பட மூலாதாரம், Ilia YEFIMOVICH/AFP via Getty Images
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
கடந்த 30 ஆண்டுகளில் பெரும்பாலான காலம் இஸ்ரேலின் பிரதமராகப் பதவி வகித்த பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளார் அந்நாட்டின் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி காடி ஐசென்கோட்.
இஸ்ரேலின் 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைப்பதற்குக் குறைந்தது 61 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஐசென்கோட்டுக்கு ஆறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 67 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேலில் புதிய அரசு அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி காடி ஐசென்கோட்டுக்கு அரபு அரசியல் கட்சிகள் ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளன. இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாகும் புதிய அரசை அமைக்குமாறு ஐசென்கோட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
புதிய அரசை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள ஐசென்கோட்டுக்கு 28 நாட்கள் அவகாசம் உள்ளது. இந்த அவகாசத்தை மேலும் 14 நாட்கள் நீட்டிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதியான ஐசென்கோட், 2022ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, நெதன்யாகு தலைமையிலான போர் அமைச்சரவையிலும் அவர் இடம் பெற்றார். ஆனால், பின்னர் நெதன்யாகுவின் விமர்சகராக மாறினார்.
தேசிய ஒற்றுமைக் கட்சி சார்பில் இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட ஐசென்கோட், பின்னர் அந்தக் கட்சியுடன் ஏற்பட்ட கொள்கை வேறுபாடுகளைக் காரணம் காட்டி அதிலிருந்து வெளியேறினார். கடந்த ஆண்டு முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களிடம் இருந்து பிரிந்து, ‘யாஷர்’ (Yashar) என்ற தனது சொந்த மத்தியவாத அரசியல் கட்சியைத் தொடங்கினார். ‘நேர்மையானவர்’ அல்லது ‘நேரடியாகச் செயல்படுபவர்’ என்பது யாஷர் என்ற சொல்லின் பொருள்.
காஸா போரில் தனது மகனையும் இரண்டு சகோதரர்களின் மகன்களையும் இழந்த ஐசென்கோட், தேர்தல் பிரசாரத்தின்போது தனது ராணுவ அனுபவத்திற்கும் பாதுகாப்புத் துறை சார்ந்த பின்னணிக்கும் முக்கியத்துவம் அளித்தார். ஆனால், தேர்தல் பிரசாரத்தின்போது அவர் முன்வைத்த பல்வேறு விவகாரங்களே அவருக்குச் சவால்களாக மாறக்கூடும். அவ்வாறாக ஐசென்கோட் எதிர்கொள்ளக் கூடிய எட்டு முக்கிய சவால்கள் என்ன? இங்கு பார்க்கலாம்.
பட மூலாதாரம், AHMAD GHARABLI / AFP via Getty Images
1. கூட்டணி அரசு அமைப்பதில் உள்ள சவால்
இஸ்ரேலில் நடந்த தேர்தலில், இடைக்காலப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி லிகுட் கட்சியும், அதன் தீவிர வலதுசாரி மற்றும் தீவிரப் பழமைவாத யூதக் கூட்டணிக் கட்சிகளும் 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 53 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. அதேநேரத்தில், ஐசென்கோட்டின் மத்தியவாத யாஷர் கட்சியும், அதனுடன் கூட்டணி அமைத்துள்ள மற்ற மூன்று யூத எதிர்க்கட்சிகளும் 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
இந்தச் சூழலில், அரசு அமைப்பதற்கும் அதைத் தொடர்ந்து நடத்துவதற்கும் ஐசென்கோட்டுக்கு அரபு அரசியல் கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால், இஸ்ரேலின் அரசியல் சூழலில் அரபுக் கட்சிகளின் ஆதரவைச் சார்ந்து ஓர் அரசை நடத்துவது கடினமானதாக இருக்கலாம்.
ஏனெனில், ஐசென்கோட் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் மற்றும் நீண்டகாலமாகக் கொண்டுள்ள சில கொள்கை நிலைப்பாடுகளைச் செயல்படுத்துவதற்கு அரபுக் கட்சிகள் தடையாக இருக்கக்கூடும். மேலும், அரசியலில் ஒப்பீட்டளவில் புதிதாக உள்ள ஐசென்கோட்டுக்கு, இந்தச் சிக்கலான அரசியல் சூழலைச் சமாளிப்பது எளிதானதாக இருக்காது.
2. இஸ்ரேலின் பாதுகாப்பு
இஸ்ரேலின் பிரதமராகப் பதவி வகித்த பெஞ்சமின் நெதன்யாகு, தன்னை நாட்டின் பாதுகாவலராக அடிக்கடி முன்னிறுத்தி வந்துள்ளார். இரான், இஸ்ரேலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகவும் நெதன்யாகு தொடர்ந்து கூறிவந்துள்ளார். 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து இரான் மீது தாக்குதல் நடத்தின.
இந்தத் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் நிலைமையை மேலும் மோசமாக்கியதுடன், பிராந்தியத்தின் பாதுகாப்பு குறித்தும் கடுமையான கவலைகளை ஏற்படுத்தின. இந்த மோதல் தொடர்பாக அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே இதுவரை எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை.
இதனால், இரானால் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நெதன்யாகு தொடர்ந்து கூறிவந்த நிலை இன்னும் நீடிக்கிறது. எனவே, இரான் தொடர்பான விவகாரத்தைக் கையாள்வது ஐசென்கோட் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருக்கும்.
பட மூலாதாரம், MARC ISRAEL SELLEM/POOL/AFP via Getty Images
3. அமெரிக்க இடைக்காலத் தேர்தலின் தாக்கம்
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி அடைந்த தோல்வி, இஸ்ரேலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்தத் தேர்தலில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுக் கட்சி தனது பெரும்பான்மையை இழந்துள்ளது.
டிரம்பின் கட்சி மோசமான தேர்தல் முடிவுகளைச் சந்தித்ததற்கு இரானுடனான போரே முக்கியக் காரணங்களில் ஒன்று என்று பலரும் கருதுகின்றனர். இஸ்ரேலுக்காக அமெரிக்கா தங்களுடன் போரிடுவதாகவும், அதன் சுமை அமெரிக்க மக்கள் மீது சுமத்தப்படுவதாகவும் இரான் பலமுறை குற்றம் சாட்டியுள்ளது.
தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழலில், இரானுடனான போர் தொடர்பான தனது நிலைப்பாட்டை அமெரிக்கா மாற்றிக் கொண்டால், அது இஸ்ரேலின் பாதுகாப்பு குறித்த நம்பிக்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதனால், இஸ்ரேலின் உள்நாட்டு அரசியல் சூழல் மட்டுமின்றி, தொலைவிலுள்ள அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் ஐசென்கோட்டுக்கு சவாலாக அமையக்கூடும்.
4. நெதன்யாகுவை எதிர்கொள்வது
கடந்த சில ஆண்டுகளாக ஊழல் குற்றச்சாட்டுகளை நெதன்யாகு எதிர்கொண்டு வருகிறார். ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலை அவர் கையாண்ட விதமும் விமர்சனத்திற்குள்ளானது.
மேலும், நீதித்துறையில் மாற்றங்களைக் கொண்டு வர அவர் முன்வைத்த சர்ச்சைக்குரிய திட்டம், இஸ்ரேல் முழுவதும் மிகப்பெரிய போராட்டங்களை ஏற்படுத்தியது. இருப்பினும், இஸ்ரேலின் அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட நெதன்யாகு, ஐசென்கோட்டுக்கு தொடர்ந்து சவாலாக இருப்பார்.
இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் தனது முடிவை அறிவிப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு, இடைக்காலப் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். எதிர்க்கட்சிகளும் அரபு அரசியல் கட்சிகளும் இணைந்து கூட்டணி அரசு அமைத்தால், அது நாட்டின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.
“இஸ்லாமியவாதிகளுடன் தொடர்புடைய இத்தகைய அரசு, ஐரோப்பிய நாடுகளில் நடைபெறுவதைப் போல இஸ்ரேலையும் உள்ளிருந்து பிளவுபடுத்தும். அது இன்னும் மோசமான நிலைமைக்கு வழிவகுக்கக் கூடும்” என்று நெதன்யாகு காணொளிச் செய்தியில் தெரிவித்ததாக பிபிசி பாரசீகம் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம், புதிய அரசு அமைவதற்கு முன்பே இஸ்ரேலின் எதிர்காலம் குறித்து மக்களிடம் நெதன்யாகு தனது கருத்துகளை முன்வைக்கத் தொடங்கியுள்ளார்.
பட மூலாதாரம், Finn Gomez/Getty Images
5. உலக நாடுகளுடனான இஸ்ரேலின் உறவு
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலிய பகுதிகள் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, நெதன்யாகு ஆட்சிக் காலத்தில் இஸ்ரேல் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளை உலகின் பல்வேறு நாடுகள் விமர்சித்துள்ளன. பல நாடுகளுடனான இஸ்ரேலின் உறவுகளும் மோசமடைந்துள்ளன. இந்த உறவுகளை மீண்டும் சீரமைப்பதற்கு இஸ்ரேல் கடுமையாக முயல வேண்டியிருக்கும்.
ஐசென்கோட் இந்த முயற்சிகளை முன்னெடுத்தால், நாட்டின் வலதுசாரி அரசியல் கட்சிகளுக்குக் கோபத்தை ஏற்படுத்தக்கூடிய சில கொள்கை முடிவுகளையும் அவர் எடுக்க வேண்டியிருக்கும்.
6. அரபு அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்புகள்
ஐசென்கோட்டுக்கு ஆதரவு அளிப்பதாக அரபு அரசியல் கட்சிகள் உறுதியளித்துள்ளன. எனவே, இஸ்ரேலில் வசிக்கும் அரபு மக்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தொடர்பாக அந்தக் கட்சிகள் சில எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கக்கூடும்.
அரபு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் புதிய வீடுகளைக் கட்டுவதற்கான நடைமுறைகளை எளிதாக்குவது அவற்றில் ஒன்றாக இருக்கலாம். மேலும், அரபு மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நகரங்களில் பாதுகாப்பு மற்றும் பிற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்குப் போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அந்தக் கட்சிகள் கோரக்கூடும்.
ஆனால், இரானுடனான போரும் லெபனானில் ஹெஸ்பொலாவுடனான மோதலும் நீடிக்கும் சூழலில், புதிய திட்டங்களை வகுப்பதும் அவற்றுக்கான நிதியை ஒதுக்குவதும் இஸ்ரேலுக்கு எளிதானதாக இருக்காது.
பட மூலாதாரம், Ilia YEFIMOVICH/AFP via Getty Images
7. காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள்
பாலத்தீனம், காஸா, மேற்குக் கரை மற்றும் ஹமாஸ் தொடர்பான விவகாரங்களில் ஐசென்கோட்டின் கொள்கைகள் நெதன்யாகுவின் நிலைப்பாடுகளில் இருந்து பெரிய அளவில் வேறுபடவில்லை என்பதையே அவரது கருத்துகள் காட்டுகின்றன. ஆனால், காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டுமென்று அரபு அரசியல் கட்சிகள் கோரக்கூடும்.
அவ்வாறு காஸா அல்லது ஹமாஸ் தொடர்பாக ஐசென்கோட் ஏதேனும் முடிவெடுத்தால், அவருக்கு ஆதரவளிக்கும் மற்ற வலதுசாரிக் கூட்டணிக் கட்சிகள் அதை எதிர்க்கக்கூடும். மறுபுறம், ஐசென்கோட் மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக நெதன்யாகுவும் செயல்படக்கூடும். இது ஐசென்கோட் தலைமையிலான அரசின் நிலைத்தன்மைக்கே அச்சுறுத்தலாக அமையலாம்.
8. தீவிர பழமைவாத யூதக் கட்சிகளுடன் சமரசம் செய்துகொள்வது
தீவிர பழமைவாத யூதக் கட்சிகள், கட்டாய ராணுவ சேவையில் இருந்து தங்களது சமூகத்தினருக்கு விலக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்தக் கூடும். ஆனால், இந்த விவகாரத்தில் ஐசென்கோட்டின் கொள்கை நிலைப்பாடு வேறுபட்டதாக உள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ராணுவ சேவையில் பங்களிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
பட மூலாதாரம், Reuters
பிபிசி செய்தியாளர் செபாஸ்டியன் அஷர் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் இஸ்ரேலின் வீதிகளில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இந்தப் போராட்டங்களின்போது, இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரை போராட்டக்காரர்கள் ‘நாஜிக்கள்’ என்று விமர்சித்தனர்.
வெள்ளை நிறச் சட்டைகள், கறுப்பு நிற ஃபெடோரா தொப்பிகள் மற்றும் நீண்ட கறுப்பு நிற மேலங்கிகளை அணிந்திருந்த நூற்றுக்கணக்கான தீவிர பழமைவாத யூதர்கள், ராணுவ காவல்துறையினர் முன்பாகத் திரண்டிருந்தனர்.
ஜெருசலேமுக்கும் டெல் அவிவுக்கும் இடையே அமைந்துள்ள மோடியின் நகரில் உள்ள கட்டடம் ஒன்றில் இந்த சர்ச்சை தொடங்கியது. அந்தக் கட்டடத்தில் தீவிர பழமைவாத யூத சமூகத்தைச் (ஹரேடி) சேர்ந்த இளைஞர் ஒருவர் வசித்து வந்தார்.
இஸ்ரேலில் கட்டாயமாக்கப்பட்டுள்ள ராணுவ சேவையில் ஈடுபட அவர் மறுத்துள்ளார். இதையடுத்து, அவரைக் கைது செய்வதற்காகக் காவல்துறையினர் அங்கு சென்றனர். அதைத் தொடர்ந்து இது தொடங்கியது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு