• Sat. Jul 11th, 2026

24×7 Live News

Apdin News

ஆயிரம் ஆண்டுகள் பழமையான பேயக்ஸ் திரைச்சீலை இங்கிலாந்துக்கு வந்தடைந்தது!

Byadmin

Jul 11, 2026


பிரான்ஸின் வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப் பொக்கிஷங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பேயக்ஸ் (Bayeux) திரைச்சீலை, நேற்று அதி உச்ச பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இங்கிலாந்துக்கு உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வரலாற்றுப் பொருள் இங்கிலாந்துக்கு வந்தடைந்ததைத் தொடர்ந்து, பிரான்ஸ் அரசாங்கத்துக்கு இங்கிலாந்து தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.

பிரான்ஸில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ரகசிய இடமொன்றிலிருந்து, வெப்பநிலை கட்டுப்பாட்டுடன் கூடிய சிறப்பு சரக்கு வாகனத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திரைச்சீலை இங்கிலாந்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த அரிய கலைப்பொருளை வரவேற்கும் வகையில், இங்கிலாந்து அருங்காட்சியகம் டோவரின் புகழ்பெற்ற வெள்ளைப் பாறைகளின் மீது “Merci” (நன்றி) என்ற பிரெஞ்சு வார்த்தையுடன் பேயக்ஸ் திரைச்சீலையின் உருவப் பிரதியை ஒளிக்காட்சியாக வெளிப்படுத்தியது. இந்த நிகழ்வு, இரு நாடுகளுக்கிடையிலான கலாசார மற்றும் வரலாற்று உறவுகளை வெளிப்படுத்தும் குறியீடாக அமைந்தது.

சுமார் 70 மீட்டர் நீளமுடைய பேயக்ஸ் திரைச்சீலை, 1066 ஆம் ஆண்டு நடைபெற்ற நார்மன் படையெடுப்பு மற்றும் இங்கிலாந்தை கைப்பற்றிய வில்லியம் தி காங்கரரின் வரலாற்றுச் சம்பவங்களை நுணுக்கமான எம்பிராய்டரி வடிவில் சித்தரிக்கும் உலகப் புகழ்பெற்ற கலைப்படைப்பாகும்.

இந்தத் திரைச்சீலை உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இங்கிலாந்து மண்ணில் காட்சிப்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைப் பார்வையிட ஆயிரக்கணக்கான வரலாற்று ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

By admin