பட மூலாதாரம், Getty Images
பிப்ரவரி 28 அன்று இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, உலகின் மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடி உண்மையில் இப்போதுதான் தொடங்கியுள்ளது.
தற்காலிகப் போர் நிறுத்தமோ அல்லது இரான் போரின் முடிவோ, உலகளாவிய எரிசக்தி நெருக்கடியையும் விலையையும் போருக்கு முந்தைய நிலைக்கு உடனடியாகக் கொண்டு வந்துவிடாது.
போருக்கு முந்தைய நிலை என்பது மலிவான எண்ணெய் மற்றும் எரிவாயு ஏராளமாகக் கிடைத்த காலத்தைக் குறிக்கிறது. அப்போது வணிகங்கள் செழித்து வளர்ந்தன, மக்களின் வருமானம் எவ்வளவு இருந்தாலும் அது உயர்ந்து கொண்டே இருந்தது.
இப்போது போருக்கு முந்தைய நிலையை மீண்டும் கொண்டு வருவதைக் கடினமாக்கும் பல காரணங்கள் உள்ளன.
பட மூலாதாரம், AFP
1. இப்போதுதான் எண்ணெய் தட்டுப்பாடு தொடங்கியுள்ளது
பாரசீக வளைகுடாவிலிருந்து ஒரு டேங்கர் கப்பல் அதன் வாங்குபவர்களை அல்லது இறக்குமதி செய்பவர்களைச் சென்றடைய சராசரியாக ஒன்றரை மாதங்கள் ஆகும்.
போர் சரியாக ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. அதாவது, ஹோர்மூஸ் நீரிணை இந்த காலக்கட்டத்தில் முடக்கப்பட்டிருந்ததால், உலகம் இனிமேல்தான் எண்ணெய்ப் பற்றாக்குறையை நிஜமாகவே எதிர்கொள்ளப் போகிறது.
சர்வதேச எரிசக்தி முகமையின் தலைவர் ஃபாத்தி பிரோல், “ஏப்ரல் மாத நிலைமை மார்ச் மாதத்தை விட மோசமாக இருக்கும். மிகவும் சாதகமான மதிப்பீடுகளின்படி கூட, இழப்பு இரட்டிப்பாகும். இதன் காரணமாகப் பணவீக்கம் அதிகரிக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சி மந்தமாகும். நிலைமை இதைவிட மோசமாகலாம்.” என்றார்.
போர் காரணமாக எண்ணெய்ப் பொருட்கள் விலை உயர்ந்தன, ஆனால் எண்ணெய் டேங்கர்கள் போருக்கு முன்னரே ஏற்றப்பட்ட எண்ணெயைக் கொண்டு வந்து கொண்டிருந்தன.
இப்போது எண்ணெய்க் கையிருப்பு குறையும் போது, இரான் உடனடியாக ஹோர்மூஸ் நீரிணையைத் திறந்தாலும், விலைகள் போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பாது.
எண்ணெய் நெருக்கடியின் புதிய கட்டம் இப்போதுதான் தொடங்குகிறது. சிறந்த சூழலில் கூட விநியோகம் சீராக ஒன்றரை மாதங்கள் ஆகும்.
அமெரிக்க எரிசக்தித் துறையின் புள்ளிவிவரப் பிரிவான அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தத் தட்டுப்பாடு பல மாதங்களுக்கு, அநேகமாக 2026 இறுதி வரை உணரப்படும்.
எண்ணெய் விவகாரம் சற்றே எளிதானது. மத்திய கிழக்கில் நிரந்தர அமைதி ஏற்பட்டால், செளதி அரேபியா மற்றும் இப்பகுதியின் பிற நாடுகள் உற்பத்தியை வேகமாக அதிகரிக்க முடியும்.
ஆனால் எரிவாயு நிலைமை மிகவும் தீவிரமானது.
பட மூலாதாரம், Getty Images
2. எண்ணெய் நெருக்கடியை விட எரிவாயு நெருக்கடி மிகவும் தீவிரமானது
இரான் போருக்கு முன்பு, உலகம் குழாய் இணைப்புகள் மீதான சார்பைக் குறைக்க வேகமாக எல்என்ஜி பக்கம் திரும்பிக்கொண்டிருந்தது.
ஐரோப்பாவை தன் அழுத்தத்திற்குப் பணிய வைக்க ரஷ்யா எரிவாயுக் குழாய்களை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தியது, இது 2022-இல் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை உருவாக்கியது.
நிலக்கரியை விட எரிவாயு மலிவானதாகவும் தூய்மையானதாகவும் மாறி வந்தது, மேலும் எரிசக்தி நுகர்வில் அதன் பங்கு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இரான் போர் இந்தத் தெரிவு எவ்வளவு அபாயகரமானது என்பதைக் காட்டியுள்ளது.
போருக்கு முன்பு, உலகின் எல்என்ஜி விநியோகத்தில் 21 சதவீதம் அல்லது மொத்த எரிவாயு சந்தையில் 17 சதவீதத்தைக் கத்தார் கொண்டிருந்தது.
இது மிகப்பெரிய பங்கு, இதற்கு மாற்றாகச் செயல்பட வேறு வழிகள் நடைமுறையில் இல்லை.
“போர் காரணமாக ஒட்டுமொத்த எரிவாயுத் துறையின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. எல்என்ஜி ஒரு நம்பகமான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய மாற்றாக முன்வைக்கப்பட்டது. ஆனால் உலகம் முதலில் 2022-இல் ரஷ்ய எரிவாயு நெருக்கடியில் சிக்கியது, இப்போது கத்தார் எரிவாயு நெருக்கடியில் உள்ளது,” என்றார் ஃபாத்தி பிரோல்.
எல்என்ஜி விநியோகத்தை வேகமாகச் சீரமைக்க முடியாது. கத்தாரிலிருந்து ஏற்றுமதி செய்ய வேறு கடல் வழித்தடங்கள் இல்லை. ஆனால் எண்ணெய் ஏற்றுமதியை ஓரளவுக்குத் தரைவழி குழாய்கள் மூலம் ஹோர்மூஸ் நீரிணையைத் தவிர்த்து செய்ய முடியும்.
தவிர, தற்போது எதிர்காலம் நிச்சயமற்றதாக இருப்பதால், எரிவாயு விலைகள் பல மாதங்களுக்கு உயர்வாகவே இருக்கும்.
கத்தார் புதிய உற்பத்தித் திறனை உருவாக்குவதை நிறுத்திவிட்டது. போர் காரணமாக அதன் தற்போதைய உள்கட்டமைப்பின் ஒரு பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Reuters
3.உற்பத்தியை முன்பு போல மாற்ற நீண்ட காலம் ஆகும்
எண்ணெய் டேங்கர்கள் மற்றும் எரிவாயு கொண்டு செல்லும் கப்பல்களுக்காக ஹோர்மூஸ் நீரிணையைத் திறப்பது ஒரு விஷயம்.
அதேசமயம் ஒன்றரை மாத காலக் குண்டுவீச்சில் சேதமடைந்த நிலையங்களில் உற்பத்தியை மீண்டும் தொடங்குவது மற்றொரு விஷயம்.
சர்வதேச எரிசக்தி முகமையின் தரவுகளின்படி, போரின் போது மத்திய கிழக்கில் உள்ள 40-க்கும் மேற்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு ஆலைகள் தாக்குதலால் சேதமடைந்துள்ளன.
கத்தாரின் ராஸ் லாஃப்பான் எரிவாயு நிலையத்தில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. இரான் ஏவுகணைகள் உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு நிலையத்தின் 17 சதவீதத் திறனை அழித்துள்ளன.
கத்தார் அதிகாரிகளின் கூற்றுப்படி, இத்தகைய உபகரணங்கள் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுபவை, இவற்றுக்கு மாற்றாக வேறு எதுவும் இல்லை. எனவே இவற்றைச் சரிசெய்ய மாதங்கள் அல்ல, பல ஆண்டுகள் ஆகும், இது மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை கூட இருக்கலாம்.
பிற நாடுகளிலும் இதே போன்ற சிக்கல்கள் உள்ளன. இரான் டிரோன்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் இராக் ஆகிய நாடுகளில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய் வயல்கள் மற்றும் பிற எரிசக்தித் தளங்களைக் குறிவைத்துள்ளன. இவற்றைச் சரிசெய்ய பல மாதங்கள் ஆகும் மற்றும் இதற்குப் பல பில்லியன் டாலர்கள் செலவாகும்.
பட மூலாதாரம், EPA
4. அரசுகளின் முன் உள்ள நெருக்கடி
போருக்கு முன்பு, வளைகுடா நாடுகள் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் உலகப் பொருளாதாரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தங்கள் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டிருந்தன.
நுகர்வு நாடுகள் போதுமான அளவு எண்ணெய் கிடைக்கும் என்றும் எரிவாயு விநியோகம் அதிகரிக்கும் என்றும் நம்பியிருந்தன.
ஆனால் இப்போது செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இரான், கத்தார் மற்றும் பிற நாடுகள் தங்கள் வளங்களை வளர்ச்சிக்காகப் பயன்படுத்தாமல், உற்பத்தியைப் பழைய நிலைக்குக் கொண்டு வரவும், வருங்காலத் தாக்குதல்களுக்கு எதிராகத் தற்காப்புத் திறனை வலுப்படுத்தவும் செலவிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும்.
நுகர்வோர் விலை உயர்ந்த எரிசக்திக்குக் கூடுதல் பணம் செலுத்துவதுடன், அணுசக்தி, சூரிய சக்தி, காற்று, பேட்டரி மற்றும் நிலக்கரி போன்ற மாற்றுகளில் செய்யப்படும் முதலீடுகள் மற்றும் தொழில்துறைகளுக்கு வழங்கப்படும் மானியங்களுக்காகவும் மக்கள் அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
கோவிட் மற்றும் ரஷ்யா- யுக்ரேன் போர் காரணமாக ஏற்பட்ட முந்தைய இரண்டு நெருக்கடிகளைப் போலல்லாமல், இம்முறை பாதிக்கப்பட்ட நாடுகளுக்குக் கூடுதல் கடன் வாங்கும் திறன் குறைவாகவே உள்ளது.
அரசுகளுக்கு இரட்டைச் சிக்கல் உள்ளது – பணவீக்கம் அதிகமாக உள்ளது, பொதுக் கடன் மற்றும் பட்ஜெட் பற்றாக்குறையும் அதிகமாக உள்ளது.
மந்தமான பொருளாதார வளர்ச்சியால் அரசுகளுக்கு வரி வருவாய் குறைகிறது மற்றும் பொருளாதார உதவிக்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில் அதிக பணவீக்கம் வட்டி விகிதக் குறைப்பைத் தடுக்கிறது.
இது தவிர, உத்தேச எண்ணெய் இருப்புக்களைப் பயன்படுத்தியதால் வருங்கால வளங்கள் ஏற்கனவே தீர்ந்துவிட்டன.

5.உத்தேச இருப்பை மீண்டும் தயார் செய்வது முக்கியம்
எண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க, மேற்கத்திய நாடுகள் தங்களின் உத்தேச இருப்பிலிருந்து 40 கோடி பேரல் எண்ணெயை வெளியிட முடிவு செய்தன.
போர் காரணமாக மத்திய கிழக்கிலிருந்து நாளொன்றுக்கு 10 முதல் 12 கோடி பேரல் எண்ணெய் சந்தைக்கு வரவில்லை. உத்தேச இருப்புக்கள் இதைச் சமாளிக்க நாளொன்றுக்கு 3 முதல் 4 கோடி பேரல் எண்ணெயை வெளியிடுகின்றன.
இந்த நடவடிக்கைகள் 4-5 மாதங்களுக்குப் போதுமானது. ஆனால் அதன் பிறகு இந்த இருப்பை மீண்டும் நிரப்ப வேண்டும்.
கையிருப்பு குறையும்போது, பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களுக்காக, எண்ணெய் விலையைப் பொருட்படுத்தாமல், நாடுகள் தங்களின் உத்தேச எண்ணெய் கையிருப்பை படிப்படியாக நிரப்ப வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகும்.
இது எண்ணெய் விலைகளை உயர்த்தி, நெருக்கடியை நீடிக்கச் செய்யும்.
பட மூலாதாரம், Getty Images
6. மீண்டும் போர் தொடங்கும் அபாயம்
இரான் போர் இன்னும் முடிவடையவில்லை, மேலும் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகமாகவே உள்ளது.
இந்த மோதல் அபாயங்களை அதிகரித்து, கப்பல்களில் காப்பீடு மற்றும் போக்குவரத்துச் செலவுகளை உயர்த்தியுள்ளது. மேலும் இந்தச் செலவு, எரிசக்தி விலைகளை நீண்ட காலத்திற்கு, ஒருவேளை நிரந்தரமாகவே உயர்ந்த நிலையில் வைத்திருக்கும்.
இந்தப் பிரச்னை ஹோர்மூஸ் நீரிணையுடன் மட்டும் நின்றுவிடவில்லை. செங்கடலும் ஆபத்தில் உள்ளது. இரான் ஆதரவு குழு இந்த முக்கிய கடல்வழிப் பாதையை குறிவைக்கக்கூடும்.
1970களின் எண்ணெய் நெருக்கடியானது பணவீக்கம், வாழ்க்கைத்தரம் சரிவு மற்றும் அரசியல் அமைதியின்மைக்கு வழிவகுத்தது. இம்முறை, நிலைமை இன்னும் மோசமாக இருக்கலாம்.
”இதுவரை ஆசியாதான் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்த நெருக்கடி ஐரோப்பா மற்றும் பிற பகுதிகளையும் சென்றடையும்,” என்கிறார் ஃபாத்தி பிரோல்.
“நாம் வரலாற்றிலேயே மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடிக்குள் நுழைகிறோம்,” என அவர் எச்சரித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு