டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் நெல்லை அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி வெற்றி பெற்றது.
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்தது.
இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரின் 12-வது லீக் போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெற்றது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நெல்லை அணி பவுலிங் தேர்வு செய்தது.
182 ரன் குவித்த திருச்சி
அதன்படி, முதலில் ஆடிய திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ் குமார் அரை சதம் கடந்து 58 ரன்கள் எடுத்தார்.
7வது விக்கெட்டுக்கு இணைந்த ராஜ்குமார், அந்தோனி தாஸ் ஜோடி அதிரடியாக ஆடி 57 ரன்கள் சேர்த்தனர். ராஜ்குமார் 19 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 45 ரன்கள் குவித்தார்.
நெல்லை அணி சார்பில் சச்சின் ராதி 3 விக்கெட்டும், ஹரிஷ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நெல்லை அணி களமிறங்கியது. முதல் ஓவரில் 2 விக்கெட்களை இழந்து திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
டேவிட்சன் அதிசயராஜ் அசத்தல்
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் முகிலேஷ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 45 பந்தில் 63 ரன் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், நெல்லை அணி 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் திருச்சி அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் திருச்சி அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.
திருச்சி அணி சார்பில் டேவிசன் அதிசயராஜ் 4 விக்கெட்டும், ஈஸ்வரன், சஞ்சய் யாதவ், ராஜ்குமார் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.