பட மூலாதாரம், Getty Images
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
அமெரிக்க செனட், ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதில் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகள் மீது கடுமையான வரிகளை விதிப்பதும் அடங்கும்.
ரஷ்யாவின் எரிசக்தியை அதிகம் வாங்கும் நாடுகளில் சீனாவும் இந்தியாவும் உள்ளன. மேலும், இரான் மீதான தடைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இந்த மசோதாவை செனட்டர் லிண்ட்சே கிரஹாம் அறிமுகப்படுத்தினார். குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு கட்சிகளின் ஆதரவும் இதற்குக் கிடைத்தது. இறுதியில், 86-க்கு 11 என்ற வாக்கு வித்தியாசத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
தெற்கு கரோலினாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சி செனட்டரான கிரஹாம், கடந்த மாதம் யுக்ரேன் பயணத்தை முடித்துத் திரும்பிய சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.
தனது சகோதரரின் இடத்துக்கு நியமிக்கப்பட்ட செனட்டர் டார்லின் கிரஹாம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைக் குறிப்பிட்டு, “இந்தச் சட்டம் புதினுக்கு மிகவும் வலிக்கும் இடத்தில் தாக்கும்” என்று கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவைப் பெறுவதற்காக, கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட அசல் வரைவைவிட இந்த மசோதா கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
டிரம்ப் யுக்ரேனுக்கு வழங்கப்பட்டு வந்த அமெரிக்காவின் பெரும்பாலான நேரடி உதவிகளை நிறுத்தியுள்ளார். அதற்குப் பதிலாக, யுக்ரேனுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் கொள்கையை அவர் கடைப்பிடித்து வருகிறார். இந்த ஆயுதங்களுக்கான செலவை பெரும்பாலும் அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டாளிகள் ஏற்கின்றனர்.
எனினும், இந்த மசோதா இன்னும் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்படவில்லை.
பட மூலாதாரம், Alex Wong/Getty Images
இந்த மசோதாவின் தாக்கம் என்னவாக இருக்கும்?
சில ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும், கென்டக்கியைச் சேர்ந்த குடியரசுக் கட்சி செனட்டர் ராண்ட் பாலும், சீனா மற்றும் இந்தியா போன்ற முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது பரவலான புதிய வரிகளை விதிப்பதற்கான சட்ட அடிப்படையாக டிரம்ப் இந்த மசோதாவைப் பயன்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.
புதிய வரிகளை விதிக்கும் அதிகாரத்தைத் தடுப்பதற்கான ராண்ட் பால் முன்வைத்த திருத்தம் நிராகரிக்கப்பட்டது.
இதன் மூலம், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை அதிக அளவில் வாங்கும் ஐந்து நாடுகள் மீதும், ரஷ்யா எரிசக்தித் தடைகளைத் தவிர்க்க உதவும் ஐந்து முக்கிய நாடுகள் மீதும் 100 சதவீத வரியை விதிக்கும் அதிகாரத்தை டிரம்ப் பெறுவார்.
இரு கட்சிகளைச் சேர்ந்த செனட்டர்களும் இந்த நடவடிக்கை ரஷ்யாவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தாலும், டிரம்ப் உண்மையில் இந்தப் புதிய அதிகாரங்களைப் பயன்படுத்துவாரா என்பது குறித்து இன்னும் தெளிவாகவில்லை. தண்டனை நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பதற்கான பரந்த அதிகாரத்தை அதிபருக்கு வழங்கும் வகையில் வெள்ளை மாளிகை பரந்த விலக்கு ஒன்றைப் பெற்றுள்ளது.
1996-ஆம் ஆண்டின் இரான் தடைகள் சட்டத்தை 2031-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கவும் இந்த மசோதா வழிவகுக்கிறது.
கடந்த காலத்திலும் ரஷ்யா மீது தடைகளை விதிக்க வெள்ளை மாளிகை முயன்றுள்ளது.
ஆனால், இரானுடனான போரின் போது ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதைத் தொடர்ந்து எண்ணெய் சந்தையில் ஏற்பட்ட நெருக்கடியால், ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதிக்கு பல தற்காலிக விலக்குகளை அது வழங்கியது.
இந்தியாவிற்கு இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
பட மூலாதாரம், Dhiraj Singh/Bloomberg via Getty Images
கடந்த ஆண்டு, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியப் பொருட்களுக்கு டிரம்ப் 25 சதவீத வரியை விதித்தார்.
ஆனால், அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு உதவும் வகையில் பின்னர் அந்த வரியை நீக்கினார்.
ஆனால், ஜூலை மாதத்தில், “கட்டாயத் தொழிலாளர்களின் உழைப்பால் தயாரிக்கப்பட்ட பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்கிறது” என்று குற்றஞ்சாட்டி, இந்தியாவுக்கு எதிராக 10 சதவீத சுங்க வரியை விதிக்க டிரம்ப் உத்தரவிட்டார்.
ரஷ்ய எண்ணெயை அதிக அளவில் வாங்கும் நாடுகளில் ஒன்றான சீனா, இதேபோன்ற கட்டுப்பாடுகளில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டது. சீனாவுடனான வர்த்தகப் பதற்றத்தைக் கட்டுப்படுத்த டிரம்ப் முயன்று வரும் நிலையில் இந்த விலக்கு அளிக்கப்பட்டது.
சீனாவுக்கு அடுத்தபடியாக, ரஷ்ய கச்சா எண்ணெயை அதிக அளவில் வாங்கும் இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது.
ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனா, இந்தியா, அஜர்பைஜான், ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகியவை அடங்கும்.
அமெரிக்கா இந்தியாவுக்கு 100 சதவீத வரியை விதிக்க முடிவு செய்தால், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கான செலவு கணிசமாக அதிகரிக்கும்.
எனினும், மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் இந்த வரிகள் தானாகவே அமலுக்கு வராது.
அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் வரிகளை விதிக்க இந்த மசோதா அனுமதிக்கிறது.
வரிகள் எப்போது, எப்படி அமல்படுத்தப்படும் என்பது சட்டத்தின் இறுதி வடிவம் மற்றும் அது சட்டமாக்கப்பட்ட பிறகு அதிபர் எடுக்கும் முடிவைப் பொறுத்தே அமையும்.
இந்தியா ஏன் குறிவைக்கப்படுகிறது?
பட மூலாதாரம், Mandel Ngan/AFP via Getty Images
2022-ஆம் ஆண்டு யுக்ரேன் போர் தொடங்கிய பின்னர், ரஷ்யா மேற்கத்திய நாடுகளின் தடைகளை எதிர்கொள்ளத் தொடங்கியது. அப்போது ரஷ்யா தள்ளுபடி விலையில் எண்ணெயை விற்பனை செய்யத் தொடங்கியது.
ரஷ்யாவின் தள்ளுபடி விலை எண்ணெயை அதிக அளவில் வாங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக மாறியது. இதன் மூலம் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தங்களது செலவைக் குறைக்கவும், எரிபொருள் விநியோகத்தைச் சீராக வைத்திருக்கவும் முடிந்தது.
மத்திய கிழக்கில் ஏற்பட்ட அடுத்தடுத்த மோதல்களால் ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டது. இதனால் ரஷ்ய எண்ணெயை மீதான சார்பு நிலை இந்தியாவுக்கு மேலும் அதிகரித்தது.
2026-ஆம் ஆண்டில் ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வது கணிசமாக அதிகரித்தது. ஜூன் மாதத்தில் மட்டும் இறக்குமதி 34 சதவீதம் அதிகரித்து, இதுவரை இல்லாத அளவை எட்டியது.
இரான் மோதலின்போது, அமெரிக்கா சில காலத்துக்கு விலக்குகளை வழங்கி தடைகளைத் தளர்த்தியது. அதற்குப் பிறகு இந்த அதிகரிப்பு மேலும் வேகமடைந்தது.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் தனது முடிவு தேசிய நலன் மற்றும் எரிசக்திப் பாதுகாப்பின் அடிப்படையிலானது என்று இந்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
யுக்ரேன் போரில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தியா ரஷ்யாவுக்கு உதவி செய்து வருவதாக பல அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்தியா ரஷ்யாவிடமிருந்து எவ்வளவு எண்ணெய் வாங்குகிறது?
பட மூலாதாரம், Alexander KAZAKOV/POOL/AFP via Getty Images
பகுப்பாய்வு நிறுவனமான கெப்லர் தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் இந்தியா ரஷ்யாவிலிருந்து ஒரு நாளைக்கு 27.8 லட்சம் பேரல் என்ற மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது. இது ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.5 சதவீதம் அதிகமாகும்.
இந்த காலகட்டத்தில், இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி ஒரு நாளைக்கு 49.6 லட்சம் பேரலாக இருந்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸும் சௌதி அரேபியாவும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளர்களாக இருந்தன. ஆனால், இவை இரண்டும் சேர்ந்து வழங்கிய எண்ணெயின் அளவு ரஷ்யாவைவிட கணிசமாகக் குறைவாக இருந்தது.
இந்த மசோதா எப்போது அமலுக்கு வரும்?
இந்த மசோதா தற்போது பிரதிநிதிகள் சபைக்குச் செல்லும். அது ஆகஸ்ட் 31-ஆம் தேதி மீண்டும் கூடி, அதன் பிறகு இந்த மசோதாவை பரிசீலிக்கும்.
மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, அதிபரின் கையெழுத்துக்காக அனுப்பப்படலாம்.
சாத்தியமான விலக்குகள் குறித்தும் மக்கள் பிரதிநிதிகள் விவாதித்துள்ளனர்.
இறுதியாக நிறைவேற்றப்படும் சட்டத்தில் எந்த அளவுக்கு, எந்த வகையான விலக்குகள் இடம்பெறுகின்றன என்பதையே, இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு இந்தியா மீது ஏற்படும் தாக்கத்தின் தீவிரத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாகக் கருதப்படுகிறது
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு