• Wed. Nov 4th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியா – பாகிஸ்தான் உலகக் கிண்ணப் போட்டிக்கு 84 இலட்சம் டிக்கெட்கள் கோரிக்கை

Byadmin

Nov 4, 2026


ஆபிரிக்காவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்துக்கான டிக்கெட்டுகளுக்கு கிட்டத்தட்ட 84 இலட்சம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணம் – 2027 அத்தியாயத்தை தென் ஆபிரிக்கா, ஸிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய 3 நாடுகள் கூட்டாக நடத்தவுள்ளன.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2027 அக்டோபர் 10ஆம் திகதி வெறும் 34,000 பார்வையாளர்கள் மட்டுமே அமரக்கூடிய ஜொஹான்னஸ்பேர்க், வொண்டரர்ஸ் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இதே விளையாட்டரங்கில் நவம்பர் 21ஆம் திகதி இறுதிப் போட்டியும் நடைபெறுவதால், கிட்டத்தட்ட எட்டு மில்லியன் டிக்கெட்டுகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

14ஆவது உலகக் கிண்ண அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவும் உப சம்பியன் இந்தியாவும் ஒக்டோபர் 7ஆம் திகதி மோதவுள்ளன.

கிரிக்கெட் போட்டி அட்டவணையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாகவும், நிதி ரீதியாக அதிக இலாபம் தரக்கூடியதாகவும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி இருந்து வருகிறது.

ஆனால், அண்மைய காலங்களில் இப்போட்டி ஒருபக்க சார்பாகவே இருந்து வருகிறது. இந்த இரண்டு அணிகளும் மோதிய கடைசி ஒன்பது போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், ஸிம்பாப்வே மற்றும் ஒரு தகுதிகாண் அணி அடங்கிய குழுவில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பெறுகின்றன.

மற்றைய குழுவில் இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ், இலங்கை, நியூஸிலாந்து மற்றும் மற்றொரு தகுதிகாண் அணி ஆகியன இடம்பெறுகின்றன.

இரண்டு குழுக்களிலும் லீக் சுற்று முடிவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகளும், நான்காவது இடத்தைப் பிடிக்கும் சிறந்த அணியும் சுப்பர் 7 சுற்றுக்கு முன்னேறும். சுப்பர் சுற்று நிறைவில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிகளில் விளையாடத் தகுதி பெறும்.

அரை இறுதிகளில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.

By admin