பட மூலாதாரம், Getty Images
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
இமயமலைத் தொடரில் அமைந்துள்ள நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவுக்குப் பின்பு, ஆற்றுப்படுகைகளில் உள்ள நகரங்கள், குடியிருப்புகளுக்கு உள்ள இயற்கைப் பேரிடர் அச்சுறுத்தல்கள் குறித்த விவாதங்கள் வலுப்பெற்றுள்ளன. இத்தகைய இயற்கைப் பேரிடர்கள் போன்று தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் நிகழுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இமயமலையில் பனி உருகி நதிகள் உற்பத்தியாவது போலல்லாமல், மேற்குத் தொடர்ச்சி மலையில் அடர்ந்த சோலைக்காடுகள் மற்றும் புல்வெளிகளே நதிகளின் தோற்றுவாயாக இருப்பதால், இத்தகைய ஆற்றுப்படுகைகளில் இதுபோன்ற வெள்ள அபாய பாதிப்பு அதிகம் வரவாய்ப்பில்லை என்கின்றனர் புவியியலாளர்கள் மற்றும் சூழலியல் ஆராய்ச்சியாளர்கள். அதேநேரத்தில் பெருமழை காரணமாக நிலச்சரிவு அபாயங்கள் உள்ளதாக எச்சரிக்கின்றனர்.
அதனால் தமிழகத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குறிப்பாக நீலகிரி மாவட்டம் போன்ற மலைப்பகுதிகளில் சிறப்புச்சட்டங்களை உருவாக்கி, கட்டடங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வரவேண்டுமென்றும் இவர்கள் வலியுறுத்துகின்றனர்.
நேபாள பேரிடருக்கும் காலநிலை மாற்றத்துக்குமான தொடர்பு என்ன?
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 1300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயிருக்கின்றனர். இந்த இயற்கைப் பேரிடருக்குப் பின்பு, மலைப் பகுதிகளுக்கான அச்சுறுத்தல்கள், வளர்ச்சிப்பணிகள் குறித்த விவாதங்கள் வலுப்பெற்றுள்ளன. பேரிடருக்கான காரணங்களும் பல்வேறு கோணங்களில் ஆராயப்படுகின்றன.
காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் ஆகியவற்றுக்கும், இந்த இயற்கைப் பேரிடருக்குமான தொடர்புகளை பல்வேறு புவியியல் ஆய்வாளர்களும், காலநிலை மாற்ற ஆராய்ச்சியாளர்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.
புவி வெப்பமடைதலால் இமயமலையின் பனி மூடிய மலைகள், கடந்த 30 ஆண்டுகளில் பனிக்கட்டி அளவில் மூன்றில் ஒரு பங்கை இழந்துவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை 2023-இல் தெரிவித்ததை ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள கல்கரி பல்கலைக்கழக இணைப்பேராசிரியரும், புவி அறிவியல் வல்லுநருமான டான் ஷூகர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதிகளவில் கார்பன் வெளியேற்றும் நாடுகளான இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே அமைந்துள்ள இமயமலையில் உள்ள பனிப்பாறைகள், முந்தைய பத்தாண்டுகளை விட கடந்த பத்தாண்டுகளில் 65 சதவீதம் வேகமாக உருகியதாக அந்த அமைப்பு கூறியதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பிளானட் லேப்ஸ் (Planet Labs) நிறுவன செயற்கைக்கோள் படங்களின்படி 5,200 மீட்டர் உயரத்தில் இருந்த ஒரு பனிப்பாறையின் கீழ் பகுதி உடைந்து, சுமார் 1,200 மீட்டர் கீழே உள்ள பள்ளத்தாக்குத் தளத்தில் விழுந்துள்ளது. பேரழிவுக்கு கட்டுமானப் பணிகளும் ஒரு காரணமாக இருக்கலாம். காலநிலை மாற்றம் இதில் ஏதேனும் பங்கு வகித்ததா என்பது குறித்து எதிர்காலத்தில் நிச்சயமாக ஆராய்வோம்.” என்றும் டான் ஷூகர் கூறியுள்ளார்.
இந்த கருத்தைப் பற்றி பிபிசி தமிழிடம் விரிவாக விளக்கினார் புவியியலாளரும், காலநிலை ஆய்வாளருமான லோகேஷ் பார்த்திபன். வழக்கமாக பெருவெள்ள பாதிப்பு கடுமையான கனமழை இருக்கும் நாட்களில் ஏற்படும் நிலையில், பேரிடர் ஏற்படுத்தும் அளவுக்கு பெருமழை பெய்யாமல் இந்த வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணத்தை அவர் விளக்கினார்.
பிபிசியிடம் பேசிய லோகேஷ் பார்த்திபன், ”முதலில் இதற்கு நிலநடுக்கம் காரணமாயிருக்கலாம் என கருதப்பட்டது. பின்பு பனிப்பாறை ஏரி உடைப்பு வெள்ளமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் ஆய்வுகளில், உயரமான மலைப்பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய பனி–பாறைச்சரிவே இந்தப் பேரிடரின் தொடக்கமாக இருந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
மிகவும் உயரமான மலைப்பகுதியிலிருந்து வேகமாகச் சரிந்த பனி மற்றும் பாறைத்தொகுதி கீழ்நோக்கிப் பயணித்தபோது, அதன் பாதையில் இருந்த மண், மரம், சேறு, செடி, கொடி எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு மேலும் வேகம் பெற்று இறுதியில் மிகப்பெரிய மண்–பாறைப் பெருக்காக மாறி லெண்டே கோலா வழியாக போத்தே கோஷி மற்றும் திரிசூலி ஆறுகளை அடைந்ததாக அவர் விவரித்தார்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பில் தன்னார்வலராகச் செயல்பட்டு வரும் லோகேஷ் பார்த்திபன், தமிழக அரசின் காலநிலை மாற்ற இயக்கத்துடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான காலநிலை கல்விப் பாடத்திட்டத்தை உருவாக்கிய குழுவிலும் பணியாற்றியுள்ளார். இந்த இயற்கைப் பேரிடர் நிகழ்வதற்கு காலநிலை மாற்றம் மிக முக்கியக் காரணமாக அமைந்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். பேரிடர் நிகழ்வதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் அதிக அளவிலான பனி உருகியதை செயற்கைக்கோள் படங்கள் காண்பித்ததாக டான் ஷூகர் கூறிய கருத்தை அதற்கு மேற்கோளாகக் காட்டி, இதை மேலும் பல அறிஞர்கள் கூறியிருப்பதையும் அவர் விளக்கினார்.
நேபாள பெருவெள்ளம் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த ஆண்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். அப்போது குறுகிய காலத்தில் பெய்த அதீத மழையே அந்த நிலச்சரிவுக்கும் காரணமாகக் கூறப்பட்டது.

இமயமலை – மேற்குத் தொடர்ச்சி மலை ஓர் ஒப்பீடு
இமயமலைப் பகுதிகளில் ஏற்பட்ட பேரிடரைப் போலவே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் எதிர்காலத்தில் பாதிப்புகள் ஏற்படுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இவ்விரு மலைகளுக்கும் இடையிலான புவியியல் அமைப்பு, சூழலியல் தன்மை, இயற்கைப் பேரிடர் அபாயங்களில் பல்வேறு வித்தியாசங்களும் அதேநேரத்தில் சில ஒற்றுமைகளும் இருப்பதை புவியியல் ஆராய்ச்சியாளர்களும், சூழலியல் ஆர்வலர்களும் விளக்குகின்றனர்.
இதுபற்றி பிபிசியிடம் விளக்கிய புவியியலாளர் லோகேஷ் பார்த்திபன், ”ஒப்பீட்டளவில் பார்த்தால் மேற்குத் தொடர்ச்சி மலையை விட இமயமலை மிகவும் இளமையான மடிப்பு மலை. இமயமலை இந்தியக் கண்டத்தட்டுடன் (Tectonic plates) யுரேசியக் கண்டத்தட்டு மோதத் துவங்கியதால் ஏற்பட்ட மலைத்தொடர். அந்த புவித்தட்டுகள் இப்போதும் வேகமாக இயங்கி வருவதால் இமயமலைப்பகுதி, புவியியல்ரீதியாக இப்போதும் உள்நகர்வுகளைக் கொண்டதாகவுள்ளது.” என்றார்.
இமயமலையிலுள்ள எவரெஸ்ட் உள்ளிட்ட சில சிகரங்கள், 8500 மீட்டருக்கும் அதிகமான உயரத்தைத் கொண்டவை என்று விளக்கிய அவர், மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள சிகரங்களின் அதிகபட்ச உயரமே கிட்டத்தட்ட 3 ஆயிரம் மீட்டர் என்கிற அளவே இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இமயமலையில் பனிக்கட்டிகள் உருகி நதிகள் உருவாவதாகவும், மேற்குத் தொடர்ச்சி மலையில் சோலைக்காடுகள், புல்வெளிகள் ஆகியவற்றிலிருந்து உருவாகும் ஓடைகள், சிற்றாறுகளாகி, பின்பு நதிகளாக மாறுவதாகவும் கூறிய அவர், இமயமலைத் தொடரை ஒட்டியுள்ள இந்தியா, நேபாளம், சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பூடான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் பாயும் பல நதிகள் ஜீவநதிகளாக இருப்பதற்கு இதுவே காரணம் என்றும் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
இதே கருத்தைத் தெரிவித்த ‘ஓசை’ அமைப்பின் தலைவரும், சூழலியல் சொற்பொழிவாளருமான காளிதாஸ், நமது மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள சோலைக் காடுகளையும், புல்வெளிகளையும் காப்பாற்ற வேண்டியதன் அவசியமே, அந்த காடுகள் தென்னிந்திய நதிகளின் தாய்மடியாக இருப்பதுதான் என்றார். மேற்குத் தொடர்ச்சி மலையில் குஜராத் துவங்கி, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மலைக்காடுகளிலிருந்து உற்பத்தியாகும் பல்வேறு நதிகளையும் அவர் பட்டியலிட்டார்.
மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து கிருஷ்ணா, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, பெரியாறு, தாமிரபரணி, பவானி, சிறுவாணி உள்ளிட்ட ஆறுகள் உற்பத்தியாகின்றன. ஆனால் பெருவெள்ள பாதிப்பு என்று வரும்போது இமயமலைப் பகுதியில் பனி ஏரிகள் உடைவதால் ஏற்படும் பாதிப்பு பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் புவியியலாளர் லோகேஷ் பார்த்திபன் விளக்குகிறார்.
”மேற்குத் தொடர்ச்சி மலையில் நிலத்தைத் தோண்டும் போது பாறை, மண், தண்ணீர் இருப்பது போன்று, இமயமலைப்பகுதியின் அடியில் உறைபனி இருக்கும். மேலே பனிப்படலம் படர்ந்திருக்கும். காலநிலை மாற்றத்தால் தற்போது வெப்பநிலை அதிகரிக்கும்போது, 4 ஆயிரம் மீட்டருக்கு அதிகமாகவுள்ள மலைப்பகுதிகளில் பனிப்படலங்கள் வேகமாக உருகுகின்றன. அவை வேகமாக உருகுவதால் மேற்பரப்பின் அடியில் பாறை போன்று உறுதியாக இருந்த உறைபனி வெளியில் தெரியத் துவங்குகிறது.” என்றார் லோகேஷ்.
அவருடைய கூற்றின்படி, காலநிலை மாற்றத்தால் அந்த உறைபனிப் பாறைகளில் விரிசல்கள் ஏற்படுகின்றன. குளிர், வெப்பம் என்று வெப்பநிலை மாறும்போது, அந்த பாறைக்கிடையில் தண்ணீர் தேங்குகிறது. அதீத வெப்பம் ஏற்படும்போது பனிப்பாறை விரிசல்கள் பெரிதாகின்றன. இதன் காரணமாக இமயமலைப் பகுதியில் பனி ஏரிகள் அதிகமாக உருவாகின்றன.
பனிக்கட்டிகள் உருகும்போது தண்ணீர் மட்டுமின்றி பள்ளத்தாக்குப் பகுதிகளில் சேறு, சகதி, மரம், செடி, கொடி என எல்லாம் கலந்த இயற்கையான ஓர் அணை உருவாகும். அது முழு கொள்ளளவை எட்டும்போது வெடித்து வெள்ளப்பேரிடர் அதாவது ஏரி வெடிப்பு (GLOF-Glacial lake outburst flooding) ஏற்படும் என்பதையும் ஐசிஐஎம்ஓடி ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இது இமயமலை முழுவதற்குமான அச்சுறுத்தல் என்கிறது அந்த அமைப்பின் ஆய்வறிக்கை. நேபாளம், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் அடிக்கடி ஏற்படும் பெருவெள்ள பாதிப்புகளை இதற்கு சான்றாகக் காண்பிக்கிறது அந்த அறிக்கை.
நேபாளத்தில் இயங்கும் ஐசிஐஎம்ஓடி (The International Centre for Integrated Mountain Development–ICIMOD) தரவுகளின்படி, கடந்த 2015 ஆம் ஆண்டு விபரப்படி, இமயமலைப்பகுதிகளில் 17,680 பனி ஏரிகள் இருந்தன. 2019 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 19200க்கும் அதிகமாகியுள்ளது. அதாவது 10 சதவீத பனி ஏரிகள் அதிகமாகியுள்ளன. இவற்றில் 47 ஏரிகளில் வெடிப்பு அபாயம் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றில் 21 நேபாளத்திலும், ஒன்று இந்தியாவிலும், பிற ஏரிகள் மற்ற நாடுகளிலும் அமைந்துள்ளன.

ஆற்றுப்படுகைகளில் அதிகரிக்கும் வளர்ச்சியும் பேரிழப்புகளும்
புவியமைப்பின் அடிப்படையில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒப்பிடுகையில், காலநிலை மாற்றத்தால் இமயமலைப் பகுதியே அதிகமான அபாயங்களையும், பாதிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கிறார் லோகேஷ் பார்த்திபன்.
”தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், அருணாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதற்குக் காரணம், காலநிலை மாற்றம்தான். அதாவது மழை பெய்யும் நாட்கள் குறையும் அதேநேரத்தில், மழைப்பொழிவு அதிகரிப்பதால் வெள்ள பாதிப்பு அதிகமாகிறது. கடந்த ஆண்டில் இமாச்சலப் பிரதேசத்தில் 217 சாலைகள் உருக்குலைந்தன. அஸ்ஸாம் மாநிலத்திலும் இந்த பாதிப்பு அதிகமாகவுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையிலும் இதுபோன்ற காலநிலை பாதிப்புகள் ஏற்படுகின்றன.” என்றார் அவர்.
இருப்பினும் இரண்டு கண்டத்தட்டு மோதுமிடத்தில் இமயமலைப் பகுதி இருப்பதால் அங்கே 3 ரிக்டர் அளவில் துவங்கி 5 அல்லது 6 என்ற ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம் தொடர்ந்து பதிவாகி வருவதை என்சிஎஸ் இணையதளம் பதிவு செய்து வருவதையும் லோகேஷ் தரவுகளுடன் விளக்கினார்.
தேசிய நிலநடுக்கவியல் மையம் என்பது (National Center for Seismology -NCS), இந்தியாவில் நிலநடுக்க நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கான இந்திய அரசின் முதன்மை முகமையாகும். அதிநவீன உபகரணங்களைக் கொண்ட 170 க்கும் மேற்பட்ட நிலையங்களைக் கொண்ட ஓர் வலையமைப்பைக் கொண்டு நாடு முழுவதும் நிலநடுக்க நடவடிக்கைகளை 24 மணி நேரமும் இந்த மையம் கண்காணித்து வருகிறது.
”மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலியல் தன்மை வேறு. கடுமையான மழைப்பொழிவுதான் இங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இமயமலை அளவுக்கு உயரம் இல்லாதபோதும் இந்த மலைத்தொடரிலும் மலைச்சரிவுகளில் கட்டுமானங்கள் அதிகமாக ஏற்படுத்தப்படும்போது நிலச்சரிவு அபாயம் அதிகமாகிறது. சோலைக்காடுகளையும், புல்வெளிகளையும் அதிகமாக அழிக்கும்போது மண்ணின் தன்மை இலகுவாகி நிலச்சரிவு அபாயம் அதிகம் ஏற்படுகிறது. காலநிலை மாற்றத்தால் ஒரே நாளில் மழை கொட்டித்தீர்ப்பதால்தான் வயநாடு போன்ற இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் உயிரிழப்புகளும் சேதமும் ஏற்படுகின்றன.” என்றார் புவியியலாளரும் காலநிலை ஆய்வாளருமான லோகேஷ் பார்த்திபன்.
பட மூலாதாரம், Getty Images
இமயமலை, மேற்குத் தொடர்ச்சி மலை என எந்த மலைப்பகுதியாக இருந்தாலும், ஆற்றுப்படுகைகளில் கட்டுமானங்களை அதிகமாக அனுமதிப்பதே, அதிக உயிரிழப்புகளையும், பெரும் சேதங்களையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்துவதாகக் கூறுகிறார் உலக வன உயிரின நிதியத்துடன் இணைந்து பணியாற்றும் நிலவமைப்பு வல்லுநரான மோகன்ராஜ்.
பிபிசியிடம் பேசிய அவர், ”அக்காலத்தில் ஆற்றுக்கு சற்று தொலைவில்தான் கட்டடங்கள் உள்ளிட்ட அனைத்துக் கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டன. சமீபகாலமாக ஆற்றுப்படுகைகளில் அவற்றை ஒட்டியே குடியிருப்புகள், கட்டடங்கள், பிற வளர்ச்சிப்பணிகள் அதிகமாக மேற்கொள்ளப்படுகின்றன. சமவெளிகளில் ஆற்றோரத்தில் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும், மலைப்பகுதிகளில் ஆற்றுப்படுகைகளில் இவற்றை உருவாக்குவதற்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. மலைப்பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்படும்போது பேரிடர்களைத் தவிர்க்கவே முடியாது. ‘ என்றார்.
”நீலகிரி மாவட்டத்தின் புவியியல் அமைப்பைப் பற்றிக் குறிப்பிட்டால் மழைப்பிடிப்புப் பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ள உதகையை விட, மலையின் இறுதிப்பகுதியில் அமைந்துள்ள குன்னூர் நகரத்துக்கான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் அதிகமாக இருக்கிறது. காலநிலை மாற்றத்தால் இமயமலையில் பனிமலை உருகுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் வடகிழக்குப் பருவமழையில் குறுகிய காலத்தில் அதிகமழை பெய்வதால் நிலச்சரிவு பாதிப்புகள் ஏற்படுகின்றன.” என்றார் நிலவமைப்பு வல்லுநர் மோகன்ராஜ்.
பட மூலாதாரம், Getty Images
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள சோலைக்காடுகள், புல்வெளிகள் அழிக்கப்பட்டு, தேயிலை, காபி, ரப்பர் மற்றும் காய்கறித்தோட்டங்களாக மாற்றப்பட்டதால் இயற்கை அமைப்பு சிதைக்கப்பட்டதாகக் கூறும் அவர், அந்தத் தோட்டங்கள் அனைத்தும் இப்போது ரியல் எஸ்டேட்களாக மாறி, கான்கிரீட் காடுகளாக மாறி இன்னும் பேராபத்தை உருவாக்கி வருவதாகத் தெரிவித்தார்.
”மலையின் எல்லாப்பகுதிகளுமே பாதுகாக்கப்பட வேண்டுமென்று மாதவ் காட்கில் அறிக்கை கூறியது. அதில் இருந்தவர்கள் அனைவருமே சூழலியல் வல்லுநர்கள். ஆனால் 1.60 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பை சூழலியல் பகுதியாக அறிவிக்க அந்த அறிக்கை பரிந்துரைத்ததை, 55 ஆயிரம் சதுர கிலோ மீட்டராகச் சுருக்கியது கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கை. இப்போதும் விழித்துக் கொள்ளவில்லையென்றால் மலைப்பகுதி முழுவதும் கான்கிரீட் காடுகளாகும்.” என்றார் காளிதாஸ்.
”மலைப்பகுதிகளில் கட்டடங்கள் கட்டுவதற்கு தீவிரமான கட்டுப்பாட்டைக் கொண்டு வருவது அவசியம். காலம் காலமாக வாழும் மண்ணின் மைந்தர்களுக்கு தனியொரு கட்டட விதியையும், வெளியாட்களுக்கு தனியான கட்டட விதிகளையும் உருவாக்க வேண்டும். ஒட்டுமொத்த மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் சேர்த்து ஓர் அதிகார அமைப்பை உருவாக்க வேண்டுமென்று மாதவ் காட்கில் அறிக்கை தெரிவித்தது. குறைந்தபட்சம் தமிழ்நாட்டுக்கு மட்டுமாவது அப்படி ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்.” என்றும் காளிதாஸ் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு