19
இங்கிலாந்தில் இரு சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்த மூன்று சிறுவர்களுக்குச் சிறைத்தண்டனை வழங்கப்படாமல், சமூக சேவை உள்ளிட்ட ‘மறுவாழ்வு ஆணைகள்’ வழங்கப்பட்டுள்ளமை, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தீர்ப்பை இங்கிலாந்துப் பிரதமர் பிரதமர் கீர் ஸ்டார்மர் “மிகவும் மோசமானது” என்று விவரித்துள்ளார்.
2024 நவம்பர் மற்றும் 2025 ஜனவரி மாதங்களில் ஹாம்ப்ஷயரின் (Hampshire) ஃபோர்டிங் பிரிட்ஜ் பகுதியில் 15 மற்றும் 14 வயதுடைய இரு சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டனர்.
இந்தச் செயலில் ஈடுபட்ட 15 வயது சிறுவர்கள் இருவர் மற்றும் 14 வயது சிறுவன் ஆகியோருக்கு சவுதாம்ப்டன் கிரவுன் நீதிமன்றம் (Southampton Crown Court) தீர்ப்பளித்தது. அவர்கள் அந்தப் பலாத்காரச் சம்பவங்களைத் தங்களது கைபேசிகளில் படம்பிடித்து இணையத்திலும் பகிர்ந்திருந்தனர்.
நீதிபதி நிக்கோலஸ் ரோலண்ட், இந்தச் சிறுவர்களை “தேவையின்றி குற்றவாளிகளாக மாற்றுவதைத் தவிர்க்க விரும்புவதாகக்” கூறி, அவர்களுக்குச் சிறைத்தண்டனைக்கு மாற்றாக ‘இளைஞர் மறுவாழ்வு ஆணைகளை’ (Youth Rehabilitation Orders – YRO) வழங்கினார். இதன்மூலம் அவர்கள் தீவிரக் கண்காணிப்பு மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி ஒருவர் பிபிசி செய்திக்கு அளித்த பேட்டியில், இந்தத் தீர்ப்பு தனது “முகத்தில் ஒரு கல்லை எறிந்தது போல்” இருப்பதாகத் தெரிவித்தார். “நான் ஏன் நீதிமன்றத்திற்குச் சென்று அந்த வேதனையான அனுபவங்களை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும்? அவர்கள் சிறுவர்கள் என்பதால், அவர்கள் செய்தது சட்டத்தின் பார்வையில் சரியாகிவிடுமா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் மிகுந்த துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும், இந்தத் தீர்ப்பு குறித்து அட்டர்னி ஜெனரல் (Attorney General) அவசரமாக ஆய்வு செய்வது சரியானது என்றும் பிரதமர் பரிந்துரைத்துள்ளார்.
அட்டர்னி ஜெனரல் லார்ட் ரிச்சர்ட் ஹெர்மர், இந்தத் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டுமா என்பதை 28 நாட்களுக்குள் முடிவு செய்வார்.
சட்ட வல்லுநர்கள் மற்றும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இத்தீர்ப்பு பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாகவும், குற்றவாளிகளுக்குத் தவறான செய்தியை அனுப்புவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் கெமி பேடனாக், இந்தக் குற்றத்திற்கான தண்டனை மிகக் குறைவாக இருப்பதாகக் கூறி, தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.