படக்குறிப்பு, ஃபெடெரிகோ வெரோனேசி நமீபியாவில் இருந்தபோது, இறந்த தன் குட்டியைத் தூக்கிச் செல்லக்கூடிய ஒரு பெண் யானையைச் சந்தித்தார்.கட்டுரை தகவல்
எழுதியவர், இசபெல் கெரெட்சென்
பதவி, பிபிசி
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், நமீபியப் பாலைவனத்தில் வறண்ட ஆற்றுப் படுகை வழியாகச் சென்றுகொண்டிருந்த யானைக் கூட்டத்தைப் பின்தொடர்ந்த புகைப்படக் கலைஞர் ஃபெடெரிகோ வெரோனேசி, மனதை உலுக்கும் ஒரு காட்சியைக் கண்டார்.
இறந்து பிறந்த குட்டி யானையைச் சுமந்துகொண்டிருந்த பெண் யானையை அவர் எதிர்கொண்டார். அந்தச் சிறிய குட்டியின் கால்கள் தாயின் தும்பிக்கையைச் சுற்றியிருந்தன. உயிரற்ற அதன் உடல் காற்றில் தொங்கிக்கொண்டிருந்தது.
“அது மிகவும் நெருக்கமான, கிட்டத்தட்ட ஆன்மிகத் தன்மையுடைய ஒரு தருணம்” என்று நினைவுகூரும் வெரோனேசி, “குட்டியின் உடல் அதுவரை முழுமையாக அப்படியே இருந்தது; மென்மையாகவும் இருந்தது. அதன் உடல் அதுவரை இறுகவில்லை. எனவே, அது முந்தைய இரவில் அல்லது அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் பிறந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்தது” என்கிறார்.
முதலில் பார்த்தபோது, அந்த உருக்கமான காட்சி தனது குட்டியை இழந்த தாயின் துயரத்தை வெளிப்படுத்துவதாகத் தோன்றியது. ஆனால், பின்னர் வெரோனேசி தெரிந்துகொண்டபடி, அவர் கண்டுகொண்டிருந்த இந்த அரிய நடத்தை எதிர்பாராத திருப்பத்தைக் கொண்டிருந்தது. அது முதலில் தோன்றியதைவிடவும் சிக்கலான உணர்வுகளை வெளிப்படுத்தியது.
வெரோனேசி அந்த யானைக் கூட்டத்தைப் பல மணி நேரம் பின்தொடர்ந்து, வியக்கத்தக்க பல புகைப்படங்களை எடுத்தார். அவற்றில் ஒரு புகைப்படம் (கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்), லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் நடத்தும் 2026ஆம் ஆண்டின் ‘ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர்’ போட்டியில் ஒட்டுமொத்தப் பிரிவுக்கான முதன்மைப் பரிசை (Grand Title Prize) வென்றது.
அந்தப் பெண் யானை குட்டி யானையைப் பல மணி நேரம் சுமந்துகொண்டே சென்றது. அவ்வப்போது உணவு உட்கொள்வதற்காகவோ தண்ணீர் அருந்துவதற்காகவோ குட்டியைக் கீழே வைத்துவிட்டு, பின்னர் மீண்டும் தூக்கிக்கொண்டு ஹுவாப் ஆற்றங்கரையோரமாகத் தனது பயணத்தைத் தொடர்ந்ததாக வெரோனேசி கூறுகிறார்.
“‘இது மிகவும் சோகமான காட்சி. ஆனால், மக்கள் இதைப் பார்க்க வேண்டியது அவசியம்’ என்று நான் நினைத்தேன். இந்த யானைகள் எந்த அளவுக்குத் துன்பத்தை அனுபவிக்கின்றன என்பதையும், அவற்றுக்கு எவ்வளவு ஆழமான உணர்வுகள் இருக்கின்றன என்பதையும் இந்தப் புகைப்படம் தெளிவாகக் காட்டுகிறது. விலங்குகளும் ஆழமான உணர்வுகளைக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் பெரும்பாலும் உணர்வதில்லை” என்கிறார் வெரோனேசி.
அந்த யானை, இறந்து பிறந்த தன் குட்டியைச் சுமக்கவில்லை என்பதை வெரோனேசி இறுதியில் கண்டறிந்தார். “அது தாய் அல்ல” என்கிறார் நமீபியாவின் பாலைவன யானைகளைப் பாதுகாக்கப் பணியாற்றும் ஒரு லாப நோக்கற்ற அமைப்பான யானை–மனித உறவு மேம்பாட்டு அமைப்பின் (EHRA) பாதுகாப்புத் திட்ட இயக்குநர் கிறிஸ்டின் வின்டர்.
தற்போது 14 வயதாகும் இந்தப் பெண் யானை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்தக் குட்டியை இழந்தது. அதன் பிறகு, அது மற்ற யானைகளின் இறந்துபோன குட்டிகளை நான்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சுமந்து செல்வது காணப்பட்டுள்ளது என்கிறார் வின்டர். இந்தப் பகுதியில் இந்த நடத்தை ஆவணப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்றும் அவர் கூறுகிறார்.
“இந்த வெளிப்பாடு, இந்த உயிரினங்களின் உணர்ச்சிகளின் ஆழத்துக்கு நிச்சயமாக மற்றொரு பரிமாணத்தைச் சேர்க்கிறது” என்று கூறும் வெரோனேசி, “பல ஆண்டுகளுக்குப் பிறகும், தனது இழப்பிலிருந்து இன்னும் மீளாமல், தன் சொந்தக் குட்டியுடன் மீண்டும் இணைய முயற்சிப்பது போல, இந்தப் பெண் யானை அவ்வாறு நடந்துகொள்வது இன்னும் நெஞ்சை உருக்குகிறது” என்று குறிப்பிடுகிறார்.
யானையின் உணர்ச்சிகள்
யானை ஏன் இவ்வளவு நீண்ட நேரம் குட்டியைச் சுமந்துகொண்டிருந்தது என்பது குறித்து சில கோட்பாடுகள் உள்ளன. இந்த நடத்தை ஒருவிதமான “உணர்வுகளைச் செயலாக்கும்” செயல்முறையாக இருக்கலாம் என்கிறார் வின்டர்.
“குட்டியின் இறப்பை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு வழியாக இது இருந்திருக்கலாம். அதிலிருந்து இன்னும் விடுபட முடியாமல் இருந்திருக்கலாம். தனது குட்டியை இழந்ததால் அது மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதனால்தான், ஒவ்வொரு முறையும் ஒரு குட்டி இறக்கும்போது மீண்டும் இதே நடத்தையை அந்த யானை வெளிப்படுத்துகிறது” என்கிறார் அவர்.
மேலும், வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து குட்டியின் உடலைப் பாதுகாக்கவும் அது முயன்றிருக்கலாம் என்று வின்டர் குறிப்பிடுகிறார்.
பட மூலாதாரம், Federico Veronesi
படக்குறிப்பு, ஃபெடெரிகோ வெரோனேசி எடுத்த இந்தப் புகைப்படம், 2026-ஆம் ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதின் முதன்மைப் பரிசை வென்றுள்ளது.
வெரோனேசியின் புகைப்படங்கள், நமீப் பாலைவனத்தில் உள்ள ஐந்து ஆற்றுப் படுகைகளை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும், கடினமான சூழலிலும் உயிர்வாழும் திறன்கொண்ட நமீபியாவின் 150 பாலைவன யானைகளின் வாழ்வைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகின்றன.
உணவு மற்றும் தண்ணீரைத் தேடி அவை நீண்ட தூரம் இடம்பெயர்கின்றன. ஃபைடெர்பியா அல்பிடா (Faidherbia albida) எனப்படும் அனா மரங்களின் விதைக் காய்களையும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமவெளிகளில் வளரும் புற்களையும் அவை உணவாக உட்கொள்கின்றன.
இவை தனித்துவமான யானை இனத்தைச் சேர்ந்தவை அல்ல. மாறாக, இவை ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு ஏற்றவாறு தகவமைத்துக்கொண்ட யானைக் கூட்டமாகும். அதாவது, மரபணு மாற்றங்கள் மூலம் அல்லாமல், கற்றுக்கொண்ட நடத்தைகள் வாயிலாக வறண்ட சூழலுக்கு ஏற்றவாறு மாறியுள்ள யானைகளின் கூட்டம் இது. நமீபியாவின் ஸ்கெலிட்டன் கடற்கரையோரம் வாழும் பாலைவனச் சிங்கங்களும் இதேபோன்று உள்ளன.
“அவற்றை உண்மையிலேயே தனித்துவமானவையாகவும், அதே நேரத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவையாகவும் ஆக்குவது அவற்றின் அறிவுதான். ஏனெனில், அந்த அறிவு ஒருமுறை இழக்கப்பட்டுவிட்டால், அதை எளிதில் மீண்டும் பெற முடியாது” என்கிறார் வின்டர்.
குறைந்து வரும் இனங்கள்
கடந்த 20 ஆண்டுகளாக இந்த யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகக் கூறும் வின்டர், இதற்கான காரணங்களில் ஒரு பகுதியாக, நீண்டகால வறட்சி போன்ற சுற்றுச்சூழல் அழுத்தங்கள் காரணமாக உள்ளன. இருப்பினும், மனிதர்களுடனான மோதல்கள் அதிகரித்திருப்பதே இதற்கு முக்கியக் காரணம் என்கிறார்.
“இந்த மோதல் பெரும்பாலும் தண்ணீரைப் பற்றியவைதான்.” யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தண்ணீர் தொட்டிகளைச் சாய்த்து, குழாய்களைப் பிடுங்கி, பம்புகளை உடைத்துவிடும். “அதனால் யானைகள் நடமாடுவதை மக்கள் அவ்வளவாகப் பொறுத்துக்கொள்வதில்லை” என்று கூறும் அவர், “இந்தச் சம்பவங்கள் மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றன; நீண்ட காலத்துக்கும் நினைவில் நிலைத்திருக்கின்றன” என்கிறார்.
புதிதாகப் பிறக்கும் குட்டி யானைகளின் இறப்பு விகிதம் மிகுந்த கவலையளிப்பதாக வின்டர் கூறுகிறார். “இறப்பு விகிதம் மிகவும் அதிகமாகவும் அச்சமூட்டுவதாகவும் உள்ளது.” 2014 முதல் 2022ஆம் ஆண்டு வரை பிறந்த மொத்தம் 16 குட்டிகளில் இரண்டு மட்டுமே உயிர் பிழைத்ததாக அவர் குறிப்பிடுகிறார்.
இவ்வளவு அதிகமான பாலைவன யானைக் குட்டிகள் இறப்பதற்கான காரணங்களில் ஒன்றாக, அவை குறைப்பிரசவத்தில் பிறப்பது இருக்கலாம் என்பது ஒரு கோட்பாடாக முன்வைக்கப்படுகின்றது. “பெண் யானைகள் குட்டிகளை முழுமையான கர்ப்பக் காலம் வரை சுமக்கும் அளவுக்கு உடல் தகுதியுடன் இல்லாததால் அவை குறைப்பிரசவத்தில் பிறக்கலாம்” என்கிறார் வின்டர். மனிதர்களுடனான மோதல்களால் ஏற்படும் நீண்டகால மன அழுத்தம் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். மனிதர்களுடனான மோதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக யானைகள் பிந்தைய மனஅழுத்தக் கோளாறால் (PTSD) பாதிக்கப்படலாம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
இறந்து பிறந்த குட்டிகளை ஈ.ஹெச்.ஆர்.ஏ குழுவினர் சந்திக்கும்போதெல்லாம், அவை மிகவும் சிறியதாக இருப்பதாக வின்டர் கூறுகிறார்.
பொதுவாக, ஆரோக்கியமான யானைக் குட்டி பிறக்கும்போது 100 முதல் 120 கிலோ வரை எடை இருக்கும். ஆனால், இறந்து பிறக்கும் குட்டிகள் சுமார் 60 முதல் 65 கிலோ மட்டுமே எடை கொண்டிருக்கின்றன என்கிறார் அவர்.
நமீபியாவின் பாலைவன யானைகளைச் சுற்றுச்சூழல் காரணிகளும் நீண்டகால மன அழுத்தமும் எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதை ஆய்வு செய்வதற்காக, இந்தியானா பல்கலைக்கழக புளூமிங்டன் வளாகத்தின் யானைகள் தொடர்பான நிபுணரும் உதவிப் பேராசிரியருமான டேனியலா சூசிட் உடன் ஈ.ஹெச்.ஆர்.ஏ அமைப்பு இணைந்து செயல்பட்டு வருகிறது.
2028ஆம் ஆண்டு வரை நடைபெறும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, யானைகளின் சாண மாதிரிகள் தற்போது சேகரிக்கப்படுகின்றன.
அவற்றில் கன உலோகங்கள், பிஎஃப்ஏஎஸ் போன்ற நீண்டகாலம் சுற்றுச்சூழலில் நிலைத்திருக்கும் வேதிப்பொருட்கள் ஆகியவற்றைச் சோதிப்பதுடன், யானைகளின் தைராய்டு ஹார்மோன்கள் மற்றும் கார்டிசோல் ஹார்மோன் அளவுகளும் பரிசோதிக்கப்படுகின்றன.
“மற்ற யானைக் கூட்டங்களுடன் ஒப்பிடும்போது, இந்தக் கூட்டத்தில் நெருங்கிய உறவினர்களுக்கிடையிலான இனப்பெருக்கம் எந்த அளவுக்கு நடைபெறுகிறது என்பதையும், உயிர் பிழைக்கும் குட்டிகளின் பெற்றோர் வழி மரபுவழித் தொடர்புகள் இறந்த குட்டிகளின் மரபுவழித் தொடர்புகளிலிருந்து வேறுபடுகின்றனவா என்பதையும் கண்டறிய விரும்புகிறோம்” என்கிறார் சூசிட்.
பட மூலாதாரம், Federico Veronesi
படக்குறிப்பு, நமீபியாவின் பாலைவன யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
ஆப்பிரிக்க சவானா யானைகள் தொடர்பான முன்னணி நிபுணரும், யானைகள் பாதுகாப்புக்காகச் செயல்படும் லாப நோக்கற்ற ‘எலிஃபேண்ட் வாய்சஸ்’ அமைப்பின் நிறுவனருமான ஜாய்ஸ் ஃபூல், வெரோனேசியின் புகைப்படங்கள் “உண்மையிலேயே மனதை உலுக்குபவை” என்று விவரிக்கிறார்.
கென்யாவில், இறந்து பிறந்த தனது குட்டியிடம் தாய் யானை இதேபோன்ற எதிர்வினையாற்றியதைத் தானும் பார்த்துள்ளதாக அவர் கூறுகிறார்.
“அந்தத் தாய் யானை குட்டியைச் சுமக்கவில்லை. மாறாக, அதைத் தூக்க முயன்றது. பின்னர், இரண்டு நாட்கள் அதன் அருகிலேயே நின்று அதைப் பாதுகாத்தது” என்கிறார் ஃபூல்.
இந்தப் புகைப்படங்கள், “யானைகளால் துயரத்தையும் துன்பத்தையும் அனுபவிக்க முடியும்” என்பதை மக்கள் உணரச் செய்யும் என்று அவர் நம்புகிறார்.
தங்களுடன் வாழும் மற்றொரு யானை இறக்கும்போது, யானைகள் துயரத்தை அனுபவிப்பதாகத் தெரிகிறது. இறந்த தங்கள் குடும்ப உறுப்பினர்களின் எச்சங்களையும், தங்களுக்குத் தொடர்பில்லாத யானைகளின் எச்சங்களையும் அவை பார்வையிடுவது கவனிக்கப்பட்டுள்ளது. அவற்றின் எலும்புகளைத் தொட்டுப் பார்ப்பதுடன், இறந்த யானைகளின் எச்சங்களுக்கு அருகில் நீண்ட நேரம் காவல் காப்பதைப் போன்ற வகையில் அவை நின்றுகொண்டிருப்பதும் பதிவாகியுள்ளது.
“காலநிலை மாற்றத்தால் மட்டுமல்லாமல், நமீபிய அரசாங்கம் அனுமதிக்கும் கோப்பைகளை வெல்வதற்கான வேட்டை உரிமங்களாலும் பாலைவன யானைகள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்படுகின்றன. அவை அனுபவிக்கும் துயரத்தைத் தடுக்க நாம் இன்னும் அதிகமாகச் செயல்பட வேண்டும்” என்கிறார் ஃபூல்.
பெண் யானைக்கும் இறந்து பிறந்த குட்டிக்கும் இடையிலான தொடர்பு “கிட்டத்தட்ட மனிதர்களைப் போன்ற நடத்தையாக”இருந்தது என்று வெரோனேசி விவரிக்கிறார்.
“அதனால் தான், நேரில் காணக் கிடைத்த அந்தத் தருணம் நம்பமுடியாத அளவுக்கு அற்புதமானது என்று நினைத்தேன்” என்று பகிர்ந்துகொண்ட அவர், “ஒவ்வொரு யானையும் புரிந்துகொள்ளப்படவும் பாதுகாக்கப்படவும் தகுதியான ஓர் உயிரினம் என்பதே எனது செய்தி. நாம் யானை இனத்தை மட்டுமல்ல, ஒவ்வொரு தனிப்பட்ட யானையின் நலனையும் பாதுகாக்க வேண்டும்” என்கிறார்.
தனது புகைப்படங்கள், “யானையின் ஆன்மாவையும் அதன் உணர்வுகளின் ஆழத்தையும் ஓரளவாவது வெளிப்படுத்தும் ஒரு சிறிய சாளரமாக அமையும்” என்று அந்த புகைப்படக் கலைஞர் நம்புகிறார்.
‘ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர்’ போட்டியை லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் உருவாக்கி நடத்துகிறது. இந்தப் போட்டியின் புகைப்படக் கண்காட்சி 2027 ஜூலை வரை நடைபெறுகிறது.