7
அய்ச்சி – நகோயாவில் நடைபெற்றுவரும் ஐந்தாவது ஆசிய பரா விளையாட்டு விழாவில் நேற்றைய தினம் இலங்கைக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
நகோயா சிட்டி ஜெனரல் ஜிம்னாசியம் ரெய்ன்போ தடாகத்தில் புதன்கிழமை (21) நடைபெற்ற S9 வகைப் பிரிவு பெண்களுக்கான 400 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியில் இலங்கை மாற்றுத்திறனாளி கலினா பஸ்நாயக்க வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அப் போட்டியை 4 நிமிடங்கள், 59.58 செக்கன்களில் நீந்திக்கடந்தே அவர் வெள்ளிப்பதக்கத்தை வென்றெடுத்தார்.
அப் போட்டியில் சீனாவின் மாற்றுத்திறனாளி ஜியாலிங் சூ (4:56.07) தங்கப் பதக்கத்தையும் ஜப்பான் மாற்றுத்திறனாளி எம்மா மயேடா (5:21.04) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
கலினா வென்ற பதக்கத்துடன் இலங்கைக்கு இதுவரை இரண்டு வெள்ளிப் பதக்கங்களும் ஒரு வெண்கலப் பதக்கமும் கிடைத்துள்ளன.
இதேவேளை S9 வகைப் பிரிவு ஆண்களுக்கான நீச்சல் போட்டியில் இலங்கை மாற்றுத்திறனாளி நவீட் ரஷீன் (4:33.18) நான்காம் இடத்தைப் பெற்றார்.

