தமிழ்நாட்டின் சில பகுதிகள் உள்பட நாடு முழுவதும் ஜூன் மாதத்திலும் வெப்ப அலை தீவிரமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது. வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பகல் மட்டுமின்றி இரவிலும் வழக்கத்தை விட அதிகமான வெப்பத்தை உணர முடிகிறது. இதனால் ஏற்படக் கூடிய உடல்நல பாதிப்புகள் குறித்தும், அதிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும், மருத்துவர் அருள்மொழிச்செல்வன் பிபிசி தமிழுக்கு அளித்த விரிவான நேர்காணலில் விளக்கியுள்ளார்.
உடலுக்கு வெப்பம் தேவை என்றாலும், அளவுக்கு அதிகமான வெப்பம் பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கும் மருத்துவர் அருள்மொழிச்செல்வன் “பருவநிலை மாறும்போது நம் உடலும் மாற்றங்களுக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ளும் தன்மை கொண்டது. ஆனால் இந்தக் கோடையில் வெப்பம் சாதாரண அளவைவிட மிகவும் அதிகமாக இருப்பதால், உடல் அதைச் சமாளிக்க இயலாத நிலை உருவாகிறது” என்று குறிப்பிடுகிறார்.
மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல்
வெப்ப அலை வீசத் தொடங்கியதும் வெப்ப அலையில் இருந்து தற்காத்துக் கொள்ள பொது மக்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதன்படி,
மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
மதிய வேளைகளில் கடுமையான உடல் உழைப்பு சார்ந்த வேலைகளைத் தவிர்க்க வேண்டும்.
வெளியில் செல்லும்போது செருப்பு அணியாமல் செல்லக் கூடாது.
உச்சகட்ட வெயில் நேரத்தில் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
சமையலறையில் போதுமான காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மது, தேநீர், காபி மற்றும் அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்கள் உடலை நீர்ச்சத்தின்றிச் செய்துவிடும் என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
அதிக புரதம் கொண்ட உணவுகளையும் பழைய உணவுகளையும் சாப்பிட வேண்டாம்.
யாராவது மிக அதிக உடல் வெப்பத்துடன், சுயநினைவை இழந்தோ அல்லது குழப்பமான நிலையிலோ காணப்பட்டால், உடனடியாக 108 அல்லது 102 என்ற அவசர உதவி எண்களைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
இந்த வெப்ப தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாத்துக் கொள்ள நீர்ச்சத்தை பராமரிப்பது மிக அவசியம் என்று மருத்துவர் அருள்மொழிச்செல்வன் வலியுறுத்துகிறார்.
“குறிப்பிட்ட நேரத்திற்குக் காத்திருக்காமல், இடைவெளி விட்டு தொடர்ந்து தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் மட்டுமே போதாது, உப்பு சேர்த்த தண்ணீர், எலுமிச்சை சாறு, மோர் ஆகியவை நல்ல தேர்வுகளாகும். ஏனெனில் வெறும் தண்ணீர் மட்டும் குடித்தால் உடலில் உள்ள உப்புச்சத்து நீர்த்துப் போய்விடும். தர்ப்பூசணி, கீரை, பழங்கள் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்” என்று அவர் விளக்கினார்.
“வெப்ப அலை அதிகரித்துள்ள கால கட்டத்தில் எண்ணெயில் வேகவைத்த மற்றும் வறுத்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இவை உடல் வெப்பத்தை அதிகரிக்கும். குறிப்பாக இரவில் இத்தகைய உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில், இரவு நேரத்தில் உடல் தன்னைச் சரிசெய்து கொண்டு மறுநாளுக்குத் தயாராகும் நேரம் அது. கோழி, ஆட்டிறைச்சி போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டியதில்லை; விரும்பினால் குறைவான எண்ணெயில் தயாரித்த தெளிவான சூப்பாக எடுத்துக் கொள்ளலாம்” என்கிறார் அருள்மொழிச்செல்வன்.
பட மூலாதாரம், Getty Images
வெப்ப பாதிப்பின் நான்கு நிலைகள்
வெப்ப பாதிப்பு நான்கு படிநிலைகளில் ஏற்படுவதாக அருள்மொழிச்செல்வன் கூறுகிறார். “வெப்ப தசைப்பிடிப்பு (Heat Cramps), வெப்பச் சோர்வு (Heat Exhaustion), வெப்ப மயக்கம் (Heat Syncope) மற்றும் வெப்ப பக்கவாதம் (Heat Stroke).”
அவரது கூற்றுப்படி,
வெப்ப தசைப்பிடிப்பு என்பது லேசான நீரிழப்பால் ஏற்படும் கால்களின் வலி நிலை. நிழலில் ஓய்வெடுத்து தண்ணீர் குடித்தால் சரியாகிவிடும்.
வெப்ப சோர்வில் தலைவலி, தலைசுற்றல், வாந்தி, உடல் வலி, சோர்வு ஆகிய அறிகுறிகள் தோன்றும்.
வெப்ப மயக்கம் என்பது 2 முதல் 3 நிமிடங்கள் நீடிக்கும் தற்காலிக சுய நினைவிழப்பு நிலை, இது தானாகவே சரியாகும்.
வெப்ப பக்கவாதம் மிகவும் தீவிரமான நிலை. உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது வலிப்பு, குழப்பம், மயக்கம் ஆகியவை ஏற்படலாம். இந்த நிலையில் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். தாமதித்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.
யாருக்கு அதிக ஆபத்து?
வெப்ப பாதிப்பு வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான அபாயத்தைக் கொண்டிருப்பதாக மருத்துவர் அருள்மொழிச்செல்வன் தெரிவிக்கிறார்.
குறிப்பாக “வயதானவர்களுக்கு தாகம் உணரும் திறன் குறைவதால், தண்ணீர் குடிக்க மறந்துவிடுவார்கள். இதை அவர்களை கவனிக்கும் நபர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். கர்ப்பிணிகளுக்கு இதயத் துடிப்பு அதிகமாக இருப்பதால் வெப்பத்தால் இதய பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
ரத்த அழுத்தம், சிறுநீரக நோய், சுவாசப் பிரச்னை உள்ளவர்கள், தொடர் மருந்துகள் உட்கொள்பவர்கள் ஆகியோரும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக ரத்த அழுத்தத்திற்கான மருந்துகள் சில நீரிழப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என்பதால் நீர்ச்சத்தை தொடர்ந்து பராமரிக்க வேண்டியது அவசியம்” என்று அவர் கூறினார்.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் கைக் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் அல்லது இதய நோய் போன்ற ஏற்கெனவே உள்ள உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
தூங்க செல்லும் முன் குளிப்பதில் யாருக்கு எச்சரிக்கை அவசியம்?
ஓட்டுநர்கள், கட்டடத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள் போன்றோர் தொடர்ந்து வெப்பத்தில் வேலை செய்வதால் வெப்ப பாதிப்புக்கு மிகவும் அதிகமான அபாயத்தில் உள்ளனர் என்று அருள்மொழிச்செல்வன் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, “இவர்கள் குறைந்தது தண்ணீர் மற்றும் மோரை சிறிது நேர இடைவெளியில் அவ்வப்போது குடிக்க வேண்டும். கட்டட பணிகளை இரவு நேர ஷிப்டுகளுக்கு மாற்றுவது அல்லது நடுப்பகல் நேரத்தில் இடைவெளிகள் கொடுப்பது உதவியாக இருக்கும்.”
இதையே உலக சுகாதார மையமும் கூறியுள்ளது. அதன்படி, “வெளிப்புற மற்றும் உடல் உழைப்புப் பணியாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் குடிமைப் பாதுகாப்பு ஊழியர்கள் ஆகியோர் தங்கள் பணியின் காரணமாக அதிகப்படியான வெப்பத்திற்கு ஆளாகி, உடல் உழைப்பால் ஏற்படும் வெப்ப அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.”
“தரமற்ற வீடுகள் மற்றும் குளிர்விக்கும் வசதி இல்லாததால், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகள் பெரும்பாலும் அளவுக்கு அதிகமாக வெப்பத்தால் பாதிக்கப்படுகின்றனர். கட்டுமானப் பொருட்களின் காரணமாக, சில நகரங்களில் உள்ள முறைசாரா குடியிருப்புகள் பிற நகர்ப்புறப் பகுதிகளைவிட பெரும்பாலும் வெப்பமாக இருக்கின்றன” என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
“தற்போதைய வெப்ப அலையில் இரவிலும் வெப்பம் அதிகமாக இருக்கிறது. இதனால் உறக்கமும் தடைபடுகிறது. இதனால், இரவில் உடல் தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும் செயல்முறையும் தடைபடும். இந்தப் பிரச்னையைத் தீர்க்க, பகல் நேரத்திலேயே உங்களது தயாரிப்பு தொடங்க வேண்டும்” என்று மருத்துவர் அருள்மொழிச்செல்வன் அறிவுறுத்துகிறார்.
“பகல் நேரத்தில் கதவுகளையும், ஜன்னல்களையும் மூடி வெப்பக் காற்று உள்ளே வராமல் தடுக்கலாம். மாலையில் திறந்துவிட்டால் குளிர்ந்த வெளிக்காற்று உள்ளே வரும். தூங்கும் முன்பாக குளித்துவிட்டுப் படுக்கலாம். ஆனால் ஒவ்வாமை மற்றும் சைனஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு தலைக்கு குளிப்பது சற்று சவாலாக இருக்கலாம்.
அதனால் இணை நோய் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனையைப் பெறுவது சிறந்தது. பொதுவாக தூங்கச் செல்லும் முன் குளித்துவிட்டுப் படுப்பது உடலைக் குளிர்விக்கவும், நல்ல தூக்கம் பெறவும் உதவியாக இருக்கும். மேசை விசிறியின் (Table fan) முன்பாக தண்ணீர் நிரம்பிய கிண்ணம் வைப்பது அல்லது ஈரத்துணி வைப்பதும் இரவு வெப்பத்தை தணிக்க உதவும். அறையில் காற்றோட்டம் (cross ventilation) மிக அவசியம். கதவும் ஜன்னலும் எதிரெதிரே இருந்தால் காற்று சுழற்சி சிறப்பாக இருக்கும். வீட்டை வெண்மையாக வர்ணம் பூசுவது, சிறு செடி, கொடிகள் வளர்ப்பது ஆகியவையும் வெப்பத்தைக் குறைக்க உதவும்” என்று அவர் விளக்கினார்.
பட மூலாதாரம், Getty Images
அதுமட்டுமின்றி, “இரவில் இதயத் துடிப்பும் ரத்த அழுத்தமும் இயல்பாகவே குறைந்திருக்கும். ஆனால் வெப்பம் அதிகமாக இருக்கும்போது இதயம் கூடுதல் சுமையை எடுக்க நேரிடும். இதனால் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு இதயப் பிரச்னைக்கான ஆபத்து அதிகரிக்கும்” என்று மருத்துவர் அருள்மொழிச்செல்வன் எச்சரிக்கிறார்.
அதோடு, “வயதானவர்கள் இரவில் அடிக்கடி சிறுநீர் போகும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால், தண்ணீரை பகல் நேரத்திலேயே அதிகமாக குடித்துக் கொள்வது நல்லது. இதய மற்றும் சிறுநீரக நோயாளிகள் தண்ணீர் குடிப்பதற்கான அளவை மருத்துவர் ஆலோசனையின் பேரில் மட்டுமே தீர்மானிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக ஏசி பயன்படுத்துவது நல்லதா?
வீட்டிலும், கார்களிலும், அலுவலகங்களிலும் ஏர்கண்டிஷனர் (ஏசி) பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதைத் தொடர்ச்சியாக 24 மணிநேரமும் பயன்படுத்துவது நல்லதல்ல என்று அருள்மொழிச்செல்வன் அறிவுறுத்துகிறார்.
“தொடர்ச்சியான ஏ.சி. பயன்பாட்டால் ஈரப்பதம் குறைந்த சூழல் உருவாகி தொண்டை வறட்சி, இருமல் ஆகியவை ஏற்படலாம். ஏ.சி. வடிகட்டி சரியாகச் சுத்தம் செய்யப்படாவிட்டால் ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா அறிகுறிகள் தீவிரமடையலாம். எனவே இடைவெளிவிட்டு ஏ.சி. பயன்படுத்துவதே சிறந்தது” என்று அவர் பரிந்துரைக்கிறார்.
குறிப்பாக, இந்த வெப்ப அலை நாட்களில் ஒருவருக்கு வெப்ப அழுத்தத்தின் அல்லது வெப்பத் தாக்கத்தின் அறிகுறிகள் (தலைச்சுற்றல், குமட்டல், தலைவலி அல்லது அதிக உடல் வெப்பநிலை போன்றவை) தென்பட்டால், “உடனடியாக அவர்களை நிழலான மற்றும் குளிர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
அவர்களுக்குத் தண்ணீர் வழங்கி, குளிர்ந்த நீரால் உடலைத் துடைக்கவும். நிலைமை தீவிரமாக இருந்தால், அவர்களை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் அல்லது அவசர உதவி சேவைகளை அழைக்க வேண்டும்” என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் கூறுகின்றன.