தவெக எம்.எல்.ஏ. டாக்டர் என்.இளையராஜா வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய, அவருக்கு நெருக்கமான நிர்வாகியை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
ஊத்தங்கரையில் உள்ள எம்.எல்.ஏ. இளையராஜாவின் வீட்டில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்தக் கூட்டத்தில், வருகிற சனிக்கிழமை ஊத்தங்கரைக்கு வருகை தரும் பொறுப்பு அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கார் மோதி தாக்குதல்
கூட்டம் முடிந்ததும் நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அப்போது, எம்.எல்.ஏ.வுக்கு நெருக்கமானவரும், டிராவல்ஸ் தொழில் செய்து வருபவருமான ஆத்திம் மோட்டார் சைக்கிளில் சென்றார். அவரைப் பின்தொடர்ந்து வந்த கருப்பு நிற கார், அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
இதில் நிலைதடுமாறிக் கீழே விழுந்த ஆத்திமை, காரில் இருந்து ஹெல்மெட் அணிந்தபடி இறங்கிய மர்ம நபர் ஒருவர் அரிவாளால் வெட்டினார். அதைத் தடுக்க முயன்றபோது, அவரது கையிலும் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு, உடன் சென்ற நிர்வாகிகள் ஓடிவந்தனர். இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் காரில் ஏறி ஊத்தங்கரை-திருப்பத்தூர் சாலையில் தப்பிச் சென்றனர்.
தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆத்திமை மீட்டு, ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காகத் தனியார் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த எம்.எல்.ஏ. இளையராஜா ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று, ஆத்திமின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர்.
அரசியல் பின்னணி?
தமிழகத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பாகப் பேசப்பட்டதாகக் கூறப்படும் குதிரை பேர விவகாரத்தில், முதன்முதலில் காவல்துறையிடம் புகார் அளித்தவர்களில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் என். இளையராஜாவும் ஒருவர் எனக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், அவருக்கு நெருக்கமான நிர்வாகி மீது தாக்குதல் நடைபெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பின்னணியில், ஆத்திம் மீதான தாக்குதலுக்கும் அரசியல் விவகாரங்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரம், டிராவல்ஸ் தொழில் போட்டி, பணப் பரிவர்த்தனை தகராறு அல்லது தனிப்பட்ட முன்விரோதம் உள்ளிட்ட காரணங்களும் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
தனிப்படை அமைப்பு
இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மர்ம நபர்களைப் பிடிப்பதற்காக, ஊத்தங்கரை உட்கோட்ட டி.எஸ்.பி. ராமமூர்த்தி, ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் தென்னரசு, கல்லாவி இன்ஸ்பெக்டர் ராஜவேல் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கருப்பு நிற காரின் பதிவு எண், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள், நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காணும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், எம்.எல்.ஏ.வைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலா? அல்லது ஆத்திமின் தனிப்பட்ட பிரச்சினை காரணமா ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.