4
போருக்கு நாடு தயாராக இருக்க வேண்டும் என கடந்த ஆண்டு எச்சரித்திருந்தாலும், அவசரநிலை அல்லது ஆயுதத் தாக்குதல் ஏற்பட்டால் மக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த தெளிவான பொது வழிகாட்டுதலை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன
உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் தேசிய தயார்நிலை தொடர்பான விவாதங்கள் தற்போது அரசாங்க மட்டத்தில் மறைமுகமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், நாடு தாக்குதலுக்கு உள்ளானால் முக்கிய பங்கு வகிக்க வேண்டிய உள்ளுராட்சி அமைப்புகள் மற்றும் தன்னார்வ நிறுவனங்களுக்கு தேவையான தயாரிப்பு மற்றும் பயிற்சி குறித்த தெளிவான அறிவுறுத்தல்கள் இதுவரை வழங்கப்படவில்லை என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அவசரநிலைகளில் சமூகங்களுக்கு உதவுவதற்கான பொறுப்பு கொண்ட உள்ளூர் மீள்திறன் மன்றங்கள் (Local Resilience Forums), போர்க்காலத் திட்டமிடலில் அதிக அனுபவமும் தயாரிப்பும் பெற வேண்டும் என்று பல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்காக அமைச்சரவை அலுவலகத்தின் ஒருங்கிணைப்பும், திரைசேரியில் கூடுதல் நிதியும் அவசியம் என கூறப்படுகிறது. ஏற்கனவே உள்ளூராட்சி அமைப்புகள் நிதி பற்றாக்குறையை சந்தித்து வரும் நிலையில், நாட்டை முழுமையாகத் தயார்படுத்த புதிய பயிற்சிகள், நிபுணத்துவம் மற்றும் பொறுப்புகள் தேவைப்படும் என மதிப்பிடப்படுகிறது.
இதேபோன்ற தயார்நிலை நடவடிக்கைகள் பனிப்போர் காலத்தில் நடைமுறையில் இருந்தன. அப்போது மத்திய அரசு முதல் கிராமப்புற பாடசாலைகள் வரை சமூகத்தின் அனைத்து மட்டங்களும் போருக்கான தயாரிப்பில் இணைக்கப்பட்டிருந்தன.
அந்த காலத்தில் “Government War Book” என அழைக்கப்பட்ட திட்டத்தின் கீழ், காப்புப் படைகளை திரட்டுதல், மருத்துவமனைகளில் இடவசதி ஏற்படுத்துதல், உணவு மற்றும் எரிபொருள் பங்கீடு செய்தல் போன்ற நடவடிக்கைகள் திட்டமிட்டு, தொடர்ந்து ஒத்திகை செய்யப்பட்டன.