• Tue. Nov 10th, 2026

24×7 Live News

Apdin News

இராணுவத்தில் பணியாற்றும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகளிலிருந்து கூடுதல் பாதுகாப்பு அவசியம்: வில்லியம் வலியுறுத்தல்

Byadmin

Nov 10, 2026


இங்கிலாந்து இராணுவத்தில் பணியாற்றும் பெண்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதையும், அவர்கள் பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்ய மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வேல்ஸ் இளவரசர் வில்லியம் வலியுறுத்தியுள்ளார்.

இராணுவப் பிரிவுகளுக்குள் பெண்களுக்கு மரியாதையளிக்கும் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு கலாசாரம் உருவாக்கப்பட வேண்டும் எனவும், தற்போதைய சூழலில் அத்தகைய விழுமியங்கள் எப்போதும் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் இங்கிலாந்து ஆயுதப்படைகளின் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள இளவரசர் வில்லியம், கன்ட்ரி லைஃப் சஞ்சிகையின் கௌரவ ஆசிரியராகப் பணியாற்றி தயாரித்த விசேட கட்டுரைக்காக, பெண் சிப்பாய்களை நேரில் சந்தித்து இரகசியக் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். இந்த சந்திப்புகளின் போது பொருத்தமற்ற கருத்துகள், பொய்யான வதந்திகள் மற்றும் தொடர்ச்சியான பாலியல் தொல்லைகளுக்கு பெண் சிப்பாய்கள் பலியாகும் சம்பவங்கள் குறித்து இளவரசருக்கு விவரிக்கப்பட்டுள்ளது.

தான் முன்பு அனுபவித்து மகிழ்ந்த வரவேற்பும், வெளிப்படைத்தன்மையும், தொழில்சார் ஒழுக்கமும் நிறைந்த ஒரு பணிச்சூழலாக இராணுவத்தை அனைவருக்கும் மாற்றியமைப்பதில் தமது பங்களிப்பை வழங்க விரும்புவதாக இளவரசர் வில்லியம் குறித்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். தற்போது அத்தகைய தரநிலைகள் முழுமையாக எட்டப்படவில்லை என்றும், சீருடை அணிந்து பணியாற்றும் எவரும் பாதுகாப்பற்ற நிலையிலோ அல்லது உரிய மதிப்பளிக்கப்படாத சூழலிலோ இருப்பதை முன்னாள் இராணுவ அதிகாரி என்ற முறையில் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் பணியாற்றும் பல்வேறு தரநிலைகளிலான பெண் சிப்பாய்களுடன் இளவரசர் நேரடியாக உண்மை கண்டறியும் சந்திப்புகளை நடத்தியதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விவகாரங்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றில், ஆயுதப்படைகளில் உள்ள 67 சதவீதமான பெண் சிப்பாய்கள் ஆண்டுதோறும் விரும்பத்தகாத பாலியல் ரீதியான நடத்தைக்கு முகங்கொடுப்பதாகவும், இதன் காரணமாக 30 சதவீதமானோர் படைகளிலிருந்து வெளியேற யோசித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், 2021ஆம் ஆண்டு வில்ட்ஷயரில் உள்ள லார்க்ஹில் முகாமில் தற்கொலை செய்துகொண்ட ரோயல் ஆர்ட்டிலரி சிப்பாயான ஜேஸ்லி பெக்கின் சம்பவமும் இந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொடர்ச்சியான தேவையற்ற தொல்லைகளுக்கு உள்ளாகியிருந்த அவர், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் முறைப்பாடு செய்திருந்த போதிலும் அந்த முறைப்பாட்டுப் பொறிமுறை உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை விசாரணைகளில் தெரியவந்திருந்தது. இவற்றுடன், வட யோக்ஷயரில் அமைந்துள்ள இராணுவப் பயிற்சி கல்லூரியில் பெண் பயிலுநர்கள் பல மணிநேரம் நீடித்த பாலியல் வன்கொடுமைகள் மற்றும் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்களும் முன்னதாக வெளிச்சத்துக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post இராணுவத்தில் பணியாற்றும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகளிலிருந்து கூடுதல் பாதுகாப்பு அவசியம்: வில்லியம் வலியுறுத்தல் appeared first on Vanakkam London.

By admin