15
மத்திய கிழக்கில் நிலவும் தொடர்ச்சியான போர்ச் சூழல் காரணமாக விலைவாசி உயர்வு தீவிரமடைந்து வருகின்ற போதிலும், இங்கிலாந்து வங்கி தனது பிரதான வட்டி விகிதங்களில் உடனடியாக மாற்றங்களைச் செய்யாது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதுடன், பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை அதிகரித்து வரும் பின்னணியில் இங்கிலாந்து வங்கியின் 09 உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கைக் குழு கூடி ஆராய்ந்துள்ளது.
நாணயக் கொள்கைக் குழு தனது அடிப்படை வட்டி விகிதத்தை தொடர்ச்சியாக ஆறாவது தடவையாகவும் 3.75 வீதத்தில் வைத்திருக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
இருப்பினும், இந்த ஆண்டின் இறுதிக்குள் வட்டி விகிதம் மேலும் அதிகரிக்கப்பட வேண்டுமா என்பது தொடர்பில் ஆய்வாளர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பொதுமக்களுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கும் கடன்கள் மற்றும் சேமிப்புகளுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயிப்பதில் இந்த அடிப்படை விகிதமே பிரதான வழிகாட்டியாக அமைகிறது. இது தொடர்பான உத்தியோகபூர்வ தீர்மானம் இங்கிலாந்து நேரப்படி வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு வங்கியினால் அறிவிக்கப்படவுள்ளது.
கடந்த ஜூலை மாத இறுதியில் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர், ஈரான் மீதான போர் தீவிரமடைந்தால் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படலாம் என நாணயக் கொள்கைக் குழு சூசகமாகத் தெரிவித்திருந்தது.
மோதல்கள் தொடர்வதுடன் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டொலருக்கு மேல் நீடிக்குமானால் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் அன்ட்ரூ குறிப்பிட்டிருந்தார்.
செப்டெம்பர் 9 ஆம் திகதி முதல் மசகு எண்ணெய் விலை 100 டொலரைத் தாண்டி தொடர்ந்து உயர் மட்டத்தில் நீடித்து வரும் நிலையில், போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் அரிதாகவே காணப்படுகின்றன.