இலங்கையில் தமிழ்த் தேசிய அரசியலின் முக்கிய நபராக விளங்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று முன்தினம் காலமானார். வல்வெட்டித்துறை – ஊறணி இந்து மயானத்தில் அவரது உடல் தகனம் செய்ய்பட்டது.
அவரது இறுதிக் கிரியைகளுக்காக வல்வெட்டித்துறை நகரத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன, நகர் முழுவதும் அவரது உருவப் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, தமிழ்த் தேசிய கொடிகளினாலும் மலர்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அவரது இறுதிக் கிரியைகளுக்காக இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும், யாழ்ப்பாணத்திற்கு வருகைத் தந்து, எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தார்.
எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பின்னணி
எம்.கே.சிவாஜிலிங்கம் சுகயீனமுற்றிருந்த நிலையில், வல்வெட்டித்துறையிலுள்ள தனது இல்லத்தில் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 69.
1957-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பிறந்த அவர், தனது இளம் காலம் முதலே தமிழ்த் தேசிய அரசியலில் தடம் பதித்திருந்தார்.
2001-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்ட எம்.கே.சிவாஜிலிங்கம், அந்த தேர்தலில் வெற்றியீட்டி முதல் தடவையாக நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்றார்.
படக்குறிப்பு, எம்.கே.சிவாஜிலிங்கம் (கோப்புப்படம்)
2004-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்ட அவர், அந்த தேர்தலிலும் வெற்றியை தனதாக்கினார்.
2010-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு, வடக்கு மாகாண சபை உறுப்பினராக தெரிவானார்.
இறுதியாக நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட அன்னார், வல்வெட்டித்துறை நகர சபைக்கு தெரிவாகி, நகர சபையின் தவிசாளராக கடமையாற்றியிருந்தார்.
கடந்த ஜூன் மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கம், அன்று முதல் தொடர்ச்சியாக சுகயீனமுற்றிருந்தார்.
இவ்வாறான பின்னணியில், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய எம்.கே.சிவாஜிலிங்கம், நேற்று முன்தினம் தனது இல்லத்தில் உயிரிழந்தார்.
படக்குறிப்பு, எம்.கே.சிவாஜிலிங்கம் (கோப்புப்படம்)
எம்.கே.சிவாஜிலிங்கம் பல முறை கைதாகியுள்ளார்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராட்டம் மௌனிக்கப்பட்ட பிறகு, விடுதலைப் புலிகளின் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னின்று நடாத்தி வந்திருந்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்திற்கு கேக் வெட்டி கொண்டாடியிருந்தார். அத்துடன், மாவீரர் தினம், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் போன்றவற்றை அவர் நடாத்தியிருந்தார். இதற்காக பல்வேறு தடவைகள் போலீஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.