ஐ.பி.எல். 2026 தொடரில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்திறன் பல நிபுணர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நேற்று (புதன்கிழமை) இரவு, ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின் இளம் நட்சத்திர வீரரான சூர்யவன்ஷி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 29 பந்துகளில் 97 ரன்கள் விளாசி, ஐ.பி.எல். தொடரில் அதிவேக சதம் அடித்த கிறிஸ் கெய்லின் சாதனையை நூலிழையில் தவறவிட்டார்.
இந்த ஆட்டத்திற்கு பிறகு சூர்யவன்ஷிக்கு பல்வேறு பாராட்டுகள் கிடைத்தாலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் கிரிக்கெட் இயக்குநர் டாம் மூடி அளித்த பாராட்டு தனித்து நிற்க தவறவில்லை. டி20 கிரிக்கெட்டில் சூர்யவன்ஷியின் தற்போதைய ஆதிக்கத்தை, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் டான் பிராட்மேனின் ஆதிக்கத்துடன் மூடி ஒப்பிட்டார்.
“இதை எப்படி விளக்குவது என்று நான் யோசித்து கொண்டிருக்கிறேன். இதை விளக்குவதற்கான ஒரே வழி, யாரையாவது இதை பார்க்க சொல்லி, அவர்களே ஒரு விளக்கத்தை கூற சொல்வதுதான். ஏனென்றால், இந்த விளையாட்டு வடிவத்தில், அல்லது வேறு எந்த விளையாட்டு வடிவத்திலும்கூட, நம் வாழ்நாளில் நாம் கண்டிராத ஒன்றை இப்போது காண்கிறோம்.
நாம் அற்புதமான விஷயங்களை பார்த்திருக்கிறோம், ஆனால் இந்த அளவிற்கு எதுவும் இல்லை. நான் இதை திரும்பி பார்க்கக்கூடிய ஒரே விஷயம் பிராட்மேன் செய்து கொண்டிருந்தது தான். பிராட்மேன் டெஸ்ட் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 100 சராசரியை வைத்திருந்தார், அவருக்கு அடுத்த சிறந்த வீரருக்கும் இவருக்கும் இடையிலான சராசரி சுமார் 60 ஆக குறைந்திருந்தது. அதுதான் நாம் பேசும் இந்த இடைவெளி. 15 வயதில் டி20 கிரிக்கெட்டில் இதுதான் நடந்தது,” என்று டாம் மூடி கூறினார்.
பிராட்மேன் 99.94 என்ற அதிகபட்ச டெஸ்ட் சராசரிக்கான சாதனையை வைத்திருக்கிறார், மேலும் அவர் எல்லா காலத்திலும் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராக, அல்லது மிகச்சிறந்தவராகவே பரவலாக கருதப்படுகிறார்.
தனது 15 வயதில், தனது இரண்டாவது ஐ.பி.எல். சீசனிலேயே வைபவ் சூர்யவன்ஷி , விராட் கோலி , ஷுப்மன் கில் , ஹென்ரிச் கிளாசன் மற்றும் கே.எல். ராகுல் போன்ற முன்னணி நட்சத்திரங்களை முந்தி, ரன் குவிப்பு பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் . அவர் 15 போட்டிகளில் 242.85 என்ற அபாரமான ஸ்டிரைக் ரேட்டில் 680 ரன்களை எடுத்துள்ளார்.