பட மூலாதாரம், Getty Images
சமீபத்தில், நான் வளர்ந்த மேற்கு இந்தியாவின் சிறிய நகரமான மிராஜுக்கு சென்றிருந்தேன். அங்கு ஐந்து கிலோமீட்டர் நீளமான சாலையில் 50-க்கும் மேற்பட்ட பல்துறை சிறப்பு மருத்துவமனைகள், நோயறிதல் மையங்கள் மற்றும் சுகாதார கிளினிக்குகள் இருப்பதைக் கணக்கிட்டேன்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த நகரம் வரலாற்று ரீதியாக ஒரு பிராந்திய மருத்துவ மையமாக இருந்து வந்தபோதிலும், இவற்றில் பல மருத்துவ நிறுவனங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டுமே உருவாகியுள்ளன.
புதிய மருத்துவ வசதிகளின் இந்தப் பெருக்கம், சமீப ஆண்டுகளில் இந்தியாவின் தனியார் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.
மருத்துவமனைகளில் ஒவ்வொரு காலாண்டிலும் ஆயிரக்கணக்கான புதிய படுக்கைகள் சேர்க்கப்பட்டு வேகமாக விரிவடைந்து வருகின்றன. நோயறிதல் மையங்களின் சங்கிலிகள் சிறிய நகரங்களிலும் தங்களது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகின்றன. மருத்துவ நிறுவனங்கள் நாடு முழுவதும் தங்களது இருப்பை விரிவுபடுத்துவதற்காக பங்குச் சந்தைகள் மூலம் பணத்தை திரட்டி வருகின்றன.
ஆகஸ்ட் தொடக்கத்தில், இந்தியாவின் மிகப்பெரிய பல்துறை சிறப்பு மருத்துவமனை நிறுவனமான மணிப்பால் ஹெல்த், கிட்டத்தட்ட நூறு கோடி டாலரைத் திரட்டியது. இது இந்த ஆண்டு இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஆரம்பப் பங்கு வெளியீடாக (IPO) அமைந்தது.
பட மூலாதாரம், Getty Images
தரவுகள் கூறுவது என்ன?
உலகளாவிய தனியார் முதலீட்டாளர்களிடையே இந்தத் துறை அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. 2022 முதல் 2024-ஆம் ஆண்டு வரை, இந்திய சுகாதார மற்றும் மருந்து நிறுவனங்களில் கிட்டத்தட்ட 600 இணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்கள் மற்றும் தனியார் முதலீட்டு பரிவர்த்தனைகள் நடைபெற்றன. இவற்றின் மதிப்பு 3,000 கோடி டாலருக்கும் அதிகம்.
இந்த நிதியில் 40% மருத்துவமனைகளுக்குச் சென்றதாக கிராண்ட் தோர்ன்டன் தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், சமீபத்திய தரவுகளின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தத் துறை கூடுதலாக 2,000 கோடி டாலருக்கும் அதிகமான நிதியைத் திரட்டியுள்ளது. இந்தத் தரவை அந்த ஆலோசனை நிறுவனத்திடம் இருந்து பிபிசி பெற்றுள்ளது.
எனினும், இந்த முதலீட்டு அலை காரணமாக நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை அணுகும் வாய்ப்பு குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ள நிலையில், இந்த வளர்ச்சியின் காரணமாக லட்சக்கணக்கான இந்தியர்களால் தனியார் சிகிச்சைக்கான செலவை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பட மூலாதாரம், NurPhoto via Getty Images
சமீபத்தில் அரசு அமைத்த குழு வெளியிட்ட புதிய அறிக்கையும் இதை உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சுகாதாரப் பொருளாதாரம் எந்த அளவுக்கு சமமற்றதாக உள்ளது என்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தனியார் மருத்துவமனைகளில் “செலவினத்தைச் சமாளிப்பதில் அதிகரித்து வரும் நெருக்கடி” குறித்தும் அது தீவிர கவலைகளை எழுப்பியுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் அதிகரிக்கும் செலவுகள்
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான செலவு, அரசு மருத்துவமனைகளுடன் ஒப்பிடும்போது பெரும்பாலும் ஐந்து முதல் 10 மடங்கு அதிகமாக இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. புற்றுநோய், இதய நோய், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற தீவிர நோய்களுக்கு இந்த இடைவெளி மேலும் அதிகரிக்கிறது.
கிளினிக்குகள், நர்சிங் ஹோம்கள் மற்றும் நோயறிதல் மையங்களின் “கட்டுப்பாடற்ற” வளர்ச்சியும், ஒழுங்குமுறை விதிகள் சீரற்ற முறையில் அமல்படுத்தப்படுவதும் தனியார் துறையில் சிகிச்சையின் தரம் மற்றும் செலவில் “வெளிப்படையான ஏற்றத்தாழ்வுகளுக்கு” வழிவகுத்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. இதனால் நோயாளிகள் தன்னிச்சையான கட்டணங்கள் மற்றும் தரக்குறைவான நடைமுறைகளுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
தனியார் சுகாதாரத் துறையின் “பரவலான வணிகமயமாக்கல்”, அதிகப்படியான கட்டணம் வசூலித்தல், தேவையற்ற நோயறிதல் பரிசோதனைகள் மற்றும் பிரசவம் போன்ற வழக்கமான சிகிச்சைகளுக்கான அதிகரித்து வரும் செலவுகள் தொடர்பான நோயாளிகளின் புகார்களை அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. இது பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களை கடுமையான கடன் மற்றும் நெருக்கடிக்குள் தள்ளி, சொத்துகளை விற்கும் நிலைக்கு கொண்டு செல்வதாகவும் அது தெரிவித்துள்ளது.
சமீபத்தில், மகாராஷ்டிராவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டாளர், மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் நரம்பு வழி மருந்து செலுத்தும் கருவிகள் மீது 2,800% அளவுக்கு அதிக லாப வரம்பு வைக்கப்பட்டு விற்கப்படுவதைக் கண்டறிந்தார். மருத்துவ உபகரணங்களின் விலை நிர்ணயம் குறித்த கவலையையும் இது ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை நிர்ணயம் கிட்டத்தட்ட முழுமையாகக் கண்காணிக்கப்படாமல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
அரசின் பரிந்துரைகள்
இந்தச் சவால்களை எதிர்கொள்ள அரசு குழு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அவற்றில் சில சர்ச்சைக்குரியவையாக உள்ளன.
குறிப்பாக, மருத்துவமனை அறைக் கட்டணங்களுக்கு அருகிலுள்ள மூன்று நட்சத்திர ஹோட்டல்களின் அறைக் கட்டணத்தை அடிப்படையாகக் கொண்டு உச்சவரம்பு நிர்ணயிப்பது, அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் அத்தியாவசிய சிகிச்சைகள், பரிசோதனைகள் மற்றும் வழக்கமான மருத்துவ நடைமுறைகளுக்கான கட்டணங்களை ஒழுங்குபடுத்துவது, மேலும் தேவையற்ற அளவில் சிகிச்சை வழங்கப்படுவதைத் தடுக்க ஒரே மாதிரியான சிகிச்சை வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்துவது ஆகியவை அடங்கும்.
சங்கிலி மருத்துவமனைகளில் 51%-க்கும் அதிகமான வெளிநாட்டு முதலீடு அல்லது உரிமை இருப்பது குறித்தும் அந்தக் குழு கவலை தெரிவித்துள்ளது.
இந்தப் பரிந்துரைகளில் சிலவற்றுக்கு இந்தியாவின் தனியார் மருத்துவமனைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தனியார் சுகாதாரத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நேட்ஹெல்த் அமைப்பின் பொதுச் செயலாளர் சித்தார்த்த பட்டாச்சார்யா பிபிசியிடம் கூறுகையில், கட்டணங்களை நிர்ணயிப்பதற்குப் பதிலாக வரி, நிலம், மூலதனம், பணியாளர்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குவதற்கான தேவைகள் உள்ளிட்ட சுகாதாரச் சேவையை வழங்குவதற்கான கட்டமைப்பு ரீதியான செலவுகளைக் குறைப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
அவரது கூற்றுப்படி, சுகாதாரச் சேவை வழங்குவது அதிக மூலதனத்தையும் முதலீட்டையும் தேவைப்படுத்துகிறது. பயன்படுத்தப்படும் மூலதனத்தின் மீதான வருவாய் சுமார் 10% ஆக உள்ளது. இது பொருளாதாரத்தின் பல துறைகளுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அளவில் குறைவு. அந்தத் துறைகள் பெரும்பாலும் இதைவிட 1.5 முதல் 2.5 மடங்கு அதிகமான மூலதன வருவாயை உருவாக்குகின்றன.
மருத்துவமனை கட்டணங்களை உணவகங்களின் கட்டணங்களுடன் ஒப்பிடுவதற்கு எதிராகவும் அவர் எச்சரித்தார். தொற்றுக் கட்டுப்பாட்டு தரநிலைகள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு விதிமுறைகள் உள்ளிட்ட மருத்துவமனைகள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகளை அது கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும், இவை அனைத்தும் செலவுகளை அதிகரிப்பதாகவும் அவர் கூறினார்.
மேக்ஸ் ஹெல்த்கேர் முதல் ஃபோர்ட்டிஸ் வரை நாட்டின் மிகப்பெரிய மருத்துவமனைச் சங்கிலிகள், இத்தகைய தன்னிச்சையான கட்டண வரம்புகள் மருத்துவ துறையில் முதலீட்டை “முடக்கிவிடும்” என்றும், முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டுக்கு எதிர்பார்க்கும் வருவாயைப் பெற முடியாத நிலை ஏற்பட்டால் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அச்சுறுத்தி விலகச் செய்யும் என்றும் எச்சரித்துள்ளன.
அரசின் தலையீடு அவசியமா?
பட மூலாதாரம், Hindustan Times via Getty Images
ஆனால், இந்தியாவில் தனியார் சுகாதாரத் துறை தற்போது முழுமையாக சேவை வழங்குநர்களுக்கு சாதகமான சந்தையாக இருப்பதால், விலை ஒழுங்குமுறை குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக பொது சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
“குறிப்பாக சிறப்பு சிகிச்சை உள்ளிட்ட உயர்நிலை மருத்துவச் சேவைகளில் பெரிய அளவிலான வெளிநாட்டு தனியார் முதலீட்டு நிதி வருவதால், வெளிநாட்டில் உள்ளவர்களே அடிப்படையில் சிகிச்சைக்கான கட்டணங்களை முடிவு செய்கிறார்கள். அப்படி இருக்கக்கூடாது,” என்று பொது சுகாதார அறக்கட்டளை அமைப்பை சேர்ந்த மருத்துவர் ஸ்ரீநாத் ரெட்டி பிபிசி-யிடம் கூறினார்.
பல மருத்துவமனைகள் ஈட்டிவரும் “அதிகப்படியான லாபம்” காரணமாக அரசின் தலையீடு மிகவும் அவசியமானது என்று மற்றொரு சுகாதாரக் கொள்கை நிபுணரான விவேக் என்.டி. கூறினார்.
“பல்வேறு பரிசோதனைகளை நடத்துவதற்கும், தேவையில்லாத நோயறிதல் பரிசோதனைகளை மேற்கொள்ள நோயாளிகளைத் தூண்டுவதற்கும் இந்த மருத்துவமனைகள் அதிக முக்கியத்துவம் அளிப்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்,” என்றார் அவர்.
தனியார் சுகாதாரச் செலவைக் குறைக்க, குழு பரிந்துரைத்துள்ள நியாயமான சரக்கு மற்றும் சேவை வரி முறையும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இருக்கலாம் என்று விவேக் கூறினார். எனினும், எந்தப் பரிந்துரையும் கட்டாயமாக்கப்படுவதற்கு முன்பு தொழில்துறையினருடன் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மருத்துவர் ஸ்ரீநாத் ரெட்டியும் இதை ஏற்கிறார். அரசு தன்னிச்சையாக விலை வரம்புகளை நிர்ணயிப்பதற்கு முன்பு, தனியார் சுகாதாரச் சேவையின் உண்மையான செலவு குறித்து நாடு முழுவதும் துல்லியமான மதிப்பீடுகள் தேவை என்று அவர் கூறினார்.
“ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒவ்வொரு நகரத்துக்கும் செலவுகள் மாறுபடும். எனவே, நாடு முழுவதும் ஒரே மாதிரியான விலை வரம்புகளை விதிக்க முடியாது,” என்றார் அவர்.
ஆனால், இந்த விவாதம் தீவிரமடையும் நிலையில், நோயாளிகளுக்கான செலவைக் குறைக்க பொது சுகாதாரத் துறையை வலுப்படுத்துவதிலேயே முக்கிய கவனம் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அரசு குழுவும் இதையே பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவின் தற்போதைய அரசு சுகாதாரச் செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில்1.4% ஆக உள்ளது. இது கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு தேசிய சுகாதாரக் கொள்கையில் நிர்ணயிக்கப்பட்ட 2.5% இலக்கைவிடக் குறைவு. உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ள 5%-ஐவிடவும் இது மிகவும் குறைவு.
இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதாரச் சேவைகளுக்கான அரசின் செலவு விகிதாசார அடிப்படையில் குறைவாக இருப்பதால், மக்கள் அதிக செலவுடைய தனியார் மருத்துவ வசதிகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் “குடும்பத்தின் வருமானத்தை மீறும் அளவிலான மருத்துவச் செலவு” ஏற்பட்டுள்ளதாகவும் அரசு குழுவின் அறிக்கையே குறிப்பிடுகிறது.
சாதாரண மக்களின் தனியார் மருத்துவமனைகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க, அரசு பொது முதலீட்டை அதிகரித்து “தனது செயல்பாட்டை மேம்படுத்த வேண்டும்” என்று விவேக் கூறினார்.
அதே நேரத்தில், இந்தியாவில் சுகாதாரச் சேவைகளுக்கான கட்டமைப்பை உருவாக்க கூடுதலாக 300 பில்லியன் டாலர் முதலீடு தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முதலீட்டில் கணிசமான பகுதி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் முதலீட்டாளர்களிடமிருந்தே வரும். எனவே, சாதாரண மக்கள் அத்தியாவசிய சுகாதாரச் சேவைகளைப் பெற முடியாத நிலை ஏற்படாமல் பார்த்துக்கொள்வதுடன், முதலீட்டாளர்கள் வெளியேறாத வகையில் கொள்கைகளை உருவாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு