பட மூலாதாரம், Norbert Suchanek and Associação das Vítimas do Césio-137 (AV-Césio Archive)
-
- எழுதியவர், பெக்கா ஜான்ஸ்
- பதவி, குளோபல் ஜர்னலிசம்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
“அந்தக் கருவியின் ஒரு பகுதியில் இருந்த சிறிய துளையிலிருந்து, மனதை மயக்கும், மிகவும் கவர்ச்சிகரமான ஒளி வெளிப்பட்டது…”
தேவெய்ர் ஃபெரெய்ராவின் பழைய இரும்புக் கிடங்கில் இருந்த விசித்திரமான, நீல நிறத்தில் ஒளிரும் குப்பியைப் பற்றிய செய்தி பரவியதும், அதைப் பார்ப்பதற்காக அண்டை வீட்டார், குடும்பத்தினர், நண்பர்கள் என பலரும் கூடினர்.
சிலர் தங்கள் கைகளில் சிறிய, மின்னும் துண்டுகளைப் பிடித்துப் பார்த்தனர் என்றால், மற்றும் சிலர், தங்கள் குடும்பத்தினருக்கும் காட்ட வேண்டும் என்பதற்காக அந்தத் துண்டுகளை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.
ஆனால், தாங்கள் கையாள்வது அதிக கதிரியக்கத் தன்மை கொண்ட சீசியம்-137 என்ற பொருள் என்பதும், அது பிரேசிலின் மிக மோசமான கதிர்வீச்சு விபத்துக்குக் காரணமாகப் போகிறது என்பதும் யாருக்கும் தெரியவில்லை.
கைவிடப்பட்ட மருத்துவமனை ஒன்றில் அந்தக் குப்பியைக் கண்டெடுத்த இரண்டு குப்பை சேகரிப்பாளர்களிடமிருந்து சில நாட்களுக்கு முன்பு தேவெய்ர் அதை வாங்கியிருந்தார்.
அது பயனற்ற பொருள் என்று கருதிய அவரது சகோதரர் ஒடெசன், அதைக் குப்பையில் வீசிவிடுமாறு வற்புறுத்தினார். ஆனால், அந்த ஒளிரும் பொருளால் தேவெய்ர் மிகவும் ஈர்க்கப்பட்டார். அதைத் தனது மனைவிக்கான மோதிரத்தில் பதித்தால் மிகவும் அழகான ரத்தினக் கல்லாக இருக்கும் என்றுகூட அவர் நினைத்தார்.
இதைப் பற்றி பிறகு ஒரு நாளில் பேசும்போது, “மரணத்தின் ஒளியை தான் காதலித்ததாக” அவர் கூறினார்.
பட மூலாதாரம், Norbert Suchanek and Associação das Vítimas do Césio-137 (AV-Césio Archive)
ஒரு வாரத்திற்குப் பிறகு, பலருக்கு மர்மமான உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டன.
அந்தக் குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர், இந்த உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்ட நேரத்தையும், விசித்திரமாக ஒளிரும் அந்தக் குப்பி வீட்டுக்கு வந்த நேரத்தையும் தொடர்புபடுத்திப் பார்த்தார். இதையடுத்து, தேவெய்ரின் மனைவி மரியா கேப்ரியேலா, அந்தக் குப்பியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
மருத்துவமனையின் நாற்காலி ஒன்றின் மீது வைக்கப்பட்ட அந்தக் குப்பி, அன்று முழுதும் அப்படியே அங்கேயே இருந்தது. இறுதியில் அடுத்த நாளன்று, ஒரு மருத்துவர் கதிர்வீச்சைக் கண்டறியும் கருவியைக் கொண்டு வந்து அதைச் சோதித்தார்.
கருவியில் பதிவான கதிர்வீச்சின் அளவு மிக அதிகமாக இருந்ததால், முதலில் கருவி பழுதடைந்திருக்கலாம் என்று மருத்துவர் கருதினார். ஆனால், மற்றொரு கருவியைக் கொண்டு சோதித்தபோதும் அதே அளவு கதிர்வீச்சு இருப்பது உறுதியானது.
உடனே, “உடனடியாக உதவி தேடுங்கள். நீங்கள் தொட்ட அந்தப் பொருள் கதிரியக்கத் தன்மை கொண்டது” என்று ஒடெசனின் சகோதரர் தெரிவித்துவிட்டார்.
அதற்குள், ஒடெசனின் குடும்பத்தைச் சேர்ந்த 56 பேர் கதிர்வீச்சுக்கு ஆளாகியிருந்ததாக அவர் கூறுகிறார்.
இந்தச் செய்தியைக் கேட்டதும், அதற்கு முந்தைய ஆண்டு யுக்ரேனில் நிகழ்ந்த செர்னோபில் அணு உலை விபத்து ஒடெசனின் நினைவுக்கு வந்தது.
“‘கதிரியக்கப் பொருள்’ என்ற வார்த்தைகளைக் கேட்டதும், ‘அவ்வளவுதான்! நாம் அனைவரும் பெரும் ஆபத்தில் சிக்கிக்கொண்டோம்; இனி அனைவரும் இறக்கப் போகிறோம்’ என நினைத்தேன்” என்கிறார் ஒடெசன்.
பட மூலாதாரம், Norbert Suchanek and Associação das Vítimas do Césio-137 (AV-Césio Archive)
துரதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் முதலாவது நபர், ஒடெசனின் ஆறு வயது மருமகள் லெய்டே.
அவளுடைய தந்தை, சீசியம்-137 கதிரியக்கப் பொருளின் ஒரு சிறிய துண்டைத் தீப்பெட்டி ஒன்றில் வீட்டுக்கு கொண்டு வந்திருந்தார். அந்தப் பொருள் இருட்டில் எப்படி ஒளிர்கிறது என்பதைக் காட்டுவதற்காக அவர் விளக்குகளை அணைத்தபோது, லெய்டே அந்தப் பொருளுடன் விளையாடினாள்.
“அப்போது அவளுடைய தாய் இரவு உணவைத் தயாரித்திருந்தார். லெய்டே ஒரு முட்டையை எடுத்து, கதிரியக்கப் பொருளைத் தொட்டிருந்த தனது கைகளால் அதைச் சாப்பிட்டாள்” என்று ஒடெசன் கூறுகிறார்.
சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, லெய்டே உயிரிழந்தாள். அதே நாளில், தேவெய்ரின் மனைவியும் லெய்டேவின் அத்தையுமான மரியா கேப்ரியேலாவும் உயிரிழந்தார்.
குப்பைக் கிடங்கில் பணிபுரிந்த இரண்டு இளைஞர்களும் இந்த கதிர்வீச்சு விபத்தில் உயிரிழந்தனர்.
பட மூலாதாரம், Getty Images
பட மூலாதாரம், Norbert Suchanek and Associação das Vítimas do Césio-137 (AV-Césio Archive)
கோயானியாவில் கதிர்வீச்சுக்கு ஆளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர், மருத்துவப் பரிசோதனைக்காக ஒலிம்பிக் மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களில் ஒடெசனும் ஒருவர்.
கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்பட்டவர்களின் உடல்கள், கதிரியக்க மாசை நீக்கும் திரவம் மற்றும் தூரிகைகளைப் பயன்படுத்தித் தேய்த்துக் கழுவப்பட்டன. பின்னர், அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. அவர்களது உடைகளும் அழிக்கப்பட்டன. உடலில் உள்ள கதிரியக்கப் பொருட்களை வெளியேற்றுவதற்காக திரவங்களை அதிக அளவில் அருந்துமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
“எனக்கு பீர் பிடிக்கும் என்றால், அதை நிறையக் குடிக்கலாம் என்று அவர்கள் கூறினார்கள்” என்கிறார் ஒடெசன்.
அந்த அறிவுரையைப் பின்பற்றிய அவர், தனது நண்பருக்குச் சொந்தமான மதுக்கடைக்குச் சென்றார்.
“ஆனால், நான் சிறுநீர் கழிக்கும் இடமெல்லாம் கதிரியக்க மாசு ஏற்படும் என்று அவர்கள் என்னை எச்சரிக்கவில்லை. இதனால், எனது நண்பரின் மதுக்கடையில் இருந்த கழிப்பறையையே இடித்து அகற்ற வேண்டியதாயிற்று” என அவர் தெரிவித்தார்.
“எங்களை கண்டதும் மக்கள் ஓடிவிடுவார்கள்”
பட மூலாதாரம், Photos by Norbert Suchanek and Associação das Vítimas do Césio-137 (AV-Césio Archive)
கதிரியக்க மாசிலிருந்து விடுபட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும், ஒடெசன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மூன்றாவது மாடியில் தனிமைப்படுத்தப்பட்டார். அவரது மனைவி, கீழே தெருவில் நின்றுகொண்டுதான் அவருடன் பேச முடிந்தது.
“அவரது முகம் முற்றிலும் மாறிப்போய், கட்டிகள் நிறைந்திருந்ததைக் கண்டு நான் மிகவும் கவலையடைந்தேன்” என்கிறார் அவரது மனைவி.
பின்னர், அவரது முகத்தில் தோன்றிய விசித்திரமான வளர்ச்சிகள் மன அழுத்தத்தால் ஏற்பட்டவை என மருத்துவர் ஒருவர் கண்டறிந்தார். இருப்பினும், கதிர்வீச்சு குறித்த அச்சம் மக்களிடையே பரவியதால், பலரும் அவரைத் தவிர்க்கத் தொடங்கினர்.
“அவர் பேருந்தில் ஏறும்போது, அவரை அடையாளம் கண்டுகொள்பவர்கள் உடனடியாகப் பேருந்திலிருந்து இறங்கிவிடுவார்கள்” என்று அவர் நினைவுகூர்கிறார்.
ஒடெசன் இறுதியில் குணமடைந்தார். ஆனால், அவரது குடும்பத்தின் வீடு கதிரியக்க மாசால் பாதிக்கப்பட்டிருந்ததால், அதன் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. எனவே அவர் வேறு இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.
வாழ்நாள் முழுவதும் அவருடன் பழகியவர்களே அவரைத் தவிர்க்கத் தொடங்கினார்கள்.
தனக்குத் தெரிந்த ஒருவருக்குச் சொந்தமான மதுக்கூடத்தில் பானம் அருந்திய சம்பவத்தை ஒடெசன் நினைவுகூர்கிறார்.
“நான் குடித்து முடித்ததும், டம்ளரை மேஜை மீது வைத்தேன். அதன் உரிமையாளர் ஒரு நாப்கினால் டம்ளரைப் பிடித்து எடுத்து, குப்பைத்தொட்டியில் வீசினார். அது என் மனதை காயப்படுத்தியது” என்று அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Norbert Suchanek and Associação das Vítimas do Césio-137 (AV-Césio Archive)
அந்தப் பேரழிவைத் தொடர்ந்து, “நான் கோயானியாவை நேசிக்கிறேன்” என்ற வாசகத்துடன் அரசாங்கம் ஒரு பிரசாரத்தை முன்னெடுத்தது. தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் தினமும் ஒளிபரப்பப்பட்ட இந்தப் பிரசாரம், நெருக்கடியில் சிக்கியிருந்த கோயானியா நகர மக்களுக்கு ஒட்டுமொத்த தேசமும் ஆதரவாக நிற்பதை வெளிப்படுத்தியது.
இந்த விபத்துக்குப் பிறகு, கதிரியக்கப் பொருட்களைக் கண்காணித்தல், கையாளுதல் மற்றும் அகற்றுதல் தொடர்பான சட்டங்கள் பிரேசிலிலும் பிற நாடுகளிலும் திருத்தப்பட்டன.
ஆனால், உயிர் பிழைத்தவர்களின் போராட்டம் அத்துடன் முடிவடையவில்லை. இழப்பீடு கோருதல், உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொள்ளுதல், விபத்துடன் தொடர்புபடுத்தி தங்கள் மீது சுமத்தப்பட்ட சமூகக் களங்கத்தைச் சமாளித்தல் என அவர்களின் போராட்டம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்தது.
ஒடெசன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று உறுதியெடுத்தார். தான் மிகவும் நேசித்த பேருந்து ஓட்டுநர் பணியைக் கைவிட்டு, பாதிக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். அதன் மூலம், கதிர்வீச்சு விபத்தில் உயிர் பிழைத்தவர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கினார்.
“நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராட வேண்டும். உலகில் வேறெங்கும் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். நாங்கள் அனுபவித்த துயரத்தை வேறு யாரும், எங்கும் அனுபவிக்கக் கூடாது” என்கிறார் அவர்.
இன்று, அந்தப் பேரழிவு நிகழ்ந்து ஏறக்குறைய 40 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், எழுபது வயதைக் கடந்துள்ள ஒடெசன், தனது வாழ்க்கையை என்றென்றும் மாற்றியமைத்த அந்தச் சம்பவம் குறித்த அனுபவங்களை எழுதி வருகிறார்.
கோயானியாவிலிருந்து 220 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு சிறிய பண்ணையில், விலங்குகளுடனும் இயற்கையுடனும் நேரம் செலவிட்டு அவர் மன அமைதியைக் கண்டடைந்துள்ளார்.
“நான் பல இன்னல்களைச் சந்தித்திருந்தாலும், இன்று ஆரோக்கியமாகவும் மன அமைதியுடனும் இருக்கிறேன். இறைவனுக்கு நன்றி” என்கிறார் அவர்.
ஒரு காலத்தில், தானும் தனது குடும்பத்தினரும் உயிர் பிழைக்க முடியாது என்று அஞ்சிய ஒருவருக்கு, இன்று கிடைத்திருக்கும் இந்த அமைதி சாதாரணமானதல்ல.
இந்தக் கட்டுரை, பிபிசி உலக சேவையின் ‘அவுட்லுக்’ நிகழ்ச்சியில் இடம்பெற்ற, “ஒளிரும் நீல நிறத் தூள் கதிரியக்கத் தன்மை கொண்டது என்பது எனக்குத் தெரியாது” என்ற நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு