பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், ராஜகோபால் யசிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
இலங்கையின் தெற்குக் கடற்கரையோர சொகுசு பங்களா ஒன்றின் கதவுகள் எப்போதும் பூட்டப்பட்டே இருந்தன. உள்ளே 24 மணிநேரமும் குளிரூட்டி இயங்கியதுடன், நள்ளிரவிலும் கணினித் திரைகளின் வெளிச்சம் அறைகளை நிறைத்திருந்தது. அங்கு தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் எவரும் சுற்றுலாத் தலங்களை ரசிக்க வெளியே வரவில்லை.
“மாதத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் வாடகை தருகிறோம் என்று முன்பணத்துடன் வந்தபோது எனக்கு எந்தச் சந்தேகமும் வரவில்லை,” என்கிறார் இலங்கையின் தென்பகுதியில் தனது சொகுசு பங்களாவை வெளிநாட்டவர்களுக்கு வாடகைக்கு விட்ட வீட்டு உரிமையாளர் ஒருவர். பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத அவர், பிபிசி தமிழிடம் தனது அதிர்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்:
“சுற்றுலாப் பயணிகள் என்றுதான் கூறினார்கள். ஆனால், காவல்துறையினர் எனது வீட்டைச் சோதனையிட்டபோதுதான், உலகளாவிய இணையதள மோசடி வலையமைப்பு ஒன்று எனது வீட்டிற்குள் இயங்கிய அதிர்ச்சி உண்மை எனக்குத் தெரிந்தது. இப்போது விசாரணை, நீதிமன்றம் என்று எனது குடும்பமே அச்சத்தில் உள்ளது” என்கிறார் அவர்.
இது ஏதோ ஒரு தனிப்பட்ட வீட்டின் கதையல்ல. இலங்கை தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் சர்வதேச சைபர் குற்றச் செயல்களின் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது என்பதற்கான நேரடிச் சான்று.
ஆயிரம் பேர் கைது
ஆசியாவின் பிற பகுதிகளில் இருந்து விரட்டப்பட்ட அதிநெருக்கடி மிக்க இணைய மோசடிக் கும்பல்கள், இலங்கையைத் தங்களின் முதன்மைச் செயல்பாட்டுத் தளமாக மாற்றி வருவதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இதன் உச்சகட்டமாக, தெற்கு மாகாணத்தின் மிதிகம, ஹிக்கடுவ, காலி ஆகிய பகுதிகளில் அதிகளவான கைதுகள் இடம்பெற்றுள்ளன.
இலங்கை காவல்துறையினரால் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட இறுதிப் புள்ளிவிவரங்களின்படி, 2026 ஜனவரி முதல் மே மாத இறுதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் சைபர் குற்றங்கள் மற்றும் விசா விதிமீறல்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஒட்டுமொத்த வெளிநாட்டுப் பிரஜைகளின் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு முழுவதுமே இக்குற்றச்சாட்டில் 430 பேர் மட்டுமே கைதாகியிருந்தனர். தொடர்ந்து 2025ஆம் ஆண்டில் இணைய நிதி மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்கள் தொடர்பாக 12,650க்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகி அச்சுறுத்தல் அதிகரித்திருந்த பின்னணியில், 2026இல் இந்தக் கைதுகளின் எண்ணிக்கை முன்னெப்பொழுதும் இல்லாதவாறு பாரிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளதை இது காட்டுகிறது.
அண்மைய முக்கிய சோதனைகள்
இலங்கை காவல்துறை பகிர்ந்த தகவல்களின் படி, மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தென்னிலங்கையில் நடத்தப்பட்ட 5 அதிரடிச் சோதனைகளில் 173 முதல் 192 வரையான இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி பகுதியில் மட்டும் இரு விடுதிகளில் 110 இந்தியர்களும், மிதிகமவில் 28 பேரும், ஹிக்கடுவவில் 35 பேரும் கைதாகியுள்ளனர்.
மார்ச் மாதத்தில் மிகிந்தலை மற்றும் அனுராதபுரத்தில் ஒரே நாளில் 135 சீனப் பிரஜைகளும், ஏப்ரல் தொடக்கத்தில் சிலாபத்தில் 133 சீனர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பிப்ரவரியில் கொழும்பு கறுவாத்தோட்டத்தில் 21 பேரும் கைதாகினர்.
கொழும்பு கொள்ளுப்பிட்டி, கொம்பனித்தெரு ஸ்ரீ உத்தரானந்த மாவத்தையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் மே 6 அன்று ஒரே சோதனையில் 74 வியட்நாம் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுடன் நேபாளம், மியான்மர், பிலிப்பின்ஸ், மலேசியா, தைவான், இந்தோனீசியா (77 பேர்) ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 500க்கும் மேற்பட்ட அதிநவீன கணினிகள்/மடிக்கணினிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் மில்லியன் கணக்கான உள்ளூர், வெளிநாட்டு கரன்சிக்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பட மூலாதாரம், Handout
“மியான்மரில் ஒடுக்குமுறை; இலங்கையில் புகலிடம்”
சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சைபர் மோசடி வளாகங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தன.
கம்போடியா, மியான்மர், லாவோஸ், பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகள் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக இந்த இணைய மோசடி மையங்களுக்கு எதிராகக் கடும் ஒடுக்குமுறைகளை மேற்கொண்டதால், இந்தக் கும்பல்கள் முற்றாக அழியாமல் தங்கள் செயல்பாடுகளை இலங்கை நோக்கி நகர்த்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து டிஜிட்டல் உரிமைகள் ஆர்வலரான சஞ்சன ஹத்துட்டுவ பிபிசி தமிழிடம் கூறும்போது, “கம்போடியா மற்றும் மியான்மரில் உள்ள மோசடி முகாம்கள் மீதான ஒடுக்குமுறைகள் அவற்றை முற்றாக ஒழிக்கவில்லை, மாறாக இடமாற்றம் செய்துள்ளன. அந்த இடப்பெயர்வின் நடைமுறை வடிவம்தான் இலங்கை. தாராளமான சுற்றுலா விசா, நல்ல டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகள், மலிவான தங்குமிடங்கள் மற்றும் எவ்வித கேள்விகளும் கேட்காமல் வீடுகளை வாடகைக்கு விடும் முறை ஆகியவை இந்த சர்வதேசக் குற்றக் கும்பல்களுக்கு இலங்கையை ஒரு கவர்ச்சிகரமான இடமாக மாற்றியுள்ளன” என்றார்.
இதில் உள்ள மற்றொரு சோகமான உண்மை என்னவென்றால், இலங்கை ஒரே நேரத்தில் வெளிநாட்டு சைபர் குற்றவாளிகளின் தளமாகவும், அதே நேரத்தில் உள்ளூர் தமிழ், சிங்கள இளைஞர்கள் போலி வேலைவாய்ப்பு என்ற பெயரில் மியான்மர் போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படும் மனிதக் கடத்தலின் இரையாகவும் மாறியுள்ள இரட்டை நெருக்கடியைச் சந்திப்பதாகும் என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, வெலிசறை தடுப்பு முகாமில் நாடு கடத்தப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த 21 சீனர்கள், 9 வியட்நாமியர்கள் உள்ளிட்ட 30 பேர் அங்கிருந்து தப்பியோடிய சம்பவம் பாதுகாப்புப் பிரிவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பின்னர் அவர்கள் பொரலஸ்கமுவையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
வியப்பூட்டும் விதமாக, “அவர்கள் தப்பியோடிய சில நாட்களிலேயே 10 கணினிகள் மற்றும் 29 ஐபோன்களுடன் மீண்டும் ஒரு புதிய மோசடி மையத்தைத் தொடங்கிச் செயற்பட்டு வந்துள்ளனர்” என காவல்துறையினர் கூறுகின்றனர்.
“ஒரு தடுப்பு முகாமில் இருந்து தப்பித்து, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, உள்கட்டமைப்பை அமைத்து, மீண்டும் ஒரு மோசடி மையத்தை யாராலும் தற்செயலாகத் தொடங்க முடியாது. இந்த அமைப்பிற்குள் ஏதோவொரு பெரிய முறைகேடு அல்லது ஊழல் நடந்துள்ளது என்பதை இது காட்டுகிறது” என்று சஞ்சன ஹத்துட்டுவ சுட்டிக்காட்டினார்.
பட மூலாதாரம், Handout
அரசு கூறுவது என்ன?
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, “இலங்கை சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த நெருக்கடியைக் கையாள்வதற்குப் போதுமான சட்டங்கள் நாட்டில் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இலங்கையில் சைபர் குற்றங்கள் 2007ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க கணினிக் குற்றங்கள் சட்டத்தின் மூலமே நிர்வகிக்கப்பட்டன. எனினும், சில குற்றங்கள் கணினி மூலமே செய்யப்பட்டன என்பதை நிரூபிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் எல்லை கடந்த குற்றங்களை எதிர்கொள்வதில் தற்போதைய சட்டத்தில் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதை நிவர்த்தி செய்ய இரண்டு புதிய சட்டமூலங்கள் அவசரமாகத் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
- டிஜிட்டல் பொருளாதாரச் சட்டம் (Digital Economy Act): நாட்டின் ஒட்டுமொத்த டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களை ஒழுங்குபடுத்த புதிய விசேட அதிகார சபை இதன் கீழ் நிறுவப்படும்.
- சைபர் பாதுகாப்புச் சட்டம் (Cyber Security Act): இச்சட்டத்தின் கீழ் “சைபர் குற்றங்கள் ஒழுங்குமுறை அதிகார சபை” (Cyber Crimes Regulatory Authority) 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறுவப்படும்.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால இதுகுறித்து பிபிசி தமிழுக்கு கூறுகையில், புதிய சட்டத்தின் கீழ் நிறுவப்படும் இந்த அதிகார சபைக்கு அரச மற்றும் தனியார் நிறுவனங்களைக் கண்காணிக்கும் முழுமையான சட்டபூர்வ அதிகாரம் வழங்கப்படும் என்றார்.
புதிய சட்டவிதிகளுக்கு அமைய செயற்படத் தவறும் நிறுவனங்களுக்குக் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என்றும், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் சைபர் பாதுகாப்புத் தயார்நிலை உத்திகளை வருடாந்தரம் நடைமுறைப்படுத்துவது கட்டாயமாக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
உள்நாட்டு சட்டங்கள் இன்னும் வரைவு நிலையில் இருக்கும் சூழலில், எல்லை கடந்த இந்த சைபர் மாஃபியாக்களை ஒடுக்குவதற்கு சர்வதேச நாடுகளின் கூட்டு உதவி அவசியம் என்பதை இலங்கை உணர்ந்துள்ளது. இதற்கமைய, வியட்நாமிய தலைநகர் ஹனோயில் நடைபெற்ற ஐநா-வின் உத்தியோகபூர்வ மாநாட்டில், ‘சைபர் குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சாசனத்தில்’ (UN Cybercrime Convention) இலங்கை முறைப்படி கைச்சாத்திட்டுள்ளது.
இதன் மூலம், வெளிநாட்டு வலையமைப்பிற்கு டிஜிட்டல் தடயங்களை சர்வதேச புலனாய்வு அமைப்புகளுடன் உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளவும், குற்றவாளிகளை அந்தந்த நாடுகளுக்குத் துரிதமாக நாடு கடத்தவும் இலங்கைக்கு சர்வதேச சட்ட பலம் கிடைக்கிறது.
இந்நிலையில், கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரெட்ரிக் வூட்லர் மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “கைது செய்யப்படும் வெளிநாட்டுச் சந்தேக நபர்கள் உடனடியாக நாடுகடத்தப்பட மாட்டார்கள். அவர்கள் அனைவரும் சுற்றுலா விசா ஒழுங்குவிதிகளை மீறி, சட்டவிரோதமாகப் பணிபுரிந்து விசா காலத்தையும் மீறி தங்கியுள்ளனர். இவர்கள் கணினி குற்றங்கள் சட்டத்தின் கீழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட சாதனங்கள் கொழும்பு நீதவான் உத்தரவின் பேரில் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே நாடுகடத்தல் பற்றித் தீர்மானிக்கப்படும்.
மோசடிக் கும்பல்களுக்கு இடமளிக்கும் சொத்து உரிமையாளர்கள், குற்றச் செயல்களுக்குத் துணை நின்ற குற்றச்சாட்டின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வர். பொலிஸ் கட்டளை சட்டத்தின் 76வது பிரிவின்படி, தற்காலிக குடியிருப்பாளர்களின் விவரங்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, “இலங்கையின் திறைசேரி (கருவூலம்) மீது அண்மையில் நடத்தப்பட்டு, சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பை ஏற்படுத்திய பாரிய சைபர் தாக்குதலுக்கும், தற்போது பிடிபட்டுள்ள சர்வதேச சைபர் மோசடிக் கும்பல்களுக்கும் ஏதேனும் பின்னணித் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிர புலனாய்வு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
சீன அரசாங்கத்தின் கடுமையான நிலைப்பாடு
இலங்கையில் கைது செய்யப்படுவோரில் கணிசமானோர் சீனப் பிரஜைகளாக உள்ள நிலையில், கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இதுகுறித்து உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எல்லையைக் கடந்த இணைய சூதாட்டமும், தொலைத்தொடர்பு மோசடிகளும் சர்வதேச அளவிலான ஒரு திட்டமிடப்பட்ட குற்றவியல் வடிவமாக உருவெடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளதை சீனத் தூதரகம் நினைவு கூர்ந்துள்ளது.
சீனத் தூதரகம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில், “எல்லையைக் கடந்த சூதாட்டம் குறித்த சீன அரசின் நிலைப்பாடு மிகவும் தெளிவானதும் உறுதியானதுமாகும். சீன மூலதனத்தை வெளிநாட்டு சூதாட்ட விடுதிகளில் முதலீடு செய்யக்கூடாது, சீனக் குடிமக்கள் வெளிநாட்டு சூதாட்ட விடுதிகளை இயக்குவதில் பங்கேற்கக் கூடாது. இத்தகைய நடவடிக்கைகள் மோசடி, பணமோசடி, கடத்தல், மனிதக் கடத்தல், சட்டவிரோதமாக எல்லை தாண்டுதல் போன்ற பிற குற்றங்களுக்கும் வழிவகுக்கின்றன. சீன குற்றவியல் சட்டத்தின் புதிய திருத்தங்கள், எல்லையைக் கடந்த சூதாட்ட நடவடிக்கைகளைக் குற்றவியல் செயலாக அறிவித்துள்ளன” என்று தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, இக்குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் இலங்கைக்கு இடம்பெயரும் போக்கு அதிகரித்து வருவதை அடுத்து, சீனாவும் இலங்கையும் கூட்டுச் சட்ட அமலாக்க முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. மோசடிக் குற்றங்களுடன் தொடர்புடைய பல சீனப் பிரஜைகள் ஏற்கெனவே சீன தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தூதரகம், குடிவரவு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட கடுமையான முயற்சிகளைப் பெரிதும் பாராட்டியுள்ளது.
இதற்கிடையே, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இயங்கும் திட்டமிடப்பட்ட குற்றக் குழுக்கள் “மேலும் தொலைதூர மற்றும் சட்ட அமலாக்கம் பலவீனமான” பிராந்தியங்களை நோக்கி விரிவடைந்து வருவதன் நேரடிப் பிரதிபலிப்பே இலங்கையின் தற்போதைய நிலைமை என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த விவகாரம், 2026ஆம் ஆண்டில் அதிவேகமாக அதிகரித்துள்ள நிலையில், இலங்கையின் எல்லைக் கட்டுப்பாடு, விசா கண்காணிப்பு, நிதி மேற்பார்வை மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த சைபர் பாதுகாப்புத் திறன் குறித்துப் பல கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு