• Tue. Oct 27th, 2026

24×7 Live News

Apdin News

ஆசிய சாதனையாளர் விருது விழாவில் ஊடகவியலாளர் சதீஷுக்கு ‘Community Impact Influencer’ விருது

Byadmin

Oct 27, 2026


இங்கிலாந்தின் இலண்டன், ஹீத்ரோ பகுதியில் அமைந்துள்ள பிரபல Radisson Blu ஹோட்டலில் கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற ‘Asian Influencers Awards 2026’ விருது வழங்கும் நிகழ்வில், ஈழத்துப் பூர்வீகத்தைக் கொண்ட பிரபல ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி சதீஷன் (சதீஷ்) ‘Community Impact Influencer’ விருதைப் பெற்றுள்ளார்.

Centurion Staunch Nexus அமைப்பினால் நான்காவது தடவையாக ஒழுங்கமைக்கப்பட்ட இவ்விருது வழங்கும் நிகழ்வானது, இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட முன்னணிச் சமூக மற்றும் ஊடக ஆளுமைகளை கௌரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதான ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகப் பரப்பில் தனித்துவமான பங்களிப்பை வழங்கி, சமூகத்தில் காத்திரமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ஆளுமைகளின் சேவைகளை அங்கீகரிப்பதே, இதன் பிரதான நோக்கமாகும்.

அந்த வகையில் பேஷன் மற்றும் வாழ்க்கை முறை, பொழுதுபோக்கு மற்றும் கலைகள், உணவு மற்றும் சுற்றுலா, வணிகம் மற்றும் தொழில்சார் துறைகள், சுகாதாரம் மற்றும் நலவாழ்வு, உள்ளடக்க உருவாக்காளர்கள் மற்றும் சமூகத் தாக்கம் ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு இதன்போது விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

ஊடகத்துறையில் நீண்டகால அனுபவத்தைக் கொண்ட ஊடகவியலாளர் சதீஷ், அரசியல், சமூகம் மற்றும் கலை கலாசார நிகழ்ச்சிகளின் ஊடாக உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்தவர் ஆவார். 2008ஆம் ஆண்டு இலங்கையின் வெற்றி எஃப்.எம். வானொலியில் தனது ஊடகப் பணியை ஆரம்பித்த இவர், பின்னர் சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான புகழ்பெற்ற ‘Shakthi the Debater’ நிகழ்ச்சியின் முதலாவது தொடரின் தயாரிப்பாளராகவும் செயற்பட்டிருந்தார்.

பின்னர் புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் குடியேறிய சதீஷ், அங்கு இயங்கிவந்த ILC தமிழ் வானொலியின் நிகழ்ச்சிப் பணிப்பாளராகவும், தொடர்ந்து IBC தமிழ் ஊடக நிறுவனத்தின் வானொலிப் பிரிவின் தலைவராகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பொறுப்புக்களை வகித்தார். குறிப்பாக அவர் நெறிப்படுத்திய ‘மனங்கள் பேசட்டும்’ மற்றும் இலங்கை, இந்திய, புலம்பெயர் அரசியல் செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து வழங்கிய ‘செய்திகளுக்கு அப்பால்’ ஆகிய நிகழ்ச்சிகள் தமிழ் ஊடகப் பரப்பில் பெரும் கவனத்தைப் பெற்றிருந்தன.

தற்போது பிரதான ஊடக நிறுவனங்களிலிருந்து விலகி, ‘வெற்றித் தமிழா’ (Vettri Thamizha) என்ற டிஜிட்டல் தளம் மற்றும் யூடியூப் தளம் ஊடாகச் சுயாதீனமாக ஊடகப் பணிகளை மேற்கொண்டுவரும் நிலையில், புலம்பெயர் மண்ணில் அவரது சமூகப் பங்களிப்பை அங்கீகரித்து, இந்த சர்வதேச விருது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலண்டனில் நடைபெற்ற ஆசிய சாதனையாளர் விருது விழாவில் ஊடகவியலாளர் சதீஷுக்கு ‘Community Impact Influencer’ விருது

By admin