• Fri. Sep 11th, 2026

24×7 Live News

Apdin News

இளவரசி டயானாவின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ‘பழிவாங்கும் ஆடை’ டிசம்பரில் ஏலத்திற்கு வருகின்றது

Byadmin

Sep 11, 2026


இங்கிலாந்தின் மறைந்த இளவரசி டயானா அணிந்து உலகளவில் பெரும் பேசுபொருளாக மாறிய கறுப்பு நிறப் பட்டு ஆடை, எதிர்வரும் டிசம்பர் மாதம் ஏலத்திற்கு விடப்படவுள்ளது.

தமது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசல் மற்றும் அப்போதைய சார்ள்ஸ் இளவரசரின் தவறான தொடர்பு தொடர்பான தொலைக்காட்சி ஆவணப்படம் ஒளிபரப்பான சில மணித்தியாலங்களிலேயே, இளவரசி டயானா இந்த ஆடையை அணிந்து இலண்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்தார்.

1994ஆம் ஆண்டு இலண்டனின் சர்பென்டைன் கலைக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு, கிரேக்க ஆடை வடிவமைப்பாளர் கிறிஸ்டினா ஸ்டாம்போலியன் வடிவமைத்த தனித்துவமான தோள்பட்டை இல்லாத கறுப்பு பட்டு ஆடையில் இளவரசி டயானா வருகை தந்தமை சர்வதேச கலாசார வரலாற்றில் ஓர் மறக்க முடியாத தருணமாகப் பதிவானது.

இத்தோற்றத்தை சர்வதேச ஊடகங்கள் டயானாவின் ‘பழிவாங்கும் ஆடை’ என வர்ணித்தன.

சர்வதேச ஏல நிறுவனமான சோதபீஸ் எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி இந்த ஆடையை ஏலத்தில் விற்பனை செய்யவுள்ளதுடன், இது 300,000 அமெரிக்க டொலர்கள் அல்லது 220,000 பவுண்டுகள் வரை விலை போகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இளவரசி டயானா தொண்டு நிறுவனங்களுக்காக நிதி திரட்டும் நோக்கில் தனது 79 ஆடைகளை ஏலத்திற்கு விட்ட 1997ஆம் ஆண்டுக்குப் பின்னர், இந்த ஆடை ஏலத்திற்கு வருவது இதுவே முதல் முறை என சோதபீஸ் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஆடைகள் ஒரு சக்திவாய்ந்த மொழியாகச் செயற்பட முடியும் என்பதை இளவரசி டயானா இயல்பாகவே உணர்ந்திருந்தார் என சோதபீஸ் நிறுவனத்தின் சர்வதேச ஆடைப் பிரிவுத் தலைவர் மோர்கன் ஹலிமி தெரிவித்துள்ளார்.

தனது வாழ்க்கையின் மிகவும் சோதனையான காலகட்டத்தில், தமக்கே உரிய பாணியில் இந்த ஆடை மூலம் டயானா ஒரு வலுவான செய்தியை உலகிற்கு வெளிப்படுத்தினார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

By admin