0
இங்கிலாந்தின் சில பகுதிகளில் இந்த வாரம் நீடித்த வெப்ப அலை, இன்று செவ்வாய்க்கிழமையுடன் ஒரு முடிவுக்கு வருகிறது. எனினும், இந்த மாற்றத்தின் போது சில இடங்களில் பலத்த இடி, மின்னல் மற்றும் திடீர் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தெற்கு மற்றும் கிழக்கு இங்கிலாந்தின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வெப்பநிலை 30°Cக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வொர்செஸ்டர்ஷையர் (Pershore) மற்றும் சஃபோல்க் (Cavendish) ஆகிய இடங்கள் ஏற்கெனவே தொடர்ந்து மூன்று நாட்களாக வெப்ப அலையின் உச்சத்தை எட்டியுள்ளன.
இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளில் நாளை புதன்கிழமை காலை 9 மணி வரை ஆம்பர் (Amber) மற்றும் மஞ்சள் நிற வெப்ப சுகாதார எச்சரிக்கைகள் அமலில் இருக்கும்.
வடக்கு அயர்லாந்தின் சில பகுதிகளுக்கு மதியம் 12 மணி முதல் இரவு 09 மணி வரை இடி,மின்னலுக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு சில மணிநேரங்களில் 30 மி.மீ வரை மழை பெய்யக்கூடும் என்பதோடு, பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழைக்கும் வாய்ப்புள்ளது.
நீண்ட நாட்களாக மழை இல்லாததால் மண் மிகவும் காய்ந்து போயுள்ளது. இதனால் திடீரென பெய்யும் பலத்த மழையை நிலத்தால் உடனடியாக உறிஞ்ச முடியாது என்பதால், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த மழை தற்போதைய வறட்சி நிலையை மாற்ற போதுமானதாக இருக்காது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் வரலாற்றிலேயே ஜூலை மாதம் மிகவும் வறண்ட மாதமாக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக சுமார் 2 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள குழாய் நீர் பயன்பாட்டுத் தடை விரைவில் நீக்கப்பட வாய்ப்பில்லை என்று கணிக்கப்பட்டுள்ளது.