பட மூலாதாரம், SPVelumani/X
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான முடிவுகளால் அதிமுக தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதாக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணியும், நத்தம் விஸ்வநாதனும் இணைந்து எழுதியுள்ள கடிதம் அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவையும், டிடிவி தினகரனையும் மீண்டும் கட்சியில் சேர்ப்பதுடன், கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு மீண்டும் அந்தப் பொறுப்புகளை வழங்க வேண்டுமென்றும் அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளணர்.
அதோடு பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும், கமிட்டி அமைக்க வேண்டுமென்றும் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் வேலுமணி பேசியுள்ளார்.
வேலுமணியும், நத்தம் விஸ்வாநதனும் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று கூறியுள்ளார் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி. கட்சித்தலைமை தங்களை நீக்கினால் தவெகவில் இணையலாம் என்பதற்காகவே வேலுமணி இப்படிப் பேசுவதாக பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.
அதிமுகவை உடைக்க வேலுமணி தரப்பு தயாராகிவிட்டதாகச் சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் துரை கருணா.
ஆனால் தவெகவிற்குச் செல்வதற்கு முடிவெடுத்து விட்டு, அதிமுக தலைமையை அசைத்துப் பார்க்கும் முயற்சியில் வேலுமணி தரப்பு இறங்கியிருப்பதாகச் சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

‘தொடர் தோல்விகளுக்கு காரணம் எடப்பாடி பழனிசாமி’
சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்து எதிர்க்கட்சி அந்தஸ்தையும் அதிமுக இழந்து விட்ட நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த 25 சட்டப்பேரவை உறுப்பினர்கள், தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியமைப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தனர்.
அதன்பின் அவர்களில் 6 பேர் தங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துவிட்டனர்.
ஆனால் தவெக அரசுக்கு ஆதரவளித்த வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலர், அதிமுகவில் இன்னும் தொடர்கின்றனர். இவர்கள் உட்பட தவெகவிற்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள், கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்கள் என 400க்கும் மேற்பட்டவர்களின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். அதேநேரத்தில் இவர்களை கட்சியை விட்டு நீக்கவில்லை.
இந்நிலையில் எஸ்.பி.வேலுமணியும், நத்தம் விஸ்வநாதனும் இணைந்து, எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய ஆகஸ்ட் 9 அன்று 6 பக்கக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். அதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, இருவரும் கடுமையாக விமர்சித்து பல கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணமென்று அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் டிடிவி தினகரனுடன் கூட்டணி வைக்க அமித்ஷா நேரில் வலியுறுத்தியும், ஓ.பன்னீர் செல்வம் அதை ஒப்புக்கொண்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளாததால் 42 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்ததாகவும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்காததால் திமுக கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதாகவும் அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
”2021, 2026 சட்டமன்ற பொது தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் ஆகிய 3 தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புகள் இருந்தும், தாங்கள் எடுத்த தவறான தன்னிச்சையான முடிவுகளால், தொடர் தோல்விகளை சந்தித்து அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மிகுந்த சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவதை் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, நீங்கள் எடுத்த தவறான முடிவுகளால், 47 சட்டமன்ற உறுப்பினர்களில், 25 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது தவறு என்பதை சுட்டிக்காட்டினர். தங்களது போக்கால் அதிமுகவினர் மாற்றுக்கட்சியில் கூட்டம் கூட்டமாக இணைந்து வருகின்றனர்.
பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த கட்சி நிர்வாகிகளை எந்தவித காரணங்களுமின்றி கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டு புதியவர்களை நியமித்து வருவது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. இது அதிமுகவை மேலும் பலவீனப்படுத்தும்.” என்று அந்தக் கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் அதே பொறுப்புகளில் நியமிக்க வேண்டும் என்றும் சசிகலா மற்றும் டிடிவி.தினகரனையும், அதேபோல கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சியில் சேர்ந்தவர்களிடமும் பேசி கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்றும் அவர்கள் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
”செயற்குழு, பொதுக்குழுவில் உங்களுக்கு எதிராக யாரும் மாற்று கருத்தைக் கூறக்கூடாது எனச் செயல்படுகிறீர்கள். அதிமுக எந்த நிலைக்குத் தாழ்ந்தாலும் நான் சொல்வதை மட்டும்தான் கேட்க வேண்டும் என்ற மனப்பான்மையில் இருக்கிறீர்கள்.” என்றும் அந்தக் கடிதத்தில் அவர்கள் விமர்சித்திருந்தனர்.
இந்தக் கடிதம் வெளியான பின்பு, ஆகஸ்ட் 9 அன்று தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி மீண்டும் வெளிப்படையாக பல விஷயங்களைப் பேசினார்.
அப்போது, ”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவதற்கும், கட்சியின் பொதுச்செயலாளர் ஆக்குவதற்கும் நான், தங்கமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.சி.வீரமணி, அன்பழகன் உள்ளிட்டோர் பணியாற்றினோம். இப்போதும் எங்கள் பொதுச்செயலாளர் அவர்தான். அவருக்கும் எங்களுக்கும்தான் பிரச்னை. அது ஆரோக்கியமான பிரச்னை. கட்சி நன்றாயிருக்க வேண்டுமென்றுதான் நாங்கள் மாற்றுக்கருத்தை முன் வைக்கிறோம். நம்மால் ஏன் ஆட்சிக்கு வரமுடியவில்லை என்பதை விவாதிக்கவே பொதுக்குழுக் கூட்டம் வைக்கச் சொல்கிறோம். கமிட்டி அமைக்கச் சொல்கிறோம்.” என்றார்.
தவெகவை ஆதரித்ததற்கான காரணம் குறித்துப் பேசிய வேலுமணி, ”திமுகவுக்கு எதிராகத்தான் நாங்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்தோம். அதன்பின்பு பொதுச்செயலாளரைச் சந்தித்து கட்சி ஒன்றாக வேண்டுமென்றுதான் வலியுறுத்தினோம். இந்தக் கட்சி நன்றாயிருக்க வேண்டுமெனில் ஆரோக்கியமான விவாதம் நடக்க வேண்டும். திமுக எதிர்ப்பு என்ற நிலையில் தவெகவை ஆதரித்தற்காக எங்கள் மீது நடவடிக்கை என்றால், திமுகவுடன் சேரலாம் என்ற முடிவு எடுத்தவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது.” என்றார்.
பட மூலாதாரம், X/SP Velumani
வேலுமணி, நத்தம் விஸ்வநாதனுக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி தந்த பதில்
இந்தக் கடிதம் வெளியாகி, வேலுமணியின் கருத்தும் ஊடகங்களில் வெளியான நிலையில், அதற்கு பதில் தரும் வகையில் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், ”உள்கட்சி விவகாரங்கள் குறித்துப் பொதுச்செயலாளரிடம் நேரில் விவாதிப்பதற்குப் பதிலாக, ஊடகங்கள் வாயிலாகவும் பொதுவெளியிலும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் செயல். வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதனின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை.” என்றார்.
”எடப்பாடி பழனிசாமியை சட்டப்பேரவை குழு தலைவராக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு மனதாக தேர்வு செய்த நிலையில், ஏன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முன் வைத்தனர். மேலும், திருமாவளவன் முதலமைச்சராவதற்கு நாங்கள் திமுகவோடு பேசிவிட்டோம் என்று கூறினர். எஸ்.பி.வேலுமணி பொதுவெளியில் தொடர்ந்து பேட்டி கொடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி.
திமுகவுடன் கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி எந்த நேரத்திலும் கூறவில்லை, எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் சொல்லக்கூடிய குற்றச்சாட்டில் ஒரு துளி கூட உண்மையில்லை என்று கூறிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ”400-க்கும் மேற்பட்டவர்களை நீக்கியதாக கூறுகிறார்கள், இயக்கத்திற்கு துரோகம் செய்தவர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
சசிகலாவையும், தினகரனையும் மீண்டும் சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமிதான் முடிவெடுப்பார் என்று கூறிய அவர், தற்போது கட்சியில் உள்ள விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி விரைவில் முடிவெடுப்பார் என்றும் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 10 அன்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறிய கருத்துகளை கடுமையாக விமர்சித்து பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர், இந்தக் கருத்துகளைக் கூற அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று தெரிவித்தனர்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே, அவரால் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி என்று சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார்.
பட மூலாதாரம், Facebook/SS Krishnamoorthy
அதிமுகவில் இந்தக் கருத்து மோதல்கள் வலுத்து வரும் நிலையில், வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் கூறி வரும் தொடர் குற்றச்சாட்டுகளும், கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும், பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும், கமிட்டி அமைக்க வேண்டுமென்ற கோரிக்கைகளும், எடப்பாடி பழனிசாமியை தனிமைப்படுத்தும் முயற்சியா அல்லது தலைமையை மாற்றுவதற்கான முன் நகர்வா என்ற கேள்விகள் எழத் துவங்கியுள்ளன.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் துரை கருணா, ”கட்சியை உடைப்பதற்கு வேலுமணி தரப்பு தயாராகிவிட்டது. அதிமுக முன்பு ஜா அணி, ஜெ அணி என்று பிரிந்ததைப் போன்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி, கட்சியைக் கைப்பற்றும் முயற்சியாகத்தான் இது தெரிகிறது. இனிமேல் சட்டப்பேரவையில் தனி அணியாக வேலுமணி தரப்பு செயல்படும். போட்டி பொதுக்குழு நடத்துவார்கள், சின்னத்தை முடக்கப் பார்ப்பார்கள்.” என்றார்.
”எடப்பாடி பழனிசாமி தலைமை இருக்கும் வரை இனிமேல் அதிமுக மீள்வது கடினம். இப்போதைக்கு தலைமை மாற்றம் மிக அவசியம். அதுவும் தனியொரு தலைமையாக இல்லாமல் கம்யூனிஸ்ட் பாணியில் பொலிட் பீரோ போன்று நான்கைந்து பேர் கொண்ட ஒரு குழுவாகச் செயல்பட்டால் மட்டுமே அதிமுகவை ஓரளவுக்கு மீட்க முடியும். அதிலும் சசிகலா, தினகரனை சேர்ப்பதும் அவசியம்.” என்றார் துரை கருணா.
இந்தக் கருத்தை மறுக்கும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், ”இது தவெகவிற்குச் செல்வதற்காக வேலுமணி தரப்பு எடுக்கும் முன் முயற்சிதான். தங்கள் கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி கட்டாயம் ஏற்கமாட்டார் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். தெரிந்தே இந்தக் கருத்தை முன் வைக்கின்றனர்.” என்றார்.
”வேலுமணி தரப்பு வைக்கும் கோரிக்கைதான், பெரும்பான்மை அதிமுக தொண்டர்களின் கோரிக்கை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதற்கு வாய்ப்பேயில்லை. இடைத்தேர்தலுக்கு எதிராக அதிமுக தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்து வைத்திருக்கிறது. அதனால் இடைத்தேர்தல் இப்போதைக்கு நடப்பதாகத் தெரியவில்லை. அதனால் அதிமுகவிலிருந்து தவெகவிற்கு எம்.எல்,ஏ.க்கள் தாவுவதில் வேகம் குறைந்துள்ளது. இடைத்தேர்தல் விரைவில் வருவதாக இருந்தால் இவர்களும் தவெகவில் சேர்ந்திருப்பார்கள்.” என்றார் ப்ரியன்.

கட்சியை விட்டு நீக்க வைப்பதற்காக வேலுமணி தரப்பு இப்படிச் செய்கிறதா?
கடந்த ஆகஸ்ட் 9 ஞாயிறன்று தொண்டாமுத்தூரில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் வேலுமணிக்குப் பதிலாக எடப்பாடி பழனிசாமியால் கோவை மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட செ.ம.வேலுசாமியும் பங்கேற்றிருந்தார். அவருக்கு முன்பாகத்தான், ”எங்களுக்கும் பொதுச்செயலாளருக்கும்தான் பிரச்னை. பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும், கமிட்டி அமைக்க வேண்டும்.” என்று வேலுமணி பேசியிருந்தார்.
இதுபற்றி பிபிசி தமிழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த செ.ம.வேலுச்சாமி, ”வேலுமணி இப்போதும் எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.தான். நான்தான் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதில் அவர் பேசியது அவரின் கருத்து. அவர்கள் எழுதிய கடிதத்தில் இருந்த கருத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” என்றார்.
”இவர்கள் பொதுச்செயலாளரை நேரில் சந்தித்துப்பேச வேண்டுமே தவிர, இப்படி கடிதம் எழுதி பொதுவெளியில் வெளியிடுவது, பகிரங்கமாக கூட்டத்தில் தலைமையை எதிர்த்துப்பேசுவது சரியில்லை. இப்படி ஏதாவது பேசினால் கட்சித்தலைமை தங்களை கட்சியை விட்டு நீக்கும், அதன்பின்பு கட்சி சார்பற்ற எம்எல்ஏவாகி தங்கள் விருப்பப்படி தவெகவிற்கு ஆதரவளிக்கலாம் என்று நினைத்துப் பேசலாம்.” என்றார் செ.ம.வேலுச்சாமி.
ஆனால் அதிமுகவிலிருந்து வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோரை கட்சித்தலைமை நீக்கினாலும், அவர்கள் தவெகவில் சேரமுடியாது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். அவர்கள் கட்சி சார்பற்ற எம்.எல்.ஏ.வாக சட்டப்பேரவையில் தொடரலாம், ஆளும்கட்சியை ஆதரிக்கலாமே தவிர, நேரடியாக தவெகவில் சேர்ந்தால் அவர்கள் பதவி நிலைக்காது என்றும் அவர் மேலும் விளக்கினார்.
இதே கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான பொள்ளாச்சி ஜெயராமனையும் எஸ்.பி.வேலுமணி பகிரங்கமாக விமர்சித்திருந்தார். அப்போது பேசிய வேலுமணி, ”பொள்ளாச்சி ஜெயராமன் சில தவறான வேலைகளைச் செய்கிறார். அவரைப் பற்றியும், அவர் மகனைப் பற்றியும் தவறாக எதுவும் பதிவிடக்கூடாது என்று ஐடி விங்கிற்கு சொல்லியிருக்கிறேன்.” என்றார்.
”பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டிற்கு நான் சென்றபோது, அங்கே எனக்கு அவமானம் ஏற்பட்டது. வயது முதிர்வு இல்லாமல் அவர் நடந்து கொள்கிறார். அவர் மகனைப் பற்றி ஒரு பிரச்னை எழுந்தபோது நான்தான் 25 ஆயிரம் பெண்களைக் கூட்டிச்சென்று அவருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தேன். ஆனால் அந்த பையன் தவறாகச் செல்லும் சூழ்நிலை இருந்தது. ” என்றும் வேலுமணி பேசினார்.
இதுபற்றி பிபிசியிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், ”அவர் அதிகாரம் படைத்தவர். நான் ஒரு சாதாரண தொண்டன்தான். நான் என்ன தவறு செய்தேனேன்று தெரியவில்லை. தவெகவை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக போகிற போக்கில் அவர்கள் பேசுகிறார்கள். அப்படிப்பேசினால் கட்சித் தலைமை தங்கள் மீது நடவடிக்கை எடுக்குமென்று அவர்கள் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. மற்றபடி என்னைப் பற்றி சொன்னதற்கு நான் எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. இதில் கட்சித்தலைமை விரைவில் முடிவெடுக்கும்.” என்றார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு