• Sun. Sep 6th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவில் கோடிகளில் புரளும் கட்சிகளை வைத்து வரி ஏய்ப்பு நடக்கிறதா? பிபிசி புலனாய்வு

Byadmin

Sep 6, 2026


இந்தியாவின் காகித அரசியல் கட்சிகள்

பட மூலாதாரம், Getty Images

குஜராத்தின் ஆனந்த் நகரில் உள்ள சத்யவாதி ரக்ஷக் கட்சியின் அலுவலகத்துக்கு வெளியே இருள் சூழ்ந்திருந்தது. அந்த அலுவலக கதவில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. அது உண்மையில் அந்தக் கட்சியின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் என்பதைக் காட்டும் பெயர்ப் பலகையோ, ஒரு சுவரொட்டியோ கூட அங்கு காணப்படவில்லை.

இந்த சூழலைப் பார்த்தால், அந்தக் கட்சி 2023-24ஆம் ஆண்டில் ரூ.330 கோடி நன்கொடைகளைப் பெற்றது என்பதை நம்புவது கடினமாகிறது. கட்சியின் அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி, இவ்வளவு பெரிய தொகையைப் பெற்றிருந்தபோதும், 2024 மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சி ஒரு வேட்பாளரை மட்டுமே நிறுத்தியது. அந்த ஆண்டுக்கான கட்சியின் தணிக்கை அறிக்கையின்படி, தேர்தல் பிரசாரத்திற்காக ரூ.8.48 கோடி செலவிடப்பட்டதுடன், “பொது நலனுக்காக” ரூ.316 கோடி செலவிடப்பட்டிருந்தது.

கட்சியின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் அமைந்துள்ள அதே குடியிருப்பு வளாகத்தில் கட்சித் தலைவர் ஸ்வாதி பென் வசிப்பதை பிபிசி கண்டறிந்தது.

கட்சி பெற்ற நன்கொடைகள் மற்றும் அவற்றின் செலவுகள் குறித்து கேட்டபோது, “நாங்கள் அந்தப் பணத்தை தொண்டு பணிகளுக்காக செலவிட்டோம். ஆனால் அதற்கான பதிவுகளை பராமரிக்கவில்லை” என்று ஸ்வாதி பென் தெரிவித்தார்.

கட்சி நிதி தொடர்பான இந்த வெளிப்படைத்தன்மையற்ற நிலை, 2023-24ஆம் ஆண்டில் அதிக அளவு நன்கொடைகள் பெற்ற 6 பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகள் (Registered Unrecognised Political Parties – RUPPs) குறித்த பிபிசி விசாரணை முழுவதும் தொடர்ந்து காணப்பட்ட பொதுவான அம்சமாக இருந்தது. இந்த நிதியாண்டுதான் கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய ஆண்டாகும்.

By admin