பட மூலாதாரம், Daniel Heuer/Bloomberg via Getty Images
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
இந்தியாவில் தனது நிறுவனமான ‘ஸ்டார்லிங்’-இன் செயற்கைக்கோள் வழி இணையச் சேவையைத் தொடங்க, சில முக்கிய தொழிலதிபர்கள் முட்டுக்கட்டை போடுவதாக பிரபல தொழிலதிபர் ஈலோன் மஸ்க், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மஸ்க்கின் இந்தக் குற்றச்சாட்டுகளை இந்திய அரசு மறுத்துள்ளது.
இந்தியாவின் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பு நியாயமானது மற்றும் பாகுபாடற்றது என்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அக்டோபர் 8 அன்று தெரிவித்தது.
அரசின் கூற்றுப்படி, ஸ்டார்லிங் உட்பட மூன்று நிறுவனங்கள் தற்போது பாதுகாப்புச் சோதனைகள் அடங்கிய ஒரே ஒழுங்குமுறை கட்டத்தில் உள்ளன.
“ஸ்டார்லிங் 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் உரிமம் பெற்றுள்ளது; இந்திய அரசின் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய இந்நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறது. அப்படியிருந்தும், இந்தியாவில் முழுமையாகச் சேவையைத் தொடங்க ஏன் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை? இந்தியாவின் உண்மையான தலைவர் அம்பானிதானா?” என்று அக்டோபர் 8 அன்று இன்ஸ்டாகிராம் பதிவில் ஈலோன் மஸ்க் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, இந்தியாவில் ஸ்டார்லிங் சேவைக்குத் தடை ஏற்படுத்தப்படுவதாகக் கூறப்படுவது குறித்துப் பேசிய மஸ்க், தங்கள் ஏகபோக ஆதிக்கத்தைப் பாதுகாப்பதற்காகச் சில செல்வாக்கு மிக்க தொழிலதிபர்கள் – ஸ்டார்லிங் இந்தியாவுக்கு வருவதைத் தடுப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.
“துரதிர்ஷ்டவசமாக, இந்திய மக்கள் மீதான தங்கள் ஏகபோக ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளச் சில தொழிலதிபர்களால் நாங்கள் தடுக்கப்படுகிறோம். அவர்கள் யார் என்று உங்களால் யூகிக்க முடியும்… இது இந்திய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி,” என்று ஒரு பதிவுக்கு அளித்த பதிலில் அவர் எழுதியிருந்தார்.
மஸ்க் பகிர்ந்த பதிவில் “இந்தியாவின் பல கிராமங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் அதிவேக இணைய வசதி இன்னும் குறைவாகவே உள்ளது. ஃபைபர் அல்லது மொபைல் நெட்வொர்க்குகள் சென்றடையக் கடினமான பகுதிகளுக்கும் தங்கள் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் அதிவேக இணையத்தை வழங்க முடியும் என்று ஸ்டார்லிங் கூறுகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் 20 ‘கேட்வே’ தளங்களையும் தயார் செய்துள்ளது. கல்வி, தொலைதூர மருத்துவச் சேவை, சிறு தொழில்கள் மற்றும் பேரிடர் காலங்களில் இணைப்பு வசதி ஆகியவற்றுக்கு ஸ்டார்லிங் உதவக்கூடும். இந்தியாவில் சேவையைத் தொடங்கத் தயாராக இருப்பதாக இந்நிறுவனம் கூறுகிறது; ஆனால் அதற்கு மற்ற அனுமதிகள் மற்றும் அலைக்கற்றை (spectrum) ஒதுக்கீடு ஆகியவை நிறைவு செய்யப்பட வேண்டும்.” என்று கூறியிருந்தார்.
பட மூலாதாரம், Matteo Della Torre/NurPhoto via Getty Images
இந்திய அரசின் பதில் என்ன?
ஸ்டார்லிங் நிறுவனத்திற்கு எதிராக எந்தப் பாகுபாடும் காட்டப்படவில்லை என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தியாவின் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைக்கான விதிமுறைகள் அனைவருக்கும் நியாயமானதாகவும் சமமானதாகவும் உள்ளன. இந்தியாவின் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவை விதிமுறைகளின் நியாயத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சமூக ஊடகங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இந்த விதிமுறைகள் பாகுபாடு காட்டும் வகையில் செயல்படுத்தப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் தகவல் தொடர்பு உட்பட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளுக்கும் நியாயமான மற்றும் பாகுபாடற்ற விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.
அரசின் கூற்றுப்படி, “செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகளுக்காக மூன்று நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் உரிமத்தின் நிபந்தனைகளின்படி பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும்.”
பயனர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் தரவு பாதுகாப்பு தொடர்பான அனைத்து விதிகளையும் இந்த நிறுவனங்களின் சேவைகள் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதே தனது நோக்கம் என்று அரசு கூறியுள்ளது.
அரசின் தகவலின்படி, “மூன்று நிறுவனங்களின் பாதுகாப்பு தணிக்கை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஒரு நிறுவனம் இந்த செயல்முறையை முடித்தவுடன், அது அலைக்கற்றை (spectrum) ஒதுக்கீட்டின் அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம். தற்போது, மூன்று நிறுவனங்களும் ஏறக்குறைய ஒரே ஒழுங்குமுறை நிலையில் உள்ளன. எனவே, விதிகள் அல்லது அவற்றைச் செயல்படுத்துவதில் பாகுபாடு காட்டப்படுகிறது என்று கூறுவது ஆதாரமற்றது மற்றும் தவறானது.”
ஏர்டெல் என்ன கூறியது?
பட மூலாதாரம், Getty Images
தனது செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனமான ‘ஸ்டார்லிங்’ (Starlink) இந்தியாவில் செயல்படுவதைத் தடுக்கிறார்கள் என்ற ஈலோன் மஸ்க்கின் குற்றச்சாட்டை தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல்லும் மறுத்துள்ளது.
பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் பார்தி மிட்டல், தனது செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனமான ‘யூடெல்சாட் ஒன்வெப்’ (Eutelsat OneWeb) நிறுவனமும் இந்தியாவில் சேவைகளைத் தொடங்க ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகக் கூறினார்.
ஸ்டார்லிங் என்றால் என்ன?
ஸ்டார்லிங்க் என்பது மஸ்க்கின் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)-ன் செயற்கைக்கோள் இணைய சேவையாகும். இது தரைவழி மொபைல் கோபுரங்கள் அல்லது ஃபைபர் கேபிள்கள் மூலமாக அல்லாமல், விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்கள் வழியாக இணைய சேவை வழங்குகிறது.
ஃபைபர் கேபிள்களைப் பதிப்பதற்கோ அல்லது மொபைல் கோபுரங்களை அமைப்பதற்கோ கடினமான பகுதிகளிலும் இணைய வசதியை வழங்கக்கூடியது என்பதே இந்தத் தொழில்நுட்பத்தின் சிறப்பம்சமாகும்.
கிராமப்புறங்கள், தொலைதூரப் பகுதிகள், மலைப்பகுதிகள், எல்லைப் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் இணைப்பு வசதியை அதிகரிக்க செயற்கைக்கோள் தகவல் தொடர்பு உதவும் என்றும் இந்திய அரசு கூறியுள்ளது.
இந்தியாவில் ஸ்டார்லிங்கின் வருகை எப்போது முதல் தடைபட்டுள்ளது?
பட மூலாதாரம், Kent NISHIMURA/AFP via Getty Images
பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகையின்படி, ஸ்டார்லிங் நிறுவனம் 2022-ல் இந்தியாவில் தனது சேவைகளைத் தொடங்குவதற்கான முயற்சிகளைத் தொடங்கியது. ஜூன் 2025-ல், தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து ஜிஎம்பிசிஎஸ் (செயற்கைக்கோள் தொடர்பு சேவைகள்) உரிமத்தைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 2025-ல் சோதனைகளுக்காக அலைக்கற்றை வழங்கப்பட்டது. இருப்பினும், வணிகச் சேவை தொடங்குவதற்கு முன்பு, பாதுகாப்பு அனுமதிகள் உட்பட வேறு சில நடைமுறைகள் இன்னும் முடிக்கப்பட வேண்டியுள்ளது.
இதில் ஜியோ மற்றும் ஏர்டெல்லின் பங்கு என்ன?
ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தியாவில் ஸ்டார்லிங்கின் இரண்டு முக்கிய போட்டியாளர்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவையும் அதனுடன் கூட்டு சேர்ந்துள்ளன.
மார்ச் 2025-ல், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ஸ்டார்லிங்குடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
இதன் கீழ், இரு நிறுவனங்களும் தங்களின் சில்லறை விற்பனை வலையமைப்புகள் மூலம் ஸ்டார்லிங் உபகரணங்களைக் கிடைக்கச் செய்ய இணைந்து செயல்படும்.
இருப்பினும், இந்த நிறுவனங்கள் பிராட்பேண்ட் சேவை சந்தையில் ஸ்டார்லிங்கின் போட்டியாளர்களாகவும் உள்ளன.
தற்போது, இந்தியாவில் செயற்கைக்கோள் இணையத்திற்கான உரிமங்களை மூன்று நிறுவனங்கள் பெற்றுள்ளன. அவை ஸ்டார்லிங், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி குழுமத்தின் ஆதரவு பெற்ற யூடெல்சாட் ஒன்வெப்.
மஸ்க் – ஜியோ இடையே என்ன தகராறு?
ஸ்டார்லிங் இந்தியாவில் நுழைந்தபோதும் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக ஒரு பெரிய சர்ச்சை இருந்தது.
செயற்கைக்கோள் நிறுவனங்களுக்கு நிர்வாக வழிமுறைகள் மூலம் ஸ்பெக்ட்ரம் வழங்கப்பட வேண்டும் என்று மஸ்க் விரும்பினார், அதேசமயம் ரிலையன்ஸ் ஜியோ உட்பட சில இந்திய நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவதற்கு ஆதரவாக இருந்தன.
பின்னர், இந்திய அரசு செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவதற்குப் பதிலாக நிர்வாக ரீதியாக ஒதுக்கும் வழியைப் பின்பற்றியது.