• Wed. Jun 17th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவில் இருமல் மருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடு! மருத்துவர் பரிந்துரை கட்டாயம்

Byadmin

Jun 17, 2026


இந்தியாவில் இருமலுக்கான மருந்துகளை வாங்கும்போது மருத்துவரின் பரிந்துரை அல்லது பற்றுச்சீட்டை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய விதியை இந்திய அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது. குழந்தைகள் உயிரிழப்புகளுடன் தொடர்புடைய பல சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகியுள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சில இருமல் மருந்துகளை பயன்படுத்தியதைத் தொடர்ந்து பல நாடுகளில் குழந்தைகள் உயிரிழந்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மருத்துவர் பரிந்துரை இல்லாமல் வாங்க அனுமதிக்கப்பட்டிருந்த மருந்துப் பட்டியலில் இருந்து இருமல் மருந்துகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

புதிய விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இருமல் மருந்துகளை வாங்கும் பொதுமக்கள் இனிமேல் பதிவு செய்யப்பட்ட மருத்துவரின் பரிந்துரையை வழங்க வேண்டியிருக்கும்.

தொடர்புடைய செய்தி : தமிழ்நாட்டில் தயாரித்த இருமல் மருந்து குழந்தைகளின் உயிரைக் காவுகொள்கிறதா?

உலக சுகாதார அமைப்பான World Health Organization, உலகளவில் சுமார் 300 உயிரிழப்புகளுடன் தொடர்புடைய ஏழு இந்திய மருந்துத் தயாரிப்புகளை முன்னதாக சுட்டிக்காட்டியிருந்தது. இந்த சம்பவங்கள் மருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக சர்வதேச அளவில் பெரும் கவலைகளை ஏற்படுத்தியிருந்தன.

கடந்த ஆண்டு இந்தியாவின் Madhya Pradesh மாநிலத்தில் கலப்படம் செய்யப்பட்ட இருமல் மருந்து பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட சம்பவத்தில் குறைந்தது 22 குழந்தைகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளில், மூலப்பொருட்கள் பெறுதல் மற்றும் தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகளில் கடுமையான குறைபாடுகள் இருந்ததாக கண்டறியப்பட்டது.

மேலும், தமிழ்நாட்டில் இயங்கும் ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்பில், அதிக நச்சுத்தன்மை கொண்ட Diethylene Glycol என்ற இரசாயனக் கலப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த இரசாயனம் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி : மிகப்பெரிய இருமல் மருந்து மோசடி கும்பல் ஒடிசாவில் கைது

அதேபோல், ராஜஸ்தான் மாநிலத்திலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட Dextromethorphan சிரப்பைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த தொடர்ச்சியான சம்பவங்கள் இந்திய மருந்துத் தயாரிப்பு துறையில் தரக்கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி : 6 ஆபிரிக்க நாடுகளில் இருமல் மருந்துக்கு அதிரடி தடை விதிப்பு

By admin