• Sun. Nov 1st, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவில் ஒரு பேரரசை உருவாக்க அடிகோலிய ராபர்ட் கிளைவ் மீது இங்கிலாந்தில் அதிருப்தி ஏன்?

Byadmin

Nov 1, 2026


ராபர்ட் கிளைவ், பிரிட்டிஷ் இந்தியா, கிழக்கிந்திய கம்பெனி

(இது ராபர்ட் கிளைவ் பற்றிய இரு பாக தொடரின் இரண்டாம் பாகம்)

ராபர்ட் கிளைவ் லெப்டினன்ட் கர்னலாக பதவி உயர்வு பெற்று மூன்று பீரங்கிப் படைப் பிரிவுகள் மற்றும் 300 காலாட்படை வீரர்களுடன் புனித டேவிட் கோட்டைக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த போது, கடல் கொள்ளையர் தலைவன் கனோஜி ஆங்ரேவை ஒடுக்குவதற்கான படையில் இணையுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

சிவாஜியால் ஒரு சிறிய தீவில் கட்டப்பட்ட கெரியா கோட்டையைத் தளமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆங்ரே, மலபார் கடற்கரையோர நகரங்களைக் கொள்ளையடித்தும், கப்பல்களைக் கைப்பற்றி பொருள்களை அபகரித்தும் பெரும் அட்டூழியங்களைச் செய்து வந்தார்.

அவரது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் மீது தாக்குதல் நடத்த வேண்டியதன் அவசியத்தை மராத்தியர்களும் ஆங்கிலேயர்களும் உணர்ந்தனர். கிளைவின் படையும் மராத்தியர் படைகளும் பம்பாய் கம்பெனி அரசாங்கத்துடன் இணைந்து, இரண்டு நாட்களில் கெரியா கோட்டையை அழித்தன.

பிளாசி போருக்குக் காரணமான இருட்டறை சம்பவம்

வங்காளத்தில் இருந்த ஆங்கிலேயர்கள், ஜோஷியா சைல்டின் தூண்டுதலின் பேரில் ஔரங்கசீப் ஆட்சி காலத்தில் ஒருமுறை தாக்குதல் நடத்தி (1686-1690) படுதோல்வியைச் சந்தித்தனர். அதன் பிறகு, மீண்டும் அத்தகைய முயற்சியில் ஈடுபடுவதற்கு அவர்கள் நீண்ட காலம் தயக்கம் காட்டினர். இருப்பினும் தொடர்ந்து தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பல்வேறு வணிகச் சலுகைகளை கிழக்கிந்திய நிறுவனம் தவறாகப் பயன்படுத்தியதோடு அனுமதியின்றி தங்கள் குடியேற்றப் பகுதியின் கோட்டை அரண்களை வலுப்படுத்தியது.



By admin