
-
- எழுதியவர், ராபர்ட் கிரீனால்
- பதவி,
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
அமெரிக்கா, பூமியின் சுற்றுப்பாதையில் ஒரு விண்வெளி ஆயுதத்தை நிலைநிறுத்தி இருப்பதாக அறிவித்திருப்பது, ‘உண்மையில் விண்வெளியில் என்னென்ன ஆயுதங்கள் உள்ளன, அந்த ஆயுதங்கள் விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தும் முயற்சிகளில் வல்லரசுகளுக்கு எந்த வகையில் உதவக்கூடும்’ என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.
அமெரிக்கா தனது அறிவிப்பில் மிகக் குறைவான தகவல்களையே வெளியிட்டுள்ளது. அமெரிக்க விமானப் படை செயலாளர் ட்ராய் மெயின்க், எதிரிகளின் விரோத நடவடிக்கைகளில் இருந்து அமெரிக்க படைகளைப் பாதுகாக்க “சுற்றுப்பாதையில் உள்ள” இந்த ஆயுதம் அவசியம் என்று கூறினார்.
ஆனால், அந்த ஆயுதத்தின் திறன்கள், அது எப்போது விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டது என்பன குறித்த எந்த விவரங்களையும் அவர் தெரிவிக்கவில்லை.
அப்படியானால், இந்த ஆயுதம் என்னவாக இருக்கலாம்? விண்வெளியில் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்தான பரந்த கண்ணோட்டம் என்ன? இத்தகைய ஆயுதங்களை வேறு யாரெல்லாம் வைத்திருக்கக் கூடும்?
விண்வெளி யுகம் தொடங்கிய காலம் முதலே விண்வெளி ஒரு ராணுவமயமாக்கப்பட்ட களமாக இருந்து வருகிறது. 1960களின் பிற்பகுதியில், சோவியத் யூனியன் விண்வெளியில் ஆயுதங்களை நிலை நிறுத்தியது.
‘இஸ்த்ரெபிடெல் ஸ்புட்னிகோவ்’ (ஐஎஸ் – செயற்கைக்கோள் அழிப்பான்) திட்டத்தின் கீழ், மற்றொரு செயற்கைக்கோளின் (பொதுவாக அமெரிக்க செயற்கைக் கோளின்), பாதையில் வெடித்துச் சிதறி உலோகத் துண்டுகளைப் பரப்பும் வகையில் எறிபொருட்களை (shrapnel) வெளியிடக் கூடிய செயற்கைக்கோள்கள் உருவாக்கப்பட்டன.
தற்போது, முன்னேறிய ராணுவப் படைகள் விண்வெளியில் பல்வேறு நோக்கங்களுக்காக செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துகின்றன.
உளவு நடவடிக்கைகள், பாதுகாப்பான தகவல் தொடர்பு, ஏவுகணை ஏவுதல்களைக் கண்டறிதல், இலக்குகளைத் தாக்குவதற்கான துல்லியமான இருப்பிடத் தகவல்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அவை பயன்படுத்தப்படுகின்றன.
போர் நடவடிக்கைகள் தொழில்நுட்ப ரீதியாக மேலும் முன்னேறி வரும் நிலையில், விண்வெளியில் ராணுவத் தளவாடங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் (RUSI) என்ற அமைப்பின் ராணுவ அறிவியல் பிரிவின் இணை ஆய்வாளரும், டர்ஹாம் பல்கலைக் கழகத்தின் விண்வெளி அரசியல் துறையின் இணைப் பேராசிரியருமான முனைவர் பிளெட்டின் போவன், அமெரிக்கா அறிவித்துள்ள இந்த ஆயுதம் குறித்து தன்னால் ஊகிக்க மட்டுமே முடியும் என்று கூறினார்.
“இது ஒரு வகையான மின்னணு போர் அல்லது வானொலி அலைகளைத் தடை செய்யும் தளமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கிறேன். ஒருவேளை, இது அழிவை ஏற்படுத்தாத வகையிலான செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதமாக இருக்கலாம்” என்று அவர் பிபிசி ரேடியோ 4இன் ‘டுடே’ நிகழ்ச்சியிடம் தெரிவித்தார்.
இதுபோன்ற ஆயுதங்கள் ஏற்கெனவே பூமியில் பயன்பாட்டில் உள்ளதாகவும், அவை செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளைத் தடை செய்ய முடியும் என்றும் அவர் கூறினார். “வானொலி இணைப்புகளைத் துண்டித்துவிட்டால், உங்கள் செயற்கைக்கோள் மிகவும் பயனற்றதாகிவிடும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிக ஆபத்தையும் தீவிர பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடிய மற்றொரு வகையான ஆயுதம் இருப்பதற்கான வாய்ப்பையும் போவன் நிராகரிக்கவில்லை. அத்தகைய ஆயுதம் விண்வெளிக் குப்பைகளையும் அழிவையும் ஏற்படுத்தக்கூடும்.
“ஒருவிதமான இயக்கவியல் அழிப்பு வாகனம் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. அதாவது, ஒரு செயற்கைக்கோளின் மீது மோதித் தாக்கி அதை அழிக்கக்கூடிய எறிபொருளை வெளியிடும் வாகனம். நெருங்கிச் சென்று ஆய்வு செய்யும் மற்றும் செயற்கைக்கோளைப் பற்றிப் பிடிக்கும் வகையிலான செயற்கைக்கோளும் மற்றொரு சாத்தியமாக இருக்கலாம்,” என்று அவர் கூறினார்.
ரஷ்யா, சீனா போன்ற போட்டி நாடுகளிடம் இதேபோன்ற ஆயுதங்கள் ஏற்கெனவே விண்வெளியில் உள்ளனவா என்பதைச் சொல்வது கடினம். “சீனா, ரஷ்யாவை பார்க்கும்போது, இரு நாடுகளும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன” என்று ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் (RUSI) அமைப்பின் முன்னாள் ஆய்வு உறுப்பினரும், ஜெர்மன் சர்வதேச மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான நிறுவனம் அமைப்பின் ஆய்வாளருமான ஜூலியானா சூஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.
“உதாரணமாக, ரஷ்யாவை பொறுத்தவரை, ஒரே சுற்றுப்பாதையில் இயங்கும் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுத சோதனையாக இருக்கக்கூடிய நடவடிக்கையைப் பார்த்துள்ளோம். அதாவது, சுற்றுப் பாதையில் ஒரு எறிபொருளைச் சோதனைக்காக ஏவியிருக்கலாம் என்பதைக் குறிக்கும் ஒன்றை நாம் பார்த்தோம். இதுபோன்ற மற்றவையும் இருக்கின்றன. ஆனால், அமெரிக்க ஆயுதம் என்ன என்பது குறித்த விவரங்கள் தெரியாத நிலையில், அவற்றை ஒப்பிடுவது கடினம்.”

விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த ஆயுதம் வழக்கத்திற்கு மாறானதாக இருக்கலாம். ஆனால், அமெரிக்காவும், அதன் போட்டி நாடுகளான ரஷ்யாவும் சீனாவும், விண்வெளியை நோக்கி குறிவைத்து ஏவக்கூடிய ஆயுதங்களை ஏற்கெனவே சில காலமாக வைத்துள்ளன. பின்னர் பிபிசிக்கு அளித்த பேட்டியில், விண்வெளியில் ஆயுதப் போட்டி ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டுமென அமெரிக்காவின் அறிவிப்புக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது குறித்து போவன் விமர்சித்தார். இதை அவர் “திருடனே திருடனைப் பார்த்து திருடன் என்று கூறுவது போல” என்று விவரித்தார்.
“நீங்கள் ஏற்கெனவே இந்தத் துறையில் நிபுணராக இருந்தால்… ரஷ்ய, சீன அரசுகளிடம் இருந்து வரும் அந்த வார்த்தைகள் எவ்வளவு வெறுமையானவை என்பது உங்களுக்குத் தெரியும்” என்று அவர் கூறினார்.
“அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் அனைத்தும் பல்வேறு வகையான செயற்கைக்கோள் எதிர்ப்பு அல்லது விண்வெளி எதிர்ப்பு ஆயுதங்களை உருவாக்கியுள்ளன. ரஷ்யாவும் சீனாவும் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுவதற்கான அதிக வாய்ப்புள்ள பல தொழில்நுட்பங்களை விண்வெளியில் நிலைநிறுத்தியுள்ளன” என்றும் அவர் கூறினார்.
உண்மையில், கடந்த 10 ஆண்டுகளில், ரஷ்யாவும் சீனாவும் விண்வெளியில் அதிகளவில் ‘ரெண்டெவூஸ் அண்ட் ப்ராக்ஸிமிட்டி ஆபரேஷன்ஸ்’ (RPOs) எனப்படும் நெருங்கிச் சந்தித்து அருகில் இயங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் மேற்கத்திய செயற்கைக் கோள்களுக்கு அருகில் சென்று அவற்றைப் “பின்தொடர்வதும்” அடங்கும்.
“கோட்பாட்டளவில், இந்த ஆர்பிஓ செயற்கைக் கோள்கள், மற்ற செயற்கைக் கோள்களுடன் நேரடியாக மோதி அல்லது அவற்றைச் சுற்றுப் பாதையில் இருந்து விலகிச் செல்லும் வகையில் நகர்த்துவதன் மூலம், வேட்டையாடி அழிக்கும் செயற்கைக் கோள்களாக மாறக்கூடும்” என்று லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் ரஷ்ய பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஆய்வுகள் துறை விரிவுரையாளர் முனைவர் ராட் தோர்ன்டன் பிபிசியிடம் தெரிவித்தார்.
சீனா “விண்வெளி இழுவை வாகனத் திறனை” வெளிப்படுத்தியுள்ளதாக போவன் கூறினார். “ஒரு வாகனம் செயற்கைக் கோளின் அருகே சென்று, அதைப் பற்றிப் பிடித்து, வேறு சுற்றுப் பாதைக்கு நகர்த்த முடியும்” என்று அவர் கூறினார்.
இதுவொரு சாதகமான வளர்ச்சியாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். விண்வெளிக் குப்பைகளை அகற்றுவதற்கும், செயல்பாட்டில் உள்ள செயற்கைக் கோள்களைச் செயலிழக்கச் செய்வதற்கும் இதுவொரு வழியாக இருக்கலாம். இருப்பினும், சில வகையான விண்வெளி ஆயுதங்கள் மிகப் பெரிய அளவில் விண்வெளிக் குப்பைகளை உருவாக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளன.
கிங்ஸ் கல்லூரியில் விண்வெளிப் பாதுகாப்பு மற்றும் ஆயுதமயமாக்கல் நிபுணரான முனைவர் மார்க் ஹில்போர்ன், 2007ஆம் ஆண்டு சீனா நடத்தியது போன்ற நேரடியாக விண்வெளிக்குச் சென்று செயற்கைக் கோள்களைத் தாக்கும் ஏவுகணைச் சோதனைகள், நீண்ட காலத்திற்கு சுற்றுப் பாதையில் அதிகளவிலான குப்பைகளை விட்டுச் செல்கின்றன என்று கூறினார்.
அந்தச் சோதனையால் ஏற்பட்ட குப்பைகள் இன்னும் சுற்றுப் பாதையில் இருப்பதுடன், அவை இன்னும் ஆபத்தானவையாக உள்ளன என்று சூஸ் கூறினார். அவரது கூற்றுப்படி, “சேதத்தை ஏற்படுத்துவதற்கு அது மிகப் பெரிய உலோகத் துண்டாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நாம் பேசும் சுற்றுப்பாதை வேகத்தைப் பொறுத்தவரை, ஒரு சிறிய பிளாஸ்டிக் துண்டுகூட போதுமானது” என்று அவர் கூறினார்.

அணு அச்சுறுத்தல்
தோர்ன்டன் கூறுகையில், விண்வெளி ஆயுதங்கள் மற்றும் செயற்கைக் கோள்கள் விஷயத்தில் ரஷ்யாவிடம் உள்ள குறைபாட்டை, அதன் ஏவுகணைத் திறன் ஈடுசெய்கிறது.
“ரஷ்யர்களிடம்… தாழ்வான புவி சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக் கோள்களைத் தாக்குவதற்காக விண்வெளியை நோக்கி ஏவக்கூடிய தரை அடிப்படையிலான ஏவுகணைகள் உள்ளன. மேலும், விமானங்களில் இருந்து அதிக உயரத்தில் இருந்து ஏவக்கூடிய ஏஎஸ்ஏடி [விமானத்தில் இருந்து ஏவப்படும் செயற்கைக்கோள் எதிர்ப்பு] ஏவுகணைகளும் அவர்களிடம் உள்ளன” என்று அவர் கூறினார்.
“ரஷ்யாவின் பார்வையில், ரஷ்ய ராணுவத்தால் பயன்படுத்தக் கூடிய செயற்கைக் கோள்களைவிட நேட்டோவிடம் மிகச் சிறந்த மற்றும் அதிக எண்ணிக்கையிலான செயற்கைக் கோள்கள் இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். எனவே, ‘போர்க்களத்தில் ஓரளவுக்கு சமநிலையை ஏற்படுத்துவதற்காக’ ஏஎஸ்ஏடி ஆயுதங்களில் அவர்கள் அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர்.”
தோர்ன்டன் மேலும் ஒரு கவலைக்குரிய கருத்தையும் தெரிவித்தார். “கடைசி முயற்சியாக, ரஷ்யர்கள் அணு ஆயுதங்களையும் விண்வெளிக்கு ஏவ முடியும். அப்போது ஏற்படும் ஈ.எம்.பி [அணு மின்காந்தத் துடிப்பு] வெடிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாத செயற்கைக் கோள்களைப் பரந்த பரப்பளவில் ‘எரித்துவிடும்’.”
அப்படியானால், விண்வெளியில் அணு ஆயுத மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்பு எவ்வளவு? அது பூமியிலும் மோதல் நடைபெறும் சூழலில் மட்டுமே சாத்தியமாகும். “விண்வெளியில் என்ன நடக்கக்கூடும் என்பது உண்மையில் தனித்து நடைபெறும் ஒரு விஷயமாக இருக்காது” என்று கூறும் போவன், “எதுவும் நடக்காமல் இருக்கலாம், அல்லது ஏதாவது நடக்கலாம்” என்றார்.
விண்வெளியில் பயன்படுத்துவதற்கான ஆயுதங்கள் இவ்வளவு காலமாக இருந்து வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இப்போதுதான் வெளியானது ஏன்? இது பெரிய அளவிலான புதிய முன்னேற்றமல்ல. மாறாக, இதுவொரு அரசியல் சமிக்ஞை என்று நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
இது சீனாவின் முன்னேற்றங்களுக்கு ஒரு பதிலாக இருக்கலாம் என்று போவன் கூறினார். “கடந்த 30 ஆண்டுகளில் சீனா தனது ராணுவப் படைகளை நவீனமயமாக்கியுள்ளதாக” கூறிய அவர், “அது விண்வெளியில் அதிக எண்ணிக்கையிலான ராணுவ செயற்கைக் கோள்களை நிலைநிறுத்தியுள்ளது. இதனால், அமெரிக்க ராணுவம் தாக்குவதற்கும் அழிப்பதற்கும் மதிப்புள்ள இலக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது” என்றும் குறிப்பிட்டார்.
“இப்போது அமெரிக்க விண்வெளி ஆயுதங்களுக்கான ஊக்கம் அதிகமாக உள்ளது. ஏனெனில், அமெரிக்கர்களை போலவே சீனாவும் விண்வெளியைச் சார்ந்திருப்பதால் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளது.”
இந்த நிலைமை ஒரு வினோதமான சமநிலையின்மையை உருவாக்கியுள்ளதாகத் தெரிகிறது. சீனா மற்றும் அமெரிக்காவை போல அதிக எண்ணிக்கையிலான செயற்கைக் கோள்கள் ரஷ்யாவிடம் இல்லாததால், விண்வெளிப் போர் ஏற்பட்டால் ரஷ்யாதான் “பெரும் வெற்றியாளராக” இருக்குமென தோர்ன்டன் கூறினார்.
“விண்வெளியை நோக்கி ஏவப்படும் ஏவுகணைகள், செயற்கைக் கோள்களை நகர்த்தவோ அழிக்கவோ வடிவமைக்கப்பட்டு அவற்றை நெருங்கிச் செல்லும் செயற்கைக் கோள்கள், தரை அடிப்படையிலான லேசர்கள் ஆகியவை இதில் இடம்பெறும்” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு