• Fri. Nov 6th, 2026

24×7 Live News

Apdin News

‘ஆந்திராவில் கரை ஒதுங்கிய 8 உடல்கள்’ சென்னை காசிமேடு மீனவர்களின் உடல்களா? கண்டறிவதில் சிரமம் ஏன்?

Byadmin

Nov 6, 2026



'ஆந்திராவில் கரை ஒதுங்கிய 8 உடல்கள்'  சென்னை காசிமேடு மீனவர்களின் உடல்களா? கண்டறிவதில் சிரமம் ஏன்?

படக்குறிப்பு, கோப்புப்படம்

ஆந்திர மாநிலம் கொத்தபட்டணம் கடற்கரையில் எட்டு மீனவர்களின் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. நவம்பர் 2-ஆம் தேதி ஆந்திர கடலில் இருந்த சென்னை காசிமேட்டைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள் காணாமல் போன நிலையில், ‘அவர்களின் உடல்கள்தானா?’ என்பதைக் கண்டறிய குழு ஒன்று சென்றுள்ளதாக, மீன்வளத்துறை இயக்குநர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

காசிமேடு மீனவர்கள் காணாமல் போன விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன?

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து செல்வழகன் என்பவருக்குச் சொந்தமான படகு கடந்த மாதம் 29-ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றது.

பத்து நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களுடன் சூர்யா என்பவர் படகை ஓட்டிச் சென்றுள்ளார். அவருடன் எட்டு மீனவர்கள் பயணம் செய்துள்ளனர். கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி ஆந்திர மாநிலம் நிஜாம் பட்டணம் அருகே இவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது புயல் தொடர்பான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. இதனை அறிந்து படகை பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சென்று நிறுத்துமாறு தான் அறிவுறுத்தியதாக படகின் உரிமையாளர் செல்வழகன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.



By admin