
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
சென்னையில் உள்ள தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் கைலாஷ் மானசரோவர் சென்ற 49 பேரின் நிலை குறித்த தகவல் எதுவும் இதுவரை கிடைக்காததால் அவர்களின் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
“பயணம் மேற்கொள்ள வேண்டாமெனப் பலமுறை கூறியும் அம்மா கேட்கவில்லை. இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை” எனக் கூறி கலங்குகிறார், திருச்சியைச் சேர்ந்த பிரியங்கா.
“கடந்த இரண்டு நாட்களாக என் அக்கா, மாமா, மாமியார் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை” என்கிறார் தேனியைச் சேர்ந்த கோபி.
இந்திய தூதரகத்தில் இருந்து உரிய பதில் வரும் என எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் அவர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் 300 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். வெள்ளப் பெருக்கில் காணாமல் போனவர்களைத் தொடர்புகொள்ள முடியாத நிலை நீடிக்கிறது.
இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று நேபாள அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து கைலாஷ் மானசரோவர் பயணம் மேற்கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளில் 21 பேர் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
அதேநேரம், சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி கைலாஷ் மானசரோவர் சென்ற 49 பேரின் நிலை குறித்த எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இந்தச் சூழலில் குடும்பத்தினரின் நிலை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள, கைலாஷ் மானசரோவர் பயணம் மேற்கொண்டபோது தனியார் சுற்றுலா நிறுவனத்திடம் அவர்கள் அளித்த விவரங்களின் அடிப்படையில், பயணிகளின் உறவினர்கள் சிலரைத் தொடர்புகொண்டு பிபிசி தமிழ் பேசியது.

‘வரவேண்டாம் எனக் கூறிவிட்டனர்’
“திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலராக இருந்து அம்மா ஓய்வு பெற்றுவிட்டார். கைலாஷ் மலைக்குப் போக வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. ஆனால் இப்படியொரு சிக்கல் ஏற்பட்டுவிட்டது” எனக் கூறி கலங்குகிறார் மதுரையைச் சேர்ந்த அடால்ஃப்.
இவரது அம்மா மாரி மீனாள் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் கைலாஷ் மானசரோவருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
“என் அப்பா சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பிறகு அடிக்கடி ஆன்மீக பயணங்களை அம்மா மேற்கொண்டு வந்தார். பயணத்தின்போது சர்வதேச எல்லையில் இருந்ததால் போனில் சரியாகப் பேச முடியவில்லை. சுற்றுலா நிறுவனத்தின் வழிகாட்டி சத்தியநாராயணனின் போனில் இருந்து அம்மா பேசினார்” என்கிறார் அடால்ஃப்.
மேலும் அவர், “புதன் கிழமையன்று சென்னைக்கு வந்துவிடுவதாகக் கூறினார். சென்னையில் இருக்கும் சகோதரர் வீட்டில் தங்குவதாக இருந்தார். எல்லையில் இமிக்ரேஷன் அலுவலகத்தில் இருந்தபோது வெள்ளப் பேரிடர் சிக்கலை அவர் எதிர்கொண்டுள்ளார்” எனக் கூறினார்.
தனது தாயின் நிலையை அறிவதற்கு காத்மாண்டுவில் உள்ள தனியார் சுற்றுலா நிறுவனத்தைத் தொடர்புகொண்டு அடால்ஃப் பேசியுள்ளார். “அவர்களோ, ‘நிலைமை சரியில்லை. நீங்கள் வர வேண்டாம்’ எனக் கூறிவிட்டனர்” என்கிறார்.
“அவருக்கு 64 வயதாகிவிட்டது. அவரது நிலை என்னவென்று தெரியாமல் தாங்கள் மிகுந்த மனவேதனையில் இருப்பதாகவும்” அவர் தெரிவித்தார்.
‘போக வேண்டாம் எனக் கூறினேன்’
பொள்ளாச்சியைச் சேர்ந்த கனக சுந்தராம்பாள், திருச்சியில் அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியராக இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் கைலாஷ் மானசரோவருக்கு இவர் சென்றுள்ளார்.
“கடந்த 25ஆம் தேதி அம்மாவிடம் கடைசியாகப் பேசினேன். அவருக்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கைலாஷ் மானசரோவருக்கு அம்மா சென்று வந்தார்” என்கிறார், கனகசுந்தராம்பாளின் மகள் பிரியங்கா.

“அப்பா இறந்த பிறகு இரண்டாவது முறையாக கைலாஷ் மலை செல்ல வேண்டுமென அம்மா கூறினார். ஆனால், போக வேண்டாம் எனக் கூறி நிறுத்தி வைத்திருந்தேன். கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் திபெத் செல்வதற்கு அனுமதி கிடைக்கவில்லை” என்றார்.
“ஆகஸ்ட் மாதம் அனுமதி கிடைத்ததால் போவதாகக் கூறினார். ஆனால், அங்கு எல்லோரும் சாமி கும்பிடச் சென்றுள்ளனர். ஆனால், தன்னால் போக முடியவில்லை எனக் கூறி வீடியோ காலில் வந்து பேசினார். அறையில் இருந்து மலை தெரிவதாகக் கூறியதாக” அவர் தெரிவித்தார்.
கனகசுந்தராம்பாளுடன் அவரது தோழி விமலா என்பவரும் கைலாஷ் மானசரோவர் சென்றுள்ளார். “இமிக்ரேஷன் அலுவலக நடைமுறைகள் முடிந்த பிறகு கிளம்ப வேண்டுமென்று அம்மா கூறினார். எனக்கு அம்மா மட்டும்தான் இருக்கிறார். அவர் எனக்கு வேண்டும். அவர் பாதுகாப்பாக இருந்தால் போதும்” எனக் கூறி அழத் தொடங்கினார் பிரியங்கா.
‘கைலாஷ் செல்ல விரும்பினார்’
தேனி மாவட்டம், கோடங்கிப்பட்டியைச் சேர்ந்த செல்வம் – சித்ராதேவி தம்பதி, உறவினர் சரஸ்வதி ஆகியோர், சென்னையைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மூலமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி கைலாஷ் மானசரோவர் சென்றுள்ளனர்.
இவர்கள் மூவரின் நிலை குறித்து எந்தத் தகவலும் தெரியாததால் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். “செல்வம், தொலைக்காட்சி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். சிவன் கோயிலுக்குச் செல்வது என் அக்கா சித்ரா தேவியின் வழக்கமாக உள்ளது” என்கிறார் கோபி.
கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய கோயில்களுக்குப் பலமுறை தன் அக்கா சென்று வந்துவிட்டதாக பிபிசி தமிழிடம் கூறிய அவர், “அனைத்து சிவன் கோயில்களையும் பார்த்துவிட்டதால், ‘கைலாஷ் மலையையும் பார்க்க வேண்டும்’ எனக் கூறிவிட்டுக் கிளம்பினார்” என்கிறார்.
தனது குடும்பத்தினரிடம் சித்ரா தேவி செவ்வாய்க் கிழமை பேசியுள்ளார். “இமிக்ரேஷன் அலுவலகம் முன்பாக இருப்பதாகக் கூறினார். காலையில் சுமார் 8 மணியளவில் அங்குதான் இருந்துள்ளனர். அப்போது வெள்ளம் வந்துள்ளதை தொலைக்காட்சியில் பார்த்தோம்” என்கிறார் கோபி.
மேலும், “இரண்டு நாட்களாக எந்தத் தகவலும் தெரியாமல் தொலைக்காட்சி முன்பாக அமர்ந்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார். செல்வம் – சித்ரா தேவி தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் பிளஸ் 2 படித்து வருகிறார். இன்னொருவர் மருத்துவம் படித்து வருகிறார்.

‘மலையேற்றத்தில் ஆர்வம்’
கரூரில் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் அன்பரசு, கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மூலமாக கைலாஷ் மானசரோவருக்கு சென்றுள்ளார்.
அவரது மனைவி சித்ராவை தொடர்புகொண்டபோது, “நான் பேசும் நிலையில் இல்லை” எனக் கூறி மகள் பிருந்தாவிடம் பேசுமாறு தெரிவித்தார். அவரது மகள் பிருந்தா கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருகிறார்.
தனது தந்தை குறித்துப் பேசிய பிருந்தா, “அப்பாவுக்கு மலையேற்றம் செல்வது மிகவும் பிடிக்கும். கடந்த ஆண்டு அமர்நாத் சென்றார். இந்த முறை கைலாஷ் போகலாம் என முடிவெடுத்துக் கிளம்பினார். நேபாளம் செல்வது இதுதான் முதல் முறை” என்றார்.
கடந்த முறை அமர்நாத்துக்கு அன்பரசு பயணம் சென்றபோது நாமக்கல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். “அவருடன் இணைந்து கைலாஷ் மானசரோவருக்கு அப்பா பயணம் மேற்கொண்டார்” என்கிறார் பிருந்தா.
ஆகஸ்ட் 26ஆம் தேதி காலையில் வாட்ஸ்ஆப் வீடியோ காலில் தனது தந்தை பேசியதாகக் கூறும் அவர், “இமிக்ரேஷன் நடைமுறைகள் உள்ளதாகக் கூறினார். அதன் பிறகு அவரிடம் இருந்து அழைப்பு எதுவும் வரவில்லை. இணைய சேவையில் பாதிப்பு எனக் கருதினோம்” என்கிறார்.
பிறகு தொலைக்காட்சியில் பார்த்தபோதுதான் வெள்ளம் வந்தது தெரிய வந்ததாகக் கூறும் பிருந்தா, “தூதரகத்தில் இருந்து முறையான தகவல் கிடைக்கவில்லை. தனியார் சுற்றுலா நிறுவனத்தின் உரிமையாளர் மகனும் வெள்ளப் பேரிடரில் சிக்கிவிட்டதாகத் தகவல் கிடைத்தது” எனக் கூறுகிறார்.
“நேபாள தூதரகத்தில் கேட்டபோது, சிலரை மீட்டு வைத்துள்ளதாகக் கூறினர். என் அப்பாவுடன் சென்ற 49 பேரின் நிலை என்ன ஆனது எனத் தெரியவில்லை. அவர்கள் பாதுகாப்பாக இருந்தால் போதும்” எனக் கூறும் பிருந்தா, “கும்பகோணத்தில் இருந்து சென்றவர்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. எங்களுக்கு அதுபோன்ற எந்தத் தகவலும் கிடைக்கவில்லை” என வேதனைப்பட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு