7
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நேற்று இரவு மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தெற்காசிய வலய ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டியில் இந்தியா 5 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இப் போட்டியின் முதல் இரண்டு ஆட்ட நேர பகுதிகளில் திறமையாக விளையாடிய இலங்கை இடைவேளையின்போது 43 – 40 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.
எனினும் இடைவேளையின் பின்னர் ஏகப்பட்ட தவறுகளை இழைத்த இலங்கை இறுதியில் 72 – 77 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டி முடிவு எத்தகையதாக இருந்தபோதிலும் இலங்கையும் இந்தியாவும் நாளை வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இறுதிப் போட்டியில் மீண்டும் சந்திக்கவுள்ளன.

இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணி, இந்தியாவின் அஹமதாபாத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 18 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கூடைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பங்குபற்ற தகுதிபெறும்.
இந்தியாவுக்கு எதிரான போட்டியின் முதலாவது ஆட்டநேர பகுதியில் இலங்கை 23 – 22 என்ற புள்ளிகள் வித்தியாசத்திலும் இரண்டாவது ஆட்ட நேர பகுதியில் 20 – 18 என்ற புள்ளிகள் வித்தியாசத்திலும் முன்னிலையில் இருந்தது. இதற்கு அமைய இடைவேளையின்போது இலங்கை 43 – 40 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.
ஆனால், இடைவேளையின் பின்னர் இலங்கை வீரர்கள், தடுத்தாடுவதிலும் எதிர்த்தாடுவதிலும் ஏகப்பட்ட தவறுகளை இழைந்ததால் 3ஆவது ஆட்ட நேர பகுதியை இந்தியா 18 – 8 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தனதாக்கிக்கொண்டது. (இந்தியா 58 – இலங்கை 51)
அதன் பின்னர் நான்காவதும் கடைசியுமான ஆட்டநேர பகுதியில் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்டவண்ணம் இருந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நான்காவது ஆட்டநேர பகுதி 19 – 19 என சம நிலையில் முடிவடைந்தபோதிலும் இந்தியா 77 – 72 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இலங்கை சார்பாக அணித் தலைவர் சுதாம் லியனகே 18 புள்ளிகளையும் ஜேரால்ட் ஆரோன் 14 புள்ளிகளையும் லியாம் தோமஸ் 13 புள்ளிகளையும் ரசிந்து நிம்சார 11 புள்ளிகளையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்தியா சார்பாக அணித் தலைவர் பியூஷ் சௌதரி 17 புள்ளிகளையும் ஷேக்கர் ரதீ, ஜோய்ப்ரீத் சிங் சிது ஆகியோர் தலா 15 புள்ளிகளையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதேவேளை, மூன்று நாடுகள் பங்குபற்றிய பெண்கள் பிரிவில் தலா ஒரு வெற்றியை ஈட்டிய இலங்கையும் இந்தியாவும் நாளை பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

ஏனைய லீக் போட்டி முடிவுகள்
ஆண்கள்
இந்தியா 130 – மாலைதீவுகள் 60
இலங்கை 132 – பங்களாதேஷ் 38
இந்தியா 104 – பங்களாதேஷ் 31
இலங்கை 132 – மாலைதீவுகள் 42
பங்களாதேஷ் 88 – மாலைதீவுகள் 48
பெண்கள்
இலங்கை 74 – மாலைதீவுகள் 44
இந்தியா 74 – இலங்கை 44
இந்தியா 110 – மாலைதீவுகள் 24
