• Sat. Sep 19th, 2026

24×7 Live News

Apdin News

தைரியமிருந்தால் சர்வஜன வாக்கெடுப்பினை நடத்துங்கள் அரசாங்கத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி சவால்!

Byadmin

Sep 19, 2026


அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டும் போதாது. அரசாங்கத்துக்கு 159 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்குமாயின் இது குறித்து சர்வசன வாக்கெடுப்பினை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சவால் விடுத்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு சவால் விடுத்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனநாயகத்தைக் காக்கும் இப்போராட்டத்தில் இணையுமாறு அனைவருக்கும் திறந்த அழைப்பு விடுக்கின்றோம். எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் பாரிய எதிர்ப்புக் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இப்போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஜனநாயகத்தைக் காக்க விரும்பும் அனைத்துத் தரப்பினரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

நாட்டின் ஜனநாயகத்தைச் சீரழிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராகத் நாம் ஏற்கனவே அநுராதபுரத்தில் 500 கிராமங்களுக்குச் சென்று 5,000க்கும் மேற்பட்ட மக்களைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுவில் பேராசிரியர்கள், மருத்துவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஓய்வுபெற்ற உயர் இராணுவ அதிகாரிகள் எனப் பல உகந்த கல்வியாளர்கள் அங்கத்துவம் வகிக்கின்றனர்.

ஜே.வி.பி.யின் கடந்தகால ஜனநாயக விரோத வரலாற்றுக்குக் குருட்டுத்தனமாகத் துணைபோகாமல், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கத் தங்களது மனச்சாட்சிக்கு அமைவாக இந்த 22ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு புத்திஜீவிகளிடம் பகிரங்கக் கோரிக்கை விடுக்கின்றோம்.

அத்துடன், மொனராகலை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்று வகுப்புகளை நடத்தி வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. ஜே.வி.பி. மீண்டும் பழைய பாணியில் புதிய தலைமுறை மாணவர்களைத் திசைதிருப்பி அழிக்க முயல்கிறதா? அரசாங்கம் தன்னிச்சையாகச் செயற்படாமல் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு கண்டிருக்க வேண்டும்.

தங்களது நியாயமான உரிமைகளுக்காகப் போராடி வரும் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஆதரவை வழங்கும் என்றார்.

By admin