத்தார், தோஹா வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற ஏ குழுவுக்கான ஆசிய கிண்ண உதய தாரகைகள் (Asia Cup Rising Stars) 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை ஏ அணி மிக இலகுவாக 7 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

இதன் மூலம் தனது மூன்றாவது தொடர்ச்சியான வெற்றியை ஈட்டிய இலங்கை ஏ அணி தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

இலங்கை ஏ அணி தனது ஆரம்பப் போட்டியில் ஆப்கானிஸ்தான் ஏ அணியை 6 விக்கெட்களாலும் ஹொங்கொங் அணியை 24 ஓட்டங்களாலும் வெற்றிகொண்டிருந்தது.

பங்களாதேஷ் ஏ அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 146 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 21.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இலங்கை ஏ அணி துடுப்பாட்டத்தில் நிஷான் மதுஷ்க ஆட்டம் இழக்காமல் 51 ஓட்டங்களையும் அணித் தலைவர் பவன் ரத்நாயக்க 45 ஓட்டங்களையும் லசித் குரூஸ்புள்ளே 29 ஓட்டங்களையும் பெற்றனர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் ஏ அணி 42.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் பர்வெஸ் ஹொசெய்ன் இமொன் 32 ஓட்டங்களையும் இப்தகார் ஹொசெய்ன் இப்தி 31 ஓட்டங்களையும் அணித் தலைவர் சய்ப் ஹசன் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ரவிந்து பெர்னான்டோ 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வனுஜ சஹான் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் விஜயகாந்த் வியாஸ்காந்த் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இப் போட்டி முடிவை அடுத்து வியாழக்கிழமை நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதிப் போட்டியில் விளையாட இலங்கை ஏ அணி தகுதிபெற்றுள்ளது. அரை இறுதியில் இந்திய ஏ அணியை அல்லது பாகிஸ்தான் ஏ அணியை இலங்கை ஏ அணி எதிர்த்தாடும்.

By admin