10
இலங்கையின் பாரம்பரிய அரசியல் உத்திகளுக்கும் கூட்டணி கணிப்புகளுக்கும் அப்பாற்பட்டு, நாட்டின் எதிர்காலத் தேர்தல்களில் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ள இளம் தலைமுறையினரை நோக்கி கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும். ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைப்பது மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்காது. சுமார் 80 இலட்சம் Gen Z மற்றும் புதிய நூற்றாண்டுத் தலைமுறை வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறுவதே எமது முதன்மை இலக்காக இருக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை (30) ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில்,
ஐ.தே.க. மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளும் இணைந்தாலே தேர்தலில் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற பரவலான எண்ணத்தை நான் நிராகரிக்கின்றேன்.
இவ்விரு கட்சிகளும் இணைந்தால் வெற்றி நிச்சயம் என்று சிலர் கணக்கு போடுகிறார்கள். ஆனால், இன்றைய அரசியல் சூழல் முற்றிலும் மாறிவிட்டது. வெறும் கூட்டணிகளையும் பாரம்பரிய வாக்கு வங்கிகளையும் மட்டுமே நம்பி இனி எந்தக் கட்சியும் தேர்தலில் வெல்ல முடியாது.
இலங்கையின் மொத்த வாக்காளர்களில் Gen Z அதாவது 1990-களின் இறுதியில் இருந்து 2010-களின் தொடக்கம் வரை பிறந்தவர்கள் மற்றும் புதிய நூற்றாண்டு தலைமுறையினரின் அதாவது 1980-களின் தொடக்கம் முதல் 1990-களின் இறுதி வரை பிறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 80 இலட்சத்தை எட்டுகிறது.
இந்த 80 இலட்சம் இளம் வாக்காளர்களில் பெரும்பாலோர் இன்னமும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தங்களது ஆதரவை உறுதி செய்யாமல் நடுநிலை வகிக்கின்றனர். வரவிருக்கும் தேர்தல்களில் இவர்களின் முடிவே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும்.
குறிப்பாக, 2022-ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, நாட்டின் இளைஞர்கள் பாரம்பரிய அரசியல் அமைப்புகள் மற்றும் தலைவர்கள் மீது கடுமையான ஏமாற்றமும் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.
இலங்கை செய்திகள்
இலங்கை மட்டுமல்லாது பங்களாதேஷ், நேபாளம் மற்றும் செர்பியா போன்ற நாடுகளிலும் இளைஞர்கள் முன்னெடுத்த மக்கள் போராட்டங்கள் உலக அரசியல் போக்கையே மாற்றியமைத்துள்ளன. உலகளவில் இளைஞர்களின் குரல் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளது.
65 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி, காலத்தின் தேவைக்கேற்ப தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக, புதிய நூற்றாண்டு தலைமுறையினர் மற்றும் Gen Z ஆகிய இரண்டு புதிய பிரிவுகளை உருவாக்கி இளைஞர்களுடன் நேரடியாக உரையாடல்களைத் தொடங்க வேண்டும்.
பாரம்பரியமாக கிராமங்கள் தோறும் கட்சி அமைப்புக் கிளைகளை நிறுவும் பழைய முறைகளைக் கைவிட்டு, நவீன டிஜிட்டல் தளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் நேரடியாக மக்களைச் சென்றடையும் புதிய அரசியல் முறைகளை இக்குழுக்கள் கையாள வேண்டும்.
இளம் வாக்காளர்களை மையமாகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அடையாளத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியமானது. இளைஞர்களை உள்ளடக்காத எந்தவொரு அரசியல் நகர்வும் எதிர்காலத்தில் வெற்றிபெற முடியாது. பாரம்பரிய அரசியல் வழிகளிலிருந்து விலகி, இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பக் கட்சியை மறுசீரமைப்பதே ஐ.தே.க.வின் எதிர்கால மூலோபாயமாக இருக்கும் என்றார்.


