5
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையை உயர் மட்டத்திலேயே வைத்திருக்கவும், அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்தவும் ஏதுவாக ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிக்கும் கப்பல்களை இலக்கு வைத்து ஈரான் புதிய உத்திகளைக் கையாண்டு வருவதாக அந்நாட்டின் மூத்த அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்தது முதல், ஹோர்முஸ் நீரிணை மீதான தனது பிடியை உறுதிப்படுத்த ஈரான் தொடர்ச்சியாக முயன்று வருகின்றது.
தற்போதைய மோதல்களுக்கு முன்னர் உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பகுதியைக் கொண்டு சென்ற மிக முக்கிய கடல்வழியான இதில், வாஷிங்டன் நிர்வாகத்திற்கு நேரடி அழுத்தங்களை வழங்கும் நோக்கில் ஈரான் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஈரானின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல் நடவடிக்கைகள் காரணமாக இந்த நீரிணையூடான கப்பல் போக்குவரத்து கணிசமாகக் குறைவடைந்துள்ளதுடன், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும், இவ்வாறான பதற்றமான சூழலிலும் சில எண்ணெய்க் கப்பல்கள் இன்னும் இந்த கடல் மார்க்கமாகவே பயணித்து வருகின்றன.
தங்களது புதிய வியூகம் தொடர்பான மேலதிக விபரங்களை வெளியிட ஈரானிய அதிகாரிகள் இருவரும் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
எனினும், தாங்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறிப் பயணிக்கும் கப்பல்களுக்கு எதிராக கடந்த 10 நாட்களுக்கு முன்னரிருந்தே வெவ்வேறு வகையான புதிய தாக்குதல் உத்திகளை ஈரான் நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும், இதன் விளைவாக இலக்கு வைக்கப்படும் கப்பல்கள் மீதான தாக்குதல்களின் தீவிரம் அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகளில் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
எதிர்வரும் அமெரிக்கத் தேர்தலின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய இலக்குடன், தாக்குதல்களின் வகை மற்றும் அவற்றின் வேகத்தில் மாற்றங்களை இந்த புதிய உத்தி உள்ளடக்கியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். உலகளாவிய ரீதியில் எண்ணெய் விலையைக் குறைப்பதற்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் மேற்கொண்டு வரும் முயற்சிகளை முறியடிப்பதே இதன் பிரதான நோக்கம் என அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இந்த புதிய உத்தியை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் ஈரானிய தலைமத்துவத்தின் மிக உயர்ந்த மட்டத்திலேயே எடுக்கப்பட்டது எனவும், நாட்டின் ஆட்சி அதிகாரக் கட்டமைப்புகள் அனைத்தினூடாகவும் இது மிகத் துல்லியமாக ஒருங்கிணைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.