9
* முன்னாள் இயக்கங்களை அரசியல் ரீதியாகச் சிவராம் ஒன்றிணைத்த போது ஜோதிலிங்கம் எடுத்த நிலைப்பாடு!
* பேராசிரியர் சிவத்தம்பியுடனான தத்துவார்த்த முரண்பாடும் பின்னரான கருத்தியல் இணைவும்
* அரசறிவியல் தளத்தில் பலரை உருவாக்கிய மேதை!
— — —
அரசறிவியல் விரிவுரையாளர், அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி எனத் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் பன்முக ஆளுமையாகத் திகழ்ந்தவர் ‘ஜோதி மாஸ்டர்’ என்று அழைக்கப்படும் சி.அ. ஜோதிலிங்கம். சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தை உருவாக்கி, ஈழத்தமிழர் போராட்டம் மற்றும் அரசியல் உரிமைகளைப் பெறும் பொறிமுறைகள் குறித்துத் தனது இறுதிக்காலம் வரை தெளிவான, சமரசமற்ற, நிலைபேறான கருத்துக்களை முன்வைத்து வந்தார்.
தனது ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் ஊடக நேர்வழிகள் வாயிலாக அக் கருத்துக்களை நிறுவினார்.
1920 களில் ஆரம்பமான சிங்கள – தமிழ் முரண்பாடானது, பின்னர் அகிம்சைப் போராட்டமாக மாறி, அதன் தொடர்ச்சியாக 1980களில் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்த காலகட்டங்களில் மிக மோசமான உள்ளக முரண்பாடுகளை ஈழத்தமிழ் இனம் சந்தித்தது.
ஒரு தேசிய இனம் தனது அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுக்கும்போது; சவால்கள், பிளவுகள் மற்றும் பல்வேறு விதமான சதிக் கோட்பாடுகளை (Conspiracy theories) எதிர்கொள்ள நேரிடுவது இயல்பானதே.
ஒரு இறையாண்மையுள்ள அரசும், அதன் அயல் மற்றும் நேச நாடுகளும் இணைந்து, அவ்வாறான சதிப் பின்னணிகளை ஓர் அரசற்ற தேசிய இனத்தின் மீது மிக இலகுவாக உருவாக்கிவிடும்.
அவ்வாறான சதி வலைகளுக்குள் சிக்குண்டு தவிக்கும் ஓர் இனமாக 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் ஈழத்தமிழர்கள் காணப்படுகின்றனர்.
ஈழத்தமிழ் ஆயுத மோதல் தீவிரமடைந்த காலகட்டத்தில், ஈ.பி.ஆர்.எல்.எஃப் (EPRLF) அமைப்பின் தத்துவார்த்தப் பின்னணியை ஆழமாகக் கிரகித்துக் கொண்டவராக ஜோதிலிங்கம் விளங்கினார்.
1980 களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் வியூகங்கள் மற்றும் அணுகுமுறைகள் குறித்து உள்ளார்ந்த ரீதியில் அறிவுசார் மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருந்த போதிலும், சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கட்டமைக்கப்பட்ட நீட்சியை அவர் துல்லியமாக மதிப்பிட்டிருந்தார்.
இதன் காரணமாக, வடக்கு – கிழக்கு இணைந்த ‘தமிழ்த் தேசியம்’ என்ற உரிமைக் கோட்பாட்டிற்கு உணர்வும் அறிவும் ஒருங்கிணைந்த ஒரு பொறிமுறையினூடாகத் தனது கட்டுரை – நேர்காணல்களில் முன்னுரிமை வழங்கினார்.
இந்த வரலாற்றுப் பரிணாமத்தை—அது ஓர் இதிகாசக் கதையாக இருந்தபோதிலும்—கம்பராமாயணத்தில் கம்பர் வகுத்த அரசியல் தத்துவார்த்தப் பின்னணியோடு ஒப்பிட்டு நோக்க முடியும்.
கைகேயியின் சூழ்ச்சியால் அண்ணன் பரதனும் தம்பி இலட்சுமணனும் ஒருவரை ஒருவர் சந்தேகப்பட்டு, மோதிக்கொள்ளும் சூழல் உருவாகியபோது, இலட்சுமணன் கோபத்துடன் பரதனை எதிர்க்கச் செல்கிறான்.
ஆனால், பரதனின் தூய அன்பையும் தியாகத்தையும் கண்டதும் இருவருக்குள்ளும் இருந்த முரண்பாடுகள் மறைந்து, பேரன்பும் ஒற்றுமையும் பிறக்கிறது.
அண்ணன் – தம்பிக்கு இடையே இருந்த இந்த முரண்பாடுகளும், பின்னர் ஏற்பட்ட உன்னதமான கூட்டுரிமை இணைவையும் கம்பன் தன் பாடல் வரியில் அழகாகப் படம்பிடிப்பார்:
“குகனொடும் ஐவர் ஆனோம் முன்பு, பின் குன்று சூழ்ந்த மகனொடும் அறுவர் ஆனோம்; எம்முழை அன்பின் வந்த
அகனமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனோம்…”
இதே தத்துவார்த்தப் புரிதலைத் தான் ஜோதிலிங்கத்தின் அரசியல் வாழ்விலும் காண முடிகிறது.
இலட்சுமணன் பரதனை எதிர்கொண்டது போன்றதொரு உள்ளக முரண்பாட்டுச் சூழல் 1980களில் நிலவியபோதிலும், 1990களுக்குப் பின்னர் சிங்கள பௌத்த பேரினவாதம் ஈழத்தமிழினத்தின் ஒட்டுமொத்த இருப்பையே கேள்விக்குள்ளாக்கிய யதார்த்தத்தை ஜோதிலிங்கம் உணர்ந்தார்.
தமிழர்களின் விடுதலை என்ற பேரிலக்கிற்கு முன்னால் உள்ளகப் பிளவுகள் அர்த்தமற்றவை என்பதைத் தனது அறிவாலும் உணர்வாலும் கிரகித்துக் கொண்டு, பழைய முரண்பாடுகளைக் கடந்து, தமிழ்த் தேசியத்தின் மையச் சக்தியாக விளங்கிய விடுதலைப் புலிகளின் அரசியல் நிலைப்பாட்டிற்குத் தனது காத்திரமான கட்டுரைகள் மூலம் அறிவுசார் பலம் சேர்த்தார்.
குறிப்பாக, 1990களில் இருந்து தமிழ்த் தேசியத்தின் இருப்புக்கு வலுச்சேர்க்கும் வகையிலான கருத்துருவாக்க நெறிமுறைகளை அறிவுத் தளத்தில் அவர் படிப்படியாக விரிவாக்கம் செய்தார்.
2002 ஆம் ஆண்டு நேரர்வேயின் அநுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்திற்கு முன்னரான 1996 முதல் 2000 ஆம் ஆண்டு வரையான நான்கு வருட காலப்பகுதியில், முன்னாள் ஆயுத இயக்கங்கள் மற்றும் அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியும் (TULF) இணைந்து ஓர் ஒருங்கிணைந்த அரசியல் செயல்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என்ற ஆழமான தத்துவார்த்தக் கருத்தை ஜோதிலிங்கம் முன்வைத்தார்.
கொழும்பில் அவர் வாழ்ந்த காலகட்டத்தில், என்னுடன் தினசரி அரசியல் உரையாடல்களில் ஈடுபடும் நெருங்கிய ஆளுமையாக ஜோதிலிங்கம் விளங்கினார்.
குறிப்பாக, 1986 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு – கிழக்குப் பகுதிகளில் அரங்கேறிய தமிழ் இயக்க மோதல்கள் குறித்தும், அவற்றின் உள்ளார்ந்த பின்னணிகள் பற்றியும் மனம் திறந்து என்னுடன் விரிவாக விவாதித்திருந்தார்.
அதிலும் குறிப்பாக, இம் முரண்பாடுகளுக்குப் பின்னால் ‘இந்தியா’ என்ற பிராந்தியப் பெரியண்ணனின் (Big Brother) தலையீடுகளும் அப்போதைய புவிசார் அரசியல் சூழ்ச்சிகளும் எவ்வாறு இயங்கின என்பது பற்றி எல்லாம், மிகவும் ஆழமாகவும் சமூக விஞ்ஞான அறிவு நிலை சார்ந்தும் அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
இப்பிராந்தியத்தில் ‘இந்தியா’ என்ற வல்லரசைத் தவிர்ந்துவிட்டு அல்லது புறந்தள்ளிவிட்டு எந்தவொரு அரசியல் நகர்வையும் முன்னெடுக்க முடியாது என்ற யதார்த்தத்தை ஜோதிலிங்கம் ஒப்புக் கொள்கிறார்.
எனினும், 1980 களில் விடுதலைப் புலிகள், தங்களின் தனித்துவமான அரசியல் – இராணுவப் பலத்தின் மூலம், அந்தப் புவிசார் அரசியல் சமநிலையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றி அமைக்க முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்தெடுத்திருந்தனர் என்ற தர்க்கரீதியான வாதத்தை அவர் என்னுடன் முன்வைத்தார்.
ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டமானது ‘இலங்கை அரசு’ என்ற ஒடுக்குமுறை நிறுவனக் கட்டமைப்புக்கு எதிரானது மட்டுமே தவிர, அது இந்தியா போன்ற பிராந்திய வல்லரசுகளுக்கோ, ஏனைய சர்வதேச நாடுகளுக்கோ அல்லது சாதாரண சிங்கள மக்களுக்கோ எதிரானது அல்ல என்ற மிகத் தெளிவான தத்துவார்த்தக் கருத்துருவாக்கத்தை ஜோதிலிங்கம் 1990களின் தொடக்கத்திலிருந்து அறிவுத்தளத்தில் கட்டமைக்க ஆரம்பித்தார்.
யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றிய 1995 ஆம் ஆண்டிற்குப் பின்னர், கொழும்புக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்த மூத்த பேராசிரியர் கா. சிவத்தம்பியுடன் ஆரம்பத்தில் கடுமையான தத்துவார்த்த முரண்பாடுகளைக் கொண்டு விவாதிப்பவராக ஜோதிலிங்கம் விளங்கினார்.
1980 களில் அரங்கேறிய தமிழ் இயக்கங்களுக்கு இடையிலான மோதல்கள் மற்றும் அவற்றின் அரசியல் பின்னணிகள் குறித்த விவாதங்களே இம்முரண்பாடுகளின் மையப்புள்ளியாக இருந்தன.
எனினும், பிற்காலத்தில் பேராசிரியர் சிவத்தம்பியின் நெருங்கிய ஈழத்தமிழ் அரசியல் அறிவுசார் நண்பராக ஜோதிலிங்கம் மாறினார்.
குறிப்பாக, ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தில் அப்போதைய சந்திரிகா அரசாங்கம் கையாண்ட ஏமாற்றுத்தனமான அணுகுமுறைகளும் அரசியல் தவறுகளும், இவ்விரு ஆளுமைகளும் முரண்பாடுகளைக் கடந்து தமிழ்த் தேசியக் கூட்டுரிமைக்காக ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டிய வரலாற்றுத் தேவையை ஏற்படுத்தின.
2001ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஈ.பி.ஆர்.எல்.எஃப் (EPRLF), ரெலோ (TELO), தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF) மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (ACTC) ஆகிய நான்கு கட்சிகளும் ஒன்றிணைந்து ‘தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு’ (TNA) என்ற தங்குதளத்தை உருவாக்குவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கொழும்பில் கையெழுத்திட்டன.
இக் கூட்டமைப்பிற்கான தத்துவார்த்தக் கருத்துருவாக்கங்களை ஆரம்பம் முதலே தன் கட்டுரைகள் மூலம் கட்டியெழுப்பிய ஜோதிலிங்கம், தமிழர்களின் பேரம் பேசும் சக்தியை (Bargaining Power) சர்வதேச அரங்கில் உச்சப்படுத்த வேண்டுமாயின், புளொட் (PLOTE) மற்றும் ஈ.பி.டி.பி (EPDP) ஆகிய முன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கங்களும் இந்த ஒற்றைப் பொறிமுறைக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை தீர்க்கமாக வலியுறுத்தியிருந்தார்.
முன்னாள் போராளிகளாகவும், அப்போதைய தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களாகவும் விளங்கிய அனைவரையும் 1999ஆம் ஆண்டில் நான் தனித்தனியாக நேர்காணல் செய்து, ‘வீரகேசரி’ நாளிதழில் தொடராக வெளியிட்டு வந்தேன்.
அந்த நேர்காணல்களைத் தொடர்ந்து வாசித்து வந்த ஜோதிலிங்கம், ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் வகிபாகத்தையும் அதன் தேவையையும் ஏனைய இயக்கங்கள் உள்ளிட்ட அனைவரும் உணர்ந்து கொள்ளத் தொடங்கியிருந்த அச்சமகாலச் சூழலை மிக நுட்பமாகக் கவனித்திருந்தார்.
அதன் விளைவாகவே, ‘தமிழ்க் கட்சிகள் அனைத்தும் தங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளைக் கடந்து, ஏன் இப்போது ஓர் ஒற்றைப் பொறிமுறையின் கீழ் ஒருமித்த குரலாகச் செயல்படக் கூடாது?’ என்ற தீர்க்கதரிசனமான கேள்வியை அவர் அப்போது என்னிடம் எழுப்பினார்.
விரும்பியோ விரும்பாமலோ முன்னாள் இயக்கங்கள் அனைத்தும் ஓரணியில் வர வேண்டும் என்ற ஆழமான தொனியில் என்னுடன் பேசியிருக்கிறார்.
2005ஆம் ஆண்டு கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட மூத்த இராணுவ – அரசியல் ஆய்வாளரான தராக்கி சிவராம், சிதறிக்கிடந்த முன்னாள் தமிழ் ஆயுத இயக்கங்களை ஒருங்கிணைத்து, அவர்களின் கட்சி அரசியல் செயல்பாடுகளை ஒற்றைப் புள்ளியில் இணைக்கும் இராஜதந்திர முயற்சிகளில் 1999ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
2000ஆம் ஆண்டு ஜனவரியில் கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட குமார் பொன்னம்பலம், சிவராம் எடுத்த அந்த முயற்சிக்கு வழிகாட்டியாக இருந்தார்
அச்சமகாலத்தில், சில அணுகுமுறைகள் சார்ந்து சிவராமுடன் ஜோதிலிங்கத்திற்குச் சில மென்மையான தத்துவார்த்தக் கருத்தியல் உரசல்கள் இருந்தபோதிலும், தமிழ்த் தேசிய அரசியல் தளத்திலான தங்களின் பரஸ்பர உறவை அவர் மிகவும் சீராகப் பேணி வந்தார்.
குறிப்பாக, தங்களுக்குள் நிலவும் ‘முரண்பாடுகளுக்குள் உடன்பாட்டைக் காணும்’ (Unity in Diversity) ஓர் உன்னத அரசியல் இராஜதந்திரப் பொறிமுறையை நோக்கித் தமிழ் அரசியல் சக்திகளை நகர்த்த அன்று சிவராம் எடுத்த பெருமுயற்சிகளுக்கு, ஜோதிலிங்கம் தனது காத்திரமான ஆய்வுக் கட்டுரைகள் ஊடாக தத்துவார்த்த ரீதியில் பெருமளவு வலுச்சேர்த்திருந்தார்.
அதேவேளை, கல்வித் துறையிலும் சட்டம் மற்றும் சமூக விழிப்புணர்வுத் தளத்திலும் ஜோதிலிங்கத்தின் ஆளுமை அளப்பரியது.
கொழும்பு, கொட்டாஞ்சேனை புனித நல்மேய்ப்பர் மகளிர் கல்லூரி கல்லூரியிலும், (Good Shepherd Convent, Kotahena Colombo) கொழும்பிலுள்ள முன்னணித் தனியார் கல்வி நிலையங்களிலும் அரசியல் விஞ்ஞானப் பாடத்தை நீண்டகாலமாகக் கற்பித்தார்.
அவருடன் இணைந்து நானும் அரசியல் விஞ்ஞானப் பாடத்தைக் கற்பித்திருந்தேன்.
தனது 44 ஆவது வயதிலேயே கொழும்பு சட்டக் கல்லூரியில் இணைந்து சட்டம் பயின்றார். தனது 48ஆவது வயதில் சட்டத்தரணியாக உயர் நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, 2013 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்தில் மீண்டும் நிரந்தரமாகக் குடியேறினார்.
அங்கு சட்டத்தரணியாகத் தனது தொழில்சார் பணிகளை முன்னெடுத்த அதேவேளை, ‘சமூக விஞ்ஞான ஆய்வு மையம்’ (Centre for Social Science Research) என்ற அமைப்பை நிறுவி, ஈழத்தமிழர்களின் அரசியல் விவகாரங்கள் மற்றும் கோட்பாடுகள் குறித்த திறந்த தத்துவார்த்த உரையாடல்களையும் கருத்தரங்குகளையும் தொடர்ச்சியாக நடத்தினார்.
ஜோதிலிங்கத்திடம் அரசியல் விஞ்ஞானத்தைக் கற்று, இன்று அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் ஆளுமைகளாகத் திகழ்வோர் பலர் உள்ளனர்.
‘இறங்கிச் செல்லுதல்’ அல்லது ‘சமரசம் செய்துகொள்ளுதல்’ என்ற பேச்சுக்கே இடமின்றி, ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான தீர்வைச் சர்வதேச அங்கீகாரத்துடன் நேரடியாக வென்றெடுக்க வேண்டும் என்ற சமரசமற்ற இராஜதந்திர அணுகுமுறை ஒன்றையே அவர் தனது இறுதி மூச்சு வரை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்.
மரணிப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்னர், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தில் ஆற்றிய உரை ஜோதிலிங்கத்தின் தீர்க்கதரிசனம் மிக்க அரசியல் சாசனமாக அமைந்தது.
அவ்வுரையில், இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ் அரசியல் பரப்பில் மேலாதிக்கச் சிந்தனையுடனான ‘பெரியண்ணன்’ போக்கைக் கையாள முற்படுவதை அவர் மிகக் கடுமையாக எச்சரித்திருந்தார்.
அதாவது, 1980களில் பிராந்தியப் புவிசார் அரசியலில் ‘இந்தியா’ எத்தகை சூழ்ச்சித் திறனுடைய மேலாதிக்க நகர்வுகளை முன்னெடுத்ததோ, அத்தகையதொரு ஆரோக்கியமற்ற அரசியல் போக்கைத் தற்போதைய சமகாலச் சூழலில் தமிழரசுக் கட்சியும் கையில் எடுத்திருக்கின்றது என்ற ஆழமான அரசியல் தொனியும் குத்தீட்டியும் அவரது அந்த உரையில் பொதிந்திருந்தது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நெகிழ்வுத் தன்மை அற்ற ‘தனிவழிப் போக்கையும்’ (Isolationist approach) சமரசமின்றி ஜோதிலிங்கம் அவ்வப்போது கண்டித்திருக்கிறார்.
தற்கால உலகளாவிய மற்றும் பிராந்தியப் புவிசார் அரசியல் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க கூடிய ஒற்றைப் பலமான அரசியல் சக்தியை, வெற்று நாடாளுமன்றக் கட்சிகளால் அன்றி, விழிப்புணர்வு பெற்ற சாதாரண மக்களின் எழுச்சியால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும் என்ற உன்னதமான மக்கள் பேரியக்கச் சிந்தனையையும், அதற்கான நடைமுறை வழிவகைகளையும் ஜோதிலிங்கம் வகுத்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.
அதேநேரம், மலையகத் தமிழர்களின் தனித்துவமான அரசியல் உரிமைகள் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து, மிகவும் சமநிலையான, நியாயமான மாற்றுத் தத்துவங்களை ஜோதிலிங்கம் கட்டமைத்திருந்தார்.
இலங்கைத் தீவில் முஸ்லிம் மக்கள் ஒரு சிறுபான்மைச் சமூகமாக வாழ்வதனாலும், தங்களின் பிராந்தியப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவையினாலுமே, அவர்கள் அவ்வப்போது ஆட்சிப்பீடமேறும் அரசாங்கங்களுடன் இணக்க அரசியல் போக்கைக் கையாள்கின்றனர் என்ற யதார்த்தத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, வடக்கு – கிழக்கில் வாழும் ஈழத்தமிழர்கள், முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் நிலவும் இத்தகைய பாதுகாப்புச் சார்ந்த அச்சங்களைப் போக்கக்கூடிய மற்றும் அவர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய அரசியல் நகர்வுகளைத் தாங்களாகவே முன்வந்து வகுக்க வேண்டும் என்ற கருத்தை அவர் ஆழமாகப் பதிவு செய்தார்.
அதேபோன்று, மலையகத் தமிழர்களின் தனித்துவ அடையாளத்தையும் அவர்களின் வாழ்வாதாரப் போராட்டங்களையும் ஈழத்தமிழர்கள் அங்கீகரித்து, பரஸ்பர மரியாதையுடன் கையாளுவதன் மூலமே, ஒட்டுமொத்தத் தமிழ் பேசும் மக்களின் கூட்டுப் பலத்துடன் இலங்கை அரசாங்கத்தை ஓர் அறவழிக்குக் கொண்டு வர முடியும் என்ற சிந்தனையையும் அவர் வகுத்திருந்தார்.
இந்த இரு சமூகங்களின் அரசியல் தேவைகளையும் கையாண்டு, ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தைத் திசைதிருப்பவும் பலவீனப்படுத்தவும் பேரினவாத அரசியல் தலைமைகள் எடுத்த சதி முயற்சிகள் மற்றும் அதன் பின்னாலுள்ள ஆபத்துகள் குறித்தும் ஜோதிலிங்கம் அறிவுபூர்வமாகத் தனது கட்டுரைகளில் விவரித்திருந்தார்.
ஆகவே தமிழ் இனம் வாழும் வரை அவரது இந்த நிலைபேறான தத்துவார்த்த வழிகாட்டல் காலத்தின் ஒளியாகத் திகழும்.
பிற்குறிப்பு
— — —
அமரர் ஜோதிலிங்கம், 2013 ஆம் ஆண்டு மீண்டும் தனது சொந்த ஊரான யாழ்ப்பாணத்தில் மீண்டும் குடியேறும் வரை, கொழும்பில் 23 வருடங்களாக எனது குடும்பத்துடன் நெருங்கிய நட்புறவோடு பழகிய ஒருவர். கொழும்பில் அவர் வாழ்ந்த காலத்தில், எனது அக்காவுடன் இணைந்து புனித நல்மேய்ப்பர் மகளிர் கல்லூரியிலும், (Good Shepherd Convent, Kotahena Colombo) அமரராகிய எனது அண்ணனுடன் இணைந்து கொழும்பிலுள்ள தனியார் கல்வி நிலையங்களிலும் கற்பித்த சக ஆசிரியராகவும் விளங்கியவர்.
அ.நிக்ஸன்
பத்திரிகையாளர்,
ஊடகம் & அரசறிவியல் விரிவுரையாளர்,