ஞாயிற்றுக்கிழமை துபையில் நடைபெற்ற மகளிர் டி20 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மற்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற மறுத்தது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் என்ற முறையில் மொஹ்சின் நக்வி அங்கு இருந்தார்.
இந்தப் போட்டியில் இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பிறகு, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தனது அணியினருடன் வெற்றியைக் கொண்டாடினார். ஆனால், அணியை எட்டாவது ஆசியக் கோப்பை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஹர்மன்ப்ரீத் கவுர், கோப்பையைப் பெறுவதற்கான பரிசளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இலங்கை அணி 20 ஓவர்களில் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தச் சம்பவத்தை விளையாட்டில் உள்ள பண்பு தொடர்பான விவகாரமாக பாகிஸ்தான் குறிப்பிட்டது. விளையாட்டில் பண்பு இல்லையென்றால், வெற்றிக்கும் தோல்விக்கும் அர்த்தமில்லை என்று பாகிஸ்தான் கூறியது.
2025-ஆம் ஆண்டிலும், பாகிஸ்தானை வீழ்த்தி ஆசியக் கோப்பையை வென்ற பிறகு, இந்திய ஆடவர் அணி மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற மறுத்திருந்தது.
துபையில் நடைபெற்ற இந்தப் போட்டி உள்ளூர் நேரப்படி இரவு 9.55 மணிக்கு முடிவடைந்தது. ஆனால், பரிசளிப்பு விழா தொடங்க சுமார் 40 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அதன்பிறகு மைதானத்தில் சில நடவடிக்கைகள் நடைபெற்றன.
நடுவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாம் இடம் பிடித்த இலங்கை அணி வீராங்கனைகள் பதக்கங்களைப் பெறத் தயாராக இருந்தனர்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து இலங்கை அணியின் கேப்டன் சமரி அத்தபத்து பரிசுத் தொகைக்கான காசோலையைப் பெற்றுக்கொண்டார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மொஹ்சின் நக்வி கலந்துகொண்டதால், சர்ச்சை ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்கெனவே இருந்தது.
2025-ஆம் ஆண்டு மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டதிலிருந்து, இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு இந்திய ஆடவர் அணி இதேபோல் நடந்துகொண்ட நிலையில், இந்த ஆண்டு இந்திய மகளிர் அணியும் அதே நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்திய அணியின் பயிற்சியாளரும் பிசிசிஐ செயலாளரும் கூறியது என்ன?
பட மூலாதாரம், Alex Davidson-ICC/ICC via Getty Images
படக்குறிப்பு, அமோல் மஜும்தார்
இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் அமோல் மஜும்தார் செய்தியாளர் சந்திப்பில், “பிசிசிஐ எடுத்துள்ள நிலைப்பாட்டை நாங்கள் ஆதரிக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை இந்தத் தொடர் முடிந்துவிட்டது. நாங்கள் சாம்பியன்கள். அது எங்களுக்குப் போதுமானது. 2026 ஆசியக் கோப்பையின் சாம்பியன் இந்தியா என்று பெரிய திரையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. எங்களைப் பொறுத்தவரை இந்தத் தொடர் அதிகாரப்பூர்வமாக முடிந்துவிட்டது. சாம்பியன்களாக இருப்பதில் மகிழ்ச்சி” என்றார்.
பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸிடம் கூறுகையில்,”ஆசியக் கோப்பையில் கோப்பை என்பது ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக உள்ளது. எங்கள் ஆடவர் அணி ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கோப்பையை வென்றது. மேலும், 2025 ஏப்ரலில் நடைபெற்ற பஹல்காம் சம்பவத்திற்குப் பிறகு ஒட்டுமொத்த சூழ்நிலையும் மாறிவிட்டது. அதன் பின்னர், அண்டை நாட்டுடன் எந்தவிதமான தொடர்பும் வைத்திருக்கக் கூடாது, அவர்களுடன் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்று எங்கள் நாட்டின் குடிமக்களிடமிருந்து எங்களுக்கு அழுத்தம் ஏற்பட்டது. ஆனால், எங்கள் அரசாங்கத்தின் கொள்கைப்படி, பன்னாட்டு தொடர்களில் அனைத்து நாடுகளுக்கும் எதிராக நாங்கள் விளையாட வேண்டும்.”என்றார்.
மொஹ்சின் நக்வியைச் சந்தித்தது குறித்து அவர் கூறுகையில், ”நாங்கள் யாரையும் சந்திக்கமாட்டோம் என்பது போல இல்லை. நான் டாஸ் போடப்பட்ட தருணத்திலிருந்து போட்டி முடியும் வரை ராயல் பாக்ஸ் இருக்கைகளுக்கு வெளியே அமர்ந்திருந்தேன். அங்கே அமர்ந்தபடியே போட்டி முழுவதும் அதே இடத்தில் இருந்தேன். போட்டியின் போது வந்த அனைவரும் என்னைச் சந்தித்தார்கள். ஒருவர் வந்து என் அருகில் அமர்ந்தார். பின்னர் ராஜீவ் ஷுக்லா வந்து என்னுடன் அமர்ந்தார். நீங்கள் குறிப்பிடும் அந்த நபரும் (மொஹ்சின் நக்வி) துணைத் தலைவர் காலித் சாஹிப் உடன் வந்து அருகில் அமர்ந்தார். இது ஒரு சாதாரண மரபுதான். யார் வந்தாலும், நாங்கள் அவர்களைச் சந்தித்து உரையாடுவோம்..” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
இந்திய அணி கோப்பையைப் பெற மறுத்தது மிகவும் வருத்தமளிக்கும் செயல் என்று பாகிஸ்தான் உள்துறை இணையமைச்சர் தலால் சௌத்ரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் டான் செய்தி இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஜியோ நியூஸ் தொலைக்காட்சியிடம் பேசிய அவர், “இந்தியாவின் ராஜ்ஜிய மற்றும் ராணுவத் தோல்வியை இது மறைத்துவிடாது” என்று கூறினார்.
இந்தியா “விளையாட்டுக் கலாசாரத்தை அழித்து வருவதாகவும்” அவர் குற்றம்சாட்டினார்.
“விளையாட்டில் உள்ள பண்பு முக்கியமானது. விளையாட்டுப் பண்பு இல்லையென்றால், வெற்றிக்கும் தோல்விக்கும் எந்த அர்த்தமும் இல்லை,” என்று தலால் சௌத்ரி கூறினார்.
விளையாட்டை அரசியலின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் மாற்றவில்லை என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலுக்கு அதை ஒரு கருவியாகவும் பயன்படுத்தவில்லை என்றும் இணையமைச்சர் தெரிவித்தார்.
மேலும், “சர்ச்சைக்குரிய அனைத்து விவகாரங்கள் குறித்தும்” பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கூறியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்
பொதுவாக, போட்டி முடிந்த பிறகு நடைபெறும் விருது வழங்கும் விழாவில் வெற்றி பெற்ற அணியின் கேப்டனிடம் நேர்காணல் நடத்தப்படும். ஆனால், இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சில நிமிடங்களுக்குப் பிறகு, ஹர்மன்ப்ரீத் கவுரிடம் தனியாகவே நேர்காணல் நடத்தப்பட்டது.
“நாங்கள் நிர்ணயித்திருந்த தரத்துக்கு ஏற்ப விளையாடியிருக்கிறோம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், நாங்கள் இங்கு வந்தபோது இதைப் பற்றித்தான் பேசினோம். எங்களுக்கு என்று சில தரநிலைகள் உள்ளன. ஒவ்வொரு நாளும் அந்தத் தரத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டும். நாங்கள் அனைவரும் செயல்பட்ட விதம் குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்தத் தொடர் முழுவதும் வீராங்கனைகள் சிறப்பாகச் செயல்பட்டனர். இறுதிப் போட்டியில் 184 ரன்கள் எடுத்தது மிகப்பெரிய விஷயம்,” என்றார் ஹர்மன்ப்ரீத் கவுர்
ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மாவை ஹர்மன்ப்ரீத் குறிப்பாகப் பாராட்டினார். இருவரும் தொடக்க வீராங்கனைகளாகக் களமிறங்கி, முதல் விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக விளையாடி அரைசதங்களைக் கடந்து அணிக்கு வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தினர்.
ஹர்மன்ப்ரீத் கூறுகையில், “துபையின் மெதுவான ஆடுகளங்களில் பேட்டிங் செய்வது எளிதாக இருக்காது என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், எங்களது இரு தொடக்க வீராங்கனைகளும் சிறப்பாகச் செயல்பட்டனர். ஸ்மிருதியும் ஷஃபாலியும் பேட்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தது. இறுதியில், சிறப்பான கிரிக்கெட்டை விளையாடுவதுதான் முக்கியம். ஒட்டுமொத்தமாக நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,” என்றார்.